×

தமிழகத்தில் நடத்தப்பட உள்ள உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்குகள் விரைவில் விசாரணை : தலைமை நீதிபதி அறிவிப்பு

புதுடெல்லி: தமிழக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து மனுக்கள் மீது விரைவில் விசாரணை மேற்கொள்ளப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என வழக்கறிஞர் ஜெய் சுகின் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதை  விசாரித்த நீதிமன்றம், ‘டிசம்பர் 13ம் தேதிக்குள் தேர்தல் நடத்துவது தொடர்பான அறிவிப்பு பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும். இதில் மறுவரையறை பணிகள் அனைத்தையும் தேர்தல் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு நடத்தப்பட வேண்டும்.’ என கடந்த 18ம் தேதி உத்தரவிட்டது. இந்த நிலையில், திமுக சார்பில் நேற்று முன்தினம் உச்ச நீதிமன்றத்தில் ஒரு புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பாணையை வெளியிடுவதற்கு முன்பு, தொகுதி மறுவரையறை பணியை முழுமையாக முடிக்க வேண்டும். இதில் தேர்தல் சட்ட விதிகள் அனைத்தும் பின்பற்றப்பட வேண்டும். இது குறித்து தமிழக அரசு மற்றும் மாநில தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்,’ என கோரிக்கை விடப்பட்டிருநத்து.

இந்தவழக்கில் திமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வில் நேற்று ஒரு கோரிக்கை வைத்தார். அதில், “தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான  தொகுதிகளில் மறுவரையறை பணிகள் முழுமையாக முடிக்கப்படவில்லை. இந்த நிலையில் தேர்தல் அறிவிப்பாணை பட்டியல் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட்டு மறுவரையறை பணிகளை முழுமையாக விரைந்து முடிக்க தமிழக அரசு மற்றும் மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்,’’ என கேட்டுக் கொண்டார். இதேபோல் திமுக சார்பில் ஆஜரான மற்றொரு வழக்கறிஞர் அமித் ஆனந்தும் ஒரு கோரிக்கை வைத்தார். அதில், “உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ஆர்எஸ்.பாரதி சார்பில் ஒரு மனு, கடந்த 2016ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தும் போது 1991ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை அடிப்படையில் வாக்காளர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது என்பது தவறான ஒன்றாகும். இதில் 2011ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தான் வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும். ஆனால், இதுநாள் வரை இந்த வழக்கில் இறுதி உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படாமல் நிலுவையில் உள்ளது. அதனால் வழக்கை விரைந்து விசாரித்து உத்தரவிட வேண்டும்,’ என தெரிவித்தார்.

இதேப்போல் வாக்காளர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்திரா, நீதிபதிகள் முன்னிலையில் ஒரு கோரிக்கை வைத்தார். அதில்,”தமிழகத்தில் தற்போது புதியதாக பிரிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் அனைத்திலும் மறுவரையறை இன்னும் முழுமையடையாமல் உள்ளது. இதுபோன்ற சூழலில் உள்ளாட்சி தேர்தலை நடத்தினால் பெரும் குழப்பம் ஏற்படுவதோடு, வாக்காளர்கள் தங்களது வாக்குரிமையை இழக்கக்கூடும். மேலும் புதிய மாவட்டங்கள் அனைத்திலும் வாக்குப்பதிவு குறித்த தளிவான விவரங்களை அரசு ஏற்படுத்தி தரவில்லை. அதனால் மறுவரையறை பணிகள் அனைத்தும் முடிவடைந்தவுடன் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணையை வெளியிட உத்தரவிட வேண்டும். இது குறித்து 6 மாவட்டங்கள் சார்பாக தனித்தனியாக புதிய மனுக்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இதையடுத்து அனைத்து தரப்பு கோரிக்கைகளையும் கேட்ட தலைமை நீதிபதி, பிறப்பித்த உத்தரவில், “தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பான அனைத்து வழக்குகளையும் பட்டியலிட்டு விரைவில் நீதிமன்றம் விசாரிக்கும் என குறிப்பிட்டார். இதையடுத்து மேற்கண்ட வழக்குகள் அனைத்தும் வரும் திங்கட்கிழமை அதாவது நாளை மறுநாள் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : government ,Tamil Nadu ,elections ,Chief Justice , Local government elections , heard in Tamil Nadu soon
× RELATED தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்...