பொருளாதார வளர்ச்சி 4.5%ஆக குறைந்ததை ஏற்றுக்கொள்ளவே முடியாது : முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்

புதுடெல்லி: நாட்டின் பொருளாதார நிலை கவலையளிக்கிறது என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். பொருளாதாரத்தை விட நமது சமூகத்தின் நிலை மிகவும் கவலைக்குரியதாக உள்ளதாக தெரிவித்துள்ளார். 2வது காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 4.5%ஆக குறைந்ததை ஏற்றுக்கொள்ளவே முடியாது என்று தெரிவித்துள்ளார். நடப்பு நிதியாண்டின் 2-வது காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 4.5 சதவீதமாக குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

2013-ம் ஆண்டுக்கு பின் ஒரு காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 4.5 சதவீதமாக குறைந்திருப்பது தற்போது தான். 2018 ஏப்ரல்- ஜுனில் 7 சதவீதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி விகிதம் 2019 ஏப்ரல் - ஜுனில் 5 சதவீதமாக குறைந்தது. முதல் காலாண்டில் 5 சதவீதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி விகிதம் மேலும் சரிந்து தற்போது 4.5. சதவீதமாக குறைந்துள்ளது.

காங்கிரஸ் குற்றச்சாட்டு

நாட்டின் பொருளதார சரிவுக்கு மத்திய அரசே காரணம் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார். பொருளாதார வளர்ச்சியை மத்திய அரசு கோமா நிலைக்கு தள்ளவிட்டதாக அவர் குற்றம் சாட்டினார். 45 ஆண்டுகளில் இல்லாத அளவு வேலை வாய்ப்பின்மை அதிகரித்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.

அடிப்படை தொழில் உற்பத்தி 5.8% சரிவு

கடந்த அக்டோபர் மாதத்தில் அடிப்படை தொழில்களின் உற்பத்தி 5.8% சரிந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நிலக்கரி உற்பத்தி 17.6 சதவீதமும், கச்சா எண்ணெய் உற்பத்தி  5.1. சதவீதமும், இயற்கை எரிவாயு உற்பத்தி 5.7 சதவீதம் குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. சிமெண்ட் உற்பத்தி 7.7 சதவீதமும், உருக்கு உற்பத்தி 1.6 சதவீதமும், மின்சார உற்பத்தி 12.4 சதவீதமும் முன்பை விட சரிந்துள்ளன.

உரம் உற்பத்தி மட்டுமே கடந்த ஆண்டு அக்டோபரை விட 2019 அக்டோபரில் 11.8 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2018-ல் எட்டு முக்கிய தொழில்களின் உற்பத்தி 4.8 சதவீதம் வளர்ச்சியடைந்த நிலையில் 2019 அக்டோபரில் 5.8 சதவீதம் சரிந்துள்ளதால் நிபுணர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்தியாவின் பொருளாதார சரிவு அபாயகரமான நிலையில் உள்ளதை காட்டுவதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


Tags : Manmohan Singh India ,Manmohan Singh ,Central Government , India, Economic Growth Slump, Economic Growth, Central Government, Former Prime Minister, Manmohan Singh
× RELATED இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி...