×

கொசுக்களால் ஏற்படும் மர்ம காய்ச்சலை தடுக்க ஏழை மக்களுக்கு நைலான் துணியிலான கொசுவலை

* செங்கல்பட்டு மாவட்டம் தொடக்க விழாவில் முதல்வர் எடப்பாடி அறிவிப்பு

சென்னை: “கொசுக்களால் ஏற்படும் மர்ம காய்ச்சலை தடுக்க ஏழை மக்களுக்கு நைலான் துணியிலான கொசுவலை வழங்கப்படும்” என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். புதிதாக தோற்றுவிக்கப்பட்ட செங்கல்பட்டு மாவட்டம் தொடக்க விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. புதிய மாவட்டம் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்து முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது: அதிமுகவுக்கு, தில் இருக்கிறது, தெம்பு இருக்கிறது, திராணி இருக்கிறது, துணிவு இருக்கிறது. மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தலை அறிவித்தால் அதை எதிர்கொள்ளக்கூடிய வலிமை  அதிமுகவிற்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் இருக்கிறது. உள்ளாட்சி அமைப்பானது, மக்களுக்கும் அரசுக்கும் பாலமாக இருப்பது. ஒட்டுமொத்த தமிழ் மக்களுடைய அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்கின்ற அமைப்பு. புதிதாக மாவட்டங்கள் தொடங்குவதற்கும் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. இதற்காக 2018ம் ஆண்டில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மாநிலத் தேர்தல் ஆணையம் கேட்கும் உதவிகளை அரசு செய்து கொண்டிருக்கிறது. மாநிலத் தேர்தல் ஆணையத்தைப் பொறுத்தவரைக்கும், சரியான முறையில் தேர்தல் நடைபெற வேண்டுமென்று எண்ணி, வார்டு வரையறை முழுமையாக செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மழைக்காலங்களில் பெய்கின்ற மழைநீர் ஆங்காங்கே தேங்கி வருவதால் கொசு அதிகமாக உற்பத்தியாகி, மக்களுக்கு மர்ம காய்ச்சல் வருகிறது. அதிலிருந்து மக்களைக் காப்பாற்றுவதற்காக அதிமுக அரசு ஏழை மக்களுக்கு கொசுவலை வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தும். நைலான் துணியிலான அற்புதமான கொசுவலையை அரசு ஏழை மக்களுக்கு வழங்கும். அனைத்து மக்களுக்கும் கொடுக்க வேண்டுமென்று என்று சிலர் கூறினார்கள். அதையும் அரசு விரைவில் பரிசீலிக்கும். தற்போது ஏழை மக்களுக்கு அந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தும். பல்லாண்டு காலமாக செங்கல்பட்டைச் சேர்ந்த மாவட்ட மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். ஆகவே, காஞ்சிபுரம் மாவட்டத்தைப் பிரித்து செங்கல்பட்டு மாவட்ட நகரத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை தொடங்கியிருக்கிறோம். இந்தப் பகுதி வேளாண் மக்கள் நிறைந்த பகுதி, தொழிற்சாலைகள் நிறைந்த பகுதி, இந்த அரசு எப்போதும் இந்த மாவட்டத்துக்கு துணை நிற்கும். இவ்வாறு அவர் பேசினார்.


Tags : mosquitoes , Nylon cloth mosquitoes , poor people, prevent mosquito fever
× RELATED டெங்கு கொசுவை ஒழிக்க நடவடிக்கை