×

நூற்றுக்கணக்கான உயிர்களை பறி கொடுத்த தினம் : குமரி மக்களின் ஆறாத வடுவாகி போன ஓகி

நாகர்கோவில்: கடந்த 2017 ஆண்டு நவம்பர் 29-ம் தேதி நள்ளிரவு வீசி சென்ற ஓகி புயலின் கோர தாண்டவத்தின் 2ம் ஆண்டு நினைவு தினம். ஒட்டு மொத்த கன்னியாகுமரி மாவட்டத்தையே புரட்டி  போட்டு மக்களை நிலை குலைய செய்ய வைத்த ஓகி, ஏற்படுத்தி சென்ற தாக்கம் இன்னும் ஆறாத வடுக்களாக இருந்து கொண்டு இருக்கிறது. லட்சக்கணக்கான மரங்கள், ஆயிரக்கணக்கான மின் கம்பங்கள் மண்ணோடு மண்ணாகி போய் கிடந்தன. ஒரே நாள் இரவில், நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த ஆயிரக்கணக்கான மீனவர்களை ஓகி புயல் சுருட்டி கடலில் திசை மாறி தூக்கி வீசியது. மீனவர்கள் படகுகளையும், துடுப்புகளையும் இழந்து கடலில் உயிருக்கு போராடி தத்தளித்தனர். மரத்துண்டுகள் மற்றும் தண்ணீர் கேன்களையும் பிடித்து மிதந்தபடி காற்று மற்றும் அலை அடித்து சென்ற திசைக்கு சென்று 5, 6  நாட்கள் தொடர்ந்து கடலில் நீந்தி மும்பை மற்றும் ஓடிசா மாநில கடற்கரையில் சில மீனவர்கள் கரையேறினார்கள்.

இன்னும் 200க்கும் மேற்பட்ட மீனவர்களின் கதி என்ன? என்பது புரியாத மர்மமாகவே உள்ளது. பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் அழிந்தன.  பல பாலங்கள் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. ஆறுகளும், குளங்களும் மூழ்கி உடைப்பு ஏற்பட்டு மாவட்டம் முமுவதும் வெள்ளகாடானது. ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி தரைமட்டமானது. மின்சாரம் தாக்கியும், வெள்ளத்தில் மூழ்கியும் 20க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். புயல் வீசி சென்ற 13 நாட்களுக்கு பின்,  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, குமரி மாவட்டம் வந்தார். 20 நாட்கள் கழிந்து பிரதமர் மோடி வந்தார். தமிழக அரசு ஓகி புயலில் இறந்த மீனவர்களுக்கு ரூ. 20 லட்சமும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் அறிவித்தது. ஆனால் இறந்து போன விவசாயிகளுக்கு போதிய நிவாரண தொகை இதுவரையிலும் வழங்கவில்லை. ஓகி தாக்கி இன்றுடன் 2 வது ஆண்டு நிறைவடைகிறது.

இன்னமும் மாவட்டத்தில் புனரமைப்பு பணிகள் நடக்க வில்லை. லட்சக்கணக்கான ரப்பர் மரங்கள் முறிந்தன. இவற்றுக்கு பதிலாக மாற்று மரங்கள் நடப்படும் என அரசு அறிவித்தது. ஆனால் இன்னமும் காடுகளில் முறிந்து விழுந்த மரங்கள் அப்படியே கிடக்கின்றன. விலை உயர்ந்த தேக்கு, ஈட்டி போன்ற மரங்கள் கடத்தல் கும்பல்களால் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளன.  வன பகுதிகள் மட்டுமின்றி நகர்ப்புறங்களில் முறிந்து விழுந்த மரங்கள் கூட இன்னும் அப்புறப்படுத்தப்பட வில்லை. நாகர்கோவில் சுற்றுலா விருந்தினர் மாளிகையில் ஓகியில் விழுந்த மரங்கள் இன்னமும் அப்படியே  குப்பைகளாக  காட்சி தந்த வண்ணம் உள்ளன. பல பள்ளி கட்டிடங்கள் சீரமைக்கப்பட வில்லை. மீனவர்களின் நலனுக்காக ஹெலிகாப்டர் தளம் கொண்டு வரப்படும். நவீன உபகரணங்கள் வழங்கப்படும் என்றனர்.

ஆனால் எந்த வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால் மீனவர்கள் மாயம் என்பது தொடர் கதையாக உள்ளது. விவசாயத்தை பெருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். ஆனால் விவசாயிகளுக்கு எந்த வித உதவியும் செய்யப்பட வில்லை. இன்னமும் ஓகி விட்டு சென்ற தாக்கம் நீடிக்கிறது. சுனாமி, ஓகி என  இயற்கை சீற்றத்தின் காரணமாக, குமரி மாவட்டத்தில் பலியான உயிர்கள் அதிகம். உறவுகளையும், உடமைகளையும் தொலைத்து விட்டு நிற்கதியாக வாழ்ந்து கொண்டு இருக்கும், இந்த மாவட்ட மக்களுக்கு உதவ மத்திய, மாநில அரசுகள் முன் வர வேண்டும். வாழ்வாதாரத்தை இழந்து  நிற்க கூடியவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் இனி நடவடிக்கை எடுப்பதுடன், புயல், மழை என முன் கூட்டியே மீனவர்களை எச்சரித்து அவர்களை காப்பாற்றுவதற்காக ஹெலிகாப்டர் தளம் மற்றும் நவீன உபகரண வசதிகளை மத்திய அரசு, மாநில அரசு அமைக்க வேண்டும் என்பது ஒட்டு மொத்த மக்களின் வேண்டுகோளாகும்.

Tags : Hundreds ,Ogie ,Kumari ,Oggy Storm ,2nd Anniversary ,Fishermen , Oggy Storm, 2nd anniversary, fishermen
× RELATED களியக்காவிளையில் டாரஸ் லாரிகள்...