×

சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்காத வகையில் மின்சாரத்தில் ஓடும் 100 ஆட்டோ : முதல்வர் எடப்பாடி துவக்கி வைத்தார்

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த அக்டோபர் மாதம் துபாய் சென்றார். அப்போது, இந்திய துணை தூதரகம் மற்றும் தொழில் தலைவர்கள் கூட்டமைப்பு  ஆகியோருடன் இணைந்து நடத்தப்பட்ட முதலீட்டாளர் சந்திப்பில், பெட்ரோல் ஆட்டோக்களை சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்சார ஆட்டோக்களாக மாற்றி இயக்கும் திட்டத்திற்காக ரூ.100 கோடி முதலீட்டில், சுமார் 5,000 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், அந்நாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செயல்படுத்தும் விதமாக, பெட்ரோல் ஆட்டோக்களை சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்காத மின்சாரத்தில் இயங்கும் ஆட்டோக்களாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சென்னையில் 100 எம்-எலக்ட்ரிக் ஆட்டோக்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக துவக்கி வைக்கும் அடையாளமாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமை செயலகத்தில் நேற்று 4 எம்-எலக்ட்ரிக் ஆட்டோக்களை கொடியசைத்து துவக்கி வைத்தார். எலக்ட்ரிக் ஆட்டோக்களை ஒருமுறை முழுமையாக மின்னேற்றம் செய்வதன் மூலம் சுமார் 100 கிலோ மீட்டர் தூரம் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆட்டோக்களில் சிசிடிவி கேமரா, ஜிபிஎஸ் வசதி, ஆபத்து பொத்தான் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த ஆட்டோக்களை Mauto Pride என்ற செல்போன் ஆப் மூலம் பொதுமக்கள் முன்பதிவு செய்து கொள்ள முடியும்.


Tags : CM , 100 Auto, CM launches inaugurating, electricity ,polluting the environment
× RELATED குமரி மாவட்டத்தில் கடந்த 24 மணி...