×

கிரீடத்தில் பதிக்கப்பட்ட ரத்தினம்’ ஐசிஎப் தொழிற்சாலையை மூடும் பேச்சுக்கே இடமில்லை : ரயில்வே அமைச்சர் அறிவிப்பு

புதுடெல்லி: ‘‘சென்னை ஐசிஎப் ரயில் பெட்டி தொழிற்சாலை, ‘கிரீடத்தில் பதிக்கப்பட்ட ரத்தினம்’. அதை மூடும் பேச்சுக்கே இடமில்லை,’’ என மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் மாநிலங்களவையில் தெரிவித்தார். சென்னை பெரம்பூர் ரயில் பெட்டி உற்பத்தி தொழிற்சாலை (ஐசிஎப்) தொடர்பாக மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் கேள்வி நேரத்தில் நேற்று பதிலளித்தார். அவர் கூறியதாவது: சென்னை ஐசிஎப்.பின் சாதனைகளை எண்ணி மத்திய அரசு பெருமை கொள்கிறது. உள்நாட்டு தொழில்நுட்பத்தில், மணிக்கு 160 கிமீ வேகத்தில் செல்லக்கூடிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை சிறப்பாக தயாரித்தது சென்னை ஐசிஎப்.பின் சாதனைகளில் குறிப்பிடத்தக்கதாகும். அதன் பொறியாளர்கள், டெக்னீசியன்கள் சாதனைக்கு சொந்தக்காரர்கள். இது கிரீடத்தில் பதிக்கப்பட்ட ரத்தினமாக ஜொலிக்கிறது.

எனவே, சென்னை ஐசிஎப் ரயில் பெட்டி தொழிற்சாலையை மேலும் நவீனமாக்கி, மேம்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் அரசு எடுக்கும். அதை மூடுவதற்கான பேச்சுக்கே இடமில்லை. இவ்வாறு அவர் கூறினார். பின்னர், உறுப்பினர்களின் துணை கேள்விகளுக்கு அவர் பதிலளித்து பேசுகையில், ‘‘புல்லட் ரயில் திட்டம் உட்பட, நாடு முழுவதும் பல்வேறு ரயில் திட்டப் பணிகள் பரிசீலனையில் உள்ளன. அவற்றை நிறைவேற்றுவது பற்றி சரியான நேரத்தில் முடிவு எடுக்கப்படும். அப்போது அவையில் நிச்சயம் தெரிவிப்போம். சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு, உலகிலேயே அனைத்து ரயில் நெட்வொர்க்கையும் மின்மயமாக்கிய ஒரே நாடாக இந்தியாவை மாற்றுவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக டீசல் இன்ஜின்கள் மின்மயமாக்குவதற்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது,’’ என்றார்.

விபத்து குறைந்துள்ளது

மாநிலங்களவையில் ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் கேள்வி நேரத்தில் பதிலளிக்கையில், ‘‘கடந்த 2.5 ஆண்டுகள் ரயில்வே துறை வரலாற்றில் பாதுகாப்பான காலகட்டமாக கருதப்படுகிறது. இந்த காலகட்டத்தில் விபத்துகளின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்துள்ளது. பயணிகள் பாதுகாப்புக்காகவும், உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்,’’ என்றார்.

Tags : ICF ,talks ,closure ,factory ,Railway Minister Railway minister , Railway minister announces closure , gemstone ICF factory , crown
× RELATED 250 ரயில்வே ஊழியர்கள் கைது