×

முறையான திட்டமிடல் இல்லாததால் சிறு மழைக்கே தாக்குப்பிடிக்காத உடன்குடி அனல் மின்நிலையம் : ஜேசிபி, லாரிகள் மூழ்கும் அபாயம்

உடன்குடி: முறையான திட்டமிடல் இல்லாமல் அமைக்கப்பட்டு வரும் உடன்குடி அனல்மின் நிலையம் சாதாரண மழைக்கே வெள்ளத்தில் சிக்கியுள்ளது. அனல் மின்நிலைய வளாகத்தில் ஆங்காங்கே நிறுத்தி வைக்கபட்டிருக்கும் லாரி, ஜேசிபி உள்ளிட்ட கனரக வாகனங்களும் மழைநீரில் சிக்கியுள்ளன. தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியில் கடந்த 2012 பிப்ரவரி 24ம் தேதி உடன்குடி அனல்மின் நிலைய திட்டத்தை தமிழக அரசு அமைக்கும் என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.  800 மெகாவாட் அனல்மின் நிலையத்திற்கு 2012 மார்ச் 27ம் தேதி தமிழ்நாடு மின்தொடர் கழகம் ஒப்புதல் அளித்தது. அதன்பின், 2013 பிப்ரவரி 1ம் தேதி 800 மெகாவாட்டிற்கு பதிலாக 680 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்படும் என கூறி வந்த நிலையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்கியது. பல்வேறு நிர்வாக குழப்பங்களுக்கு இடையே இப்பணிக்கு புதிய டெண்டர் விடப்பட்டது. ஆனால் அனல்மின் நிலையம் அமைவதற்கென 305 ஹெக்டேர் புறம்போக்கு நிலம், 175 ஹெக்டேர் பட்டா நிலம் என மொத்தம் 480 ஹெக்டர் நிலம் கையப்படுத்தப்பட்டு டிஎன்இபி என கற்கள் நடப்பட்டன.

இதனையடுத்து 7ஆயிரத்து 359 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அனல்மின் நிலையத்திற்கு கடந்த ஆண்டு ஜனவரி 29ம் தேதி சென்னையில் இருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொளி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். அனல் மின்நிலையம் அமையுமிடம் நீர்ப்பிடிப்பு பகுதியாகும். திருச்செந்தூர் எல்லப்பநாயக்கன்குளத்தில் இருந்து தண்ணீர் மறுகால் பாய்ந்து குலசேகரன்பட்டினம் தருவைகுளம் வரும் நீர்வழி தடத்தில்தான் அனல்மின் நிலையத்திற்குரிய முதற்கட்ட பணிகள் நடந்து வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இரவு, பகலாக பணியாற்றி வருகின்றனர். இவற்றில் தரைமட்டத்தை உயர்த்தும் பணி, சீரமைக்கும் பணிகள் ஒருபுறம் நடந்து வந்தாலும், மறுபுறம் கட்டுமானப் பணிகளும் ஜரூராக நடந்து வந்தது. ஆனால், அனல்மின் நிலையம் அமையவிருக்கும் பகுதியில் சுமார் 10அடி ஆழத்திற்கு குழி தோண்டினாலே நீர் ஊற்று எடுக்கும் அளவிற்கு நீர்ப்பிடிப்பு இடமாகும்.

தற்போது பரவலாக பருவமழை பெய்ததால் அனல்மின்நிலைய வளாகத்தினுள் அதிகளவில் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. ஆனால், வளாகத்தினுள் தேங்கி உள்ள மழைநீரை அகற்ற முடியாமல் அரசு அதிகாரிகளும், ஒப்பந்ததாரர்களும் திணறி வருகின்றனர். அங்கு பணிபுரிபவர்கள் பெரும்பாலும் வெளியூர் ஆட்களாக இருப்பதால் இந்த மணலின் தன்மை அறியாமல் லாரிகள், ஜேசிபி வாகனத்தை வழக்கம் போல் நிறுத்தி வைத்து விட்டுச் சென்றுள்ளனர். தற்போது மழைநீர் அதிகளவில் தேங்கியுள்ளதால் வாகனங்களை எடுக்க முடியாமல் சிக்கியுள்ளன. தற்போது சாதரண மழைக்கே வெள்ளத்தில் சிக்கியுள்ள உடன்குடி அனல்மின்நிலையம் குறித்து வலைதளங்களில் ஏராளமானவர்கள் விமர்சனங்கள் செய்து வருகின்றனர்.

ஆய்வு நடத்தவில்லை

தருவைக்குளம் பகுதி நீர்ப்பிடிப்பு இடம் என்பது குறித்து முறையான ஆய்வுகள் ஏதும் நடத்தப்படாதது தான் இந்நிலைக்கு காரணம் என கூறப்படுகிறது. மேலும் பணிகளுக்கென ராட்சத லாரிகளில் ஏராளமான இரும்பிலான பைப்புகள், கம்பிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. அவைகளும் மழைநீரில் தரையோடு தரையாக கிடக்கின்றன. நீண்ட நாட்கள் தண்ணீரில் கிடந்தால் அதன் உறுதி தன்மை எவ்வாறு இருக்கும் என்பது கேள்விக்குறி. அனல்மின்நிலையத்தில் பணிபுரியும் வேலையாட்கள் தங்க அதன் பகுதியிலேயே தற்காலிக குடியிருப்புகள், செட்டுகள் அமைத்துள்ளனர். மழைநீர் தேங்கி கிடக்கும் பகுதியிலேயே அவர்களும் தங்கியுள்ளனர். வேலை இல்லாததால் அங்கிருக்கும் பணியாளர்கள்  பிளாஸ்டிக் கேன்களால் ஆன படகுகள் செய்து அதன் மூலம் அனல்மின்நிலைய வளாகத்தினுள் சென்று மீன்பிடித்து தங்கள் பொழுதை போக்கிவருகின்றனர்.


Tags : power station ,power plant ,JCB , Due to lack of proper planning, short-haul immediate, power plant
× RELATED கூடங்குளம் முதலாவது அணுமின்...