×

ஐஐடி மாணவர்கள் தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க கோரி பொதுநல மனு : உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை

சென்னை: சென்னை ஐஐடியில் மாணவர்களின் தற்கொலைகள் தொடர்பான வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி உயர் நீதிமன்றத்தில்  பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது. கேரளாவை சேர்ந்த லோக் தந்தரிக் யுவ ஜனதாதள கட்சியின் தேசிய தலைவர் சலீம் மடவூர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: சென்னை ஐஐடியில் படித்து வந்த கேரள மாணவி பாத்திமா லத்திப் கடந்த 9ம் தேதி விடுதியில் தூக்கில் தொங்கி மரணமடைந்தார். மன அழுத்தத்தில் பாத்திமா இருந்ததாக சக மாணவிகள் தெரிவித்ததாக விடுதி காப்பாளர் லலிதா தேவி கொடுத்த புகாரின் அடிப்படையில், கோட்டூர்புரம் போலீசார் சந்தேக மரணம் என்ற பிரிவில் வழக்கு பதிவு செய்தனர்.
பின்னர் வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு விசாரணை தொடங்கியுள்ளது. இந்நிலையில், பாத்திமா லத்தீப்பின் பெற்றோர் தமிழக, கேரளா காவல்துறையிடம் உரிய விசாரணை கோரி புகார் அளித்துள்ளனர். நாங்களும் பாத்திமா லத்திப் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி நவம்பர் 18ல் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

கடந்த 2006 முதல் சென்னை ஐஐடியில் 14 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். ஆந்திராவை சேர்ந்த 5 பேர், தெலங்கானாவை சேர்ந்த 3 பேர், தமிழகத்தை சேர்ந்த 2 பேர், கேரளாவை சேர்ந்த 3 பேர் உள்ளிட்ட 14 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். குறிப்பாக, ஜாதி ரீதியாகவும், மத ரீதியாகவும், ஆங்கில புலமை பெற்றவர்களாலும்  இந்த மாணவர்கள் துன்புறுத்தப்பட்டுள்ளார்கள். பட்டியலின மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அதிகளவில் துன்புறுத்தல்களும், கொடுமைகளும் நடந்து வருகிறது. நாடு முழுவதும் உள்ள ஐஐடிகளில் சுமார் 70 வழக்குகள் இதேபோன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சரே பாராளுமன்றத்தில் பேசி இருகிறார்.

சில பேராசிரியர்கள் மாணவர்களுக்கு அதிக தொந்தரவு தருகிறார்கள். இதுகுறித்து ஐஐடி டீனிடம் புகார் கொடுத்தும் உரிய நடவடிக்கை இல்லை. எனவே, இந்த தற்கொலைகள் தொடர்பாக தமிழக அரசு கட்டுப்பாட்டிலுள்ள சிபிசிஐடி போலீசார் விசாரித்தால் வழக்கின் உண்மைத்தன்மை வெளியே வராது. எனவே, ஐஐடி மாணவ, மாணவிகள் தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்குமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார். இந்த மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வர உள்ளது.

கடந்த 2006 முதல் இதுவரை சென்னை ஐஐடியில் 14 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். நாடு முழுவதும் ஐஐடிகளில் இதுபோல் 70 வழக்குகள் பதிவாகியுள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

Tags : hearing ,CBI ,IIT ,probe ,High Court , CBI probe ,suicide case , IIT students,High Court hearing soon
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான...