×

2500 ஏக்கர் பரப்பளவில் குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க மத்திய அரசு அனுமதி : நிலம் கையகப்படுத்த 8 தாசில்தார்கள் நியமனம்

உடன்குடி: குலசேகரன்பட்டினத்தில் 2500 ஏக்கர் பரப்பளவில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து, நிலம் எடுப்பு பணிக்காக 8 தாசில்தார்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் தென்மாவட்ட மக்களின் கனவு நனவாகியுள்ளது.  இந்திய விண்வெளி   ஆராய்ச்சி மையத்திற்காக சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர்   இந்தியாவில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க கன்னியாகுமரி பகுதியை தேர்வு   செய்தனர். ஆனால் மக்கள் அதிக அளவில் குடியிருப்பதாக கூறி அந்த திட்டம் கைவிடப்பட்டது. அப்போது  மத்திய அமைச்சர்கள், விஞ்ஞானிகள்   பெரும்பாலானோர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் ராக்கெட் ஏவுதளம் ஆந்திர மாநிலம், ஸ்ரீ   ஹரிகோட்டாவிற்கு கொண்டு செல்லப்பட்டது. எனினும் நெல்லை மாவட்டம், மகேந்திரகிரியில் ராக்கெட்டை விண்ணில் செலுத்தும் திரவ இயக்க திட்ட மையம் அமைக்கப்பட்டது.
ஸ்ரீஹரிகோட்டாவில் தற்போது இரண்டு ராக்கெட் ஏவுதளங்கள் உள்ளது. நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்டும், பாதுகாப்பு நலன்   கருதியும், விண்வெளி துறையில் இந்தியா மேலும் சாதிக்கவும் மூன்றாவது ஏவுதளம் அமைப்பது காலத்தின் கட்டாயமாக உள்ளது. தமிழகத்தில் 3வது ஏவுதளம் அமைவதற்குரிய சாத்தியக் கூறுகள் இருந்த போதிலும் இந்த பணிகள் தள்ளிக் கொண்டே   போனது. இந்நிலையில் மூன்றாவது ராக்கெட் ஏவுதளம் அமைக்க விஞ்ஞானிகள்   சேட்டிலைட் உதவியுடன் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டனர். அப்போது பூமத்ய   ரேகைக்கு மிகவும் அருகில் இருக்கும் குலசேகரன்பட்டினம் பகுதியை  தேர்வு   செய்தனர். தூத்துக்குடி எம்பி கனிமொழியும் குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி வந்தார்.

இதனையடுத்து முதற்கட்டமாக இஸ்ரோ விஞ்ஞானிகள்   கொடுத்த வரைபடத்தின் அடிப்படையில்  வருவாய் துறையினர் உடன்குடி யூனியனுக்கு உட்பட்ட   மாதவன்குறிச்சி, அமராபுரம், கூடல்நகர், சாத்தான்குளம் யூனியனுக்கு உட்ட   பள்ளக்குறிச்சி, படுக்கப்பத்து ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய பகுதிகளில்   மரங்கள், வீடுகள், வழிபாட்டு தலங்கள் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு   அரசுக்கு அறிக்கை சமர்பித்தனர். இதில் கூடல்நகரில் மட்டுமே குடியிருப்புகள் உள்ளன.   மற்ற பகுதிகள் பெரும்பாலும் காலி நிலங்களாகவே உள்ளன. இதையடுத்து இஸ்ரோ வழங்கியுள்ள வரைபடத்தின் அடிப்படையில்   திருச்செந்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் பட்டா நிலங்கள்   1700.39 ஏக்கர் பரப்பளவும், 131.68 ஏக்கர் பரப்பளவு அரசு புறம்போக்கு   நிலங்கள் உள்ளிட்ட சுமார் 2500 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கியுள்ளன. இவைகள்   மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச்சட்டம் 2013 பிரிவு   40(1)ன்கீழ் அவசரகால வழி வகைகளின் கீழ் கையகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அதற்குரிய பணிகள்   விரைந்து நடந்து வருகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு   திருச்செந்தூர் வந்த தமிழக வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், மத்திய, மாநில அரசுகள் குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைவது   குறித்து விரைவில் அறிவிக்கும் என கூறியிருந்தார். இதற்காக வருவாய்த்துறை   சம்பந்தமான ஆவணங்கள், ஆய்வுகள் சமர்ப்பிக்கபட்டதாகவும் கூறினார். தொடர்ந்து   இஸ்ரோ விஞ்ஞானிகள், அலுவலர்கள், திருச்செந்தூர் ஆர்டிஓ மற்றும் வருவாய் துறை   அதிகாரிகள் குலசேகரன்பட்டினம்   கூடல்நகர் பகுதியில் திடீரென ஆய்வு மேற்கொண்டு அந்த பகுதி மக்களின்  மனநிலை  குறித்து பேச்சுவார்த்தை நடத்த வந்தனர். அப்போது அரசுடன் பேசி விரைவில் பொதுமக்களிடம் கருத்து கேட்பு   கூட்டம் நடத்தப்படுவதுடன், காலி செய்யப்படும் குடியிருப்புகளுக்கு தகுந்த இடம் வழங்குவது குறித்து   கூட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர்.

இந்நிலையில் குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் கேட்ட போது; குலசேகரன்பட்டினத்தில் இஸ்ரோ நிறுவனம் சார்பில் ராக்கெட் ஏவுதளம்  அமைப்பதற்கான பணிகளை தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கு தேவையான சுமார் 2500 ஏக்கர் நிலங்களை தேர்வு செய்வதற்கான அரசாணை  பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே நிலம் கையகப்படுத்தும் பணிக்கு 8 அலகுகள்  உருவாக்கப்பட்டு அதற்காக கண்ணன், லெட்சுமி கணேஷ், ரதிகலா, பேச்சிமுத்து,  கோபாலகிருஷ்ணன், செல்வி, சிவகாமசுந்தரி, நாகசுப்பிரமணியன் ஆகிய 8  தாசில்தார்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்காக திருச்செந்தூரில் அலுவலகம்  அமைக்கும் பணி நடந்து வருகிறது. இன்னும் சில தினங்களில் அதிகாரிகள் நிலம் கையகப்படுத்தும் பணியை மேற்கொள்வார்கள். அதற்கான தேவையான  அலுவலர்களும், ஊழியர்களும் நியமிக்கப்பட உள்ளனர் என்றார். தென்மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பான குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் திட்டம் நிறைவேறியுள்ளதால் மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

வரைபடத்தில் இடம் பிடிக்கும்

குலசேகரன்பட்டினத்தில் ஆண்டுதோறும் தசரா திருவிழா வெகு  விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. மைசூருக்கு அடுத்து குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா பெயர் பெற்றது. தசரா திருவிழா மூலம் குலசேகரன்பட்டினம்  இந்திய அளவில் பெயர் பெற்ற பகுதியாக விளங்கிய நிலையில், தற்போது ராக்கெட்  ஏவுதளம் அமைவதன் மூலம் முக்கிய நகரமாக குலசேகரன்பட்டினம் மாறி  வருகிறது. குலசேகரன்பட்டினத்தில் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இயற்கை துறைமுகம் இருந்தது. அப்போது வரைபடத்தில் குலசேகரன்பட்டினம் இடம் பெற்றது. தற்போது ராக்கெட் ஏவுதளம் அமையவிருப்பதால் குலசேகரன்பட்டினம் சர்வதேச வரைபடத்தில் விரைவில் இடம் பெறும் என நம்பப்படுகிறது.  

அச்சம் தேவையில்லை

குலசேகரன்பட்டினத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்படும் ராக்கெட்களால் இந்த பகுதி மக்களுக்கோ, மீனவர்களுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படாது. மேலும் தொழிற் பாதுகாப்பு படையினர், ராணுவத்தினர் கட்டுப்பாடுகள் கடுமையாக இருக்கும் என மக்கள் மத்தியில் சிலர் பீதியை கிளப்புகின்றனர். ராக்கெட் ஏவப்படும் நேரத்தில் மட்டும் பொதுமக்களின் பாதுகாப்புக்காக சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். வழக்கம் போல் சாதாரணமாக விமான நிலையம், அனல்மின்நிலையம் உள்ளிட்ட பகுதியில் எவ்வளவு பாதுகாப்பு உள்ளதோ அதே போன்று தான் பாதுகாப்பு இருக்குமே தவிர கடும் கட்டுப்பாடுகள் ஏதும் இருக்காது என கூறப்படுகிறது.

வேலைவாய்ப்பு பெருகும்

ராக்கெட் ஏவுதளம் அமைவதன் மூலம் தூத்துக்குடி விமான நிலையம் சர்வதேச விமான நிலைய அந்தஸ்து பெறும். சாலை வசதிகள் மேம்படுத்தப்பட்டு, அனைத்து அடிப்படை வசதிகளும் தன்னிறைவு அடையும். மேலும் மத்திய அரசின் கேந்திர வித்யாலயா பள்ளி, கல்லூரிகள், மருத்துவமனைகள் அமையும். தற்போது துறைமுகம், அனல்மின்நிலைய பணிகள்   அமைக்கும் பணிகள் நடந்து வருவதால் குலசேகரன்பட்டினம் வியத்தகு வளர்ச்சி பெறும்.   குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமையும் பட்சத்தில் நேடியாக 5 ஆயிரம் பேருக்கும், மறைமுகமாக 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் பேருக்கும் வேலை வாய்ப்புகள்  கிடைக்கும். உடன்குடி, திருச்செந்தூர், நாசரேத், சாத்தான்குளம், மெஞ்ஞானபுரம், திசையன்விளை என சுற்றியுற்ற பகுதிகளில் தொழில்கள் பெருகும். இதன் மூலம் மக்களின் பொருளாதாரம் உயரும் என நம்பப்படுகிறது.    

பொருட்செலவு குறையும்

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ராக்கெட்கள் ஏவப்படும் பொழுது எரிபொருள் கூடுதலாக செலவாகிறது. மேலும் நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியிலிருந்து திரவ இயக்க எரிபொருள், கிரையோஜெனிக் இன்ஜின் போன்றவற்றை கொண்டு செல்லவும் கூடுதல் செலவாகிறது. குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைவதன் மூலம் ராக்கெட்கள் இலங்கையை சுற்றிச் செல்வது தவிர்க்கப்படுவதோடு, குறைந்த தொலைவில், குறைந்த செலவில் இலக்கை அடைந்து விட முடியும்.

Tags : Kulasekaranpattinam Central ,Kulasekaranapattinam , Central government clearance ,rocket launcher,Kulasekaranapattinam
× RELATED குலசேகரன்பட்டினத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்