×

டிடிவிதினகரனின் அ.ம.மு.க.வை பதிவு செய்ய தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் புகழேந்தி மனுத்தாக்கல்

சென்னை: டிடிவிதினகரன் தலைமையிலான அ.ம.மு.க.வை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அக்கட்சியின் முன்னாள் நிர்வாகி புகழேந்தி மனுத்தாக்கல் செய்துள்ளார். அ.ம.மு.க.வை பதிவு செய்வதற்கான விண்ணப்பத்துடன் பிரமாணப்பத்திரம் அளித்த 14 பேர் தற்போது கட்சியில் இல்லை என்றும், பிரமாணபத்திரங்கள் அடிப்படையில் அ.ம.மு.க.வை பதிவு செய்யக் கூடாது என்று தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடுமாறும் மனுவில் புகழேந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

தேர்தல் ஆணைய விதிப்படி ஒரு கட்சியை பதிவு செய்ய அக்கட்சி சார்பில் 100 பேர் பிரமாணபத்திரம் அளிக்க வேண்டும் என்றும், தான் உள்பட 100 பேர் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்த நிலையில் தற்போது கட்சியில் இருந்து விலகிவிட்டனர் என்று பெங்களூரு புகழேந்தி தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

கட்சியை பதிவு செய்ய அ.ம.மு.க. சார்பில் அளித்த விண்ணப்பத்தை ஆணையம் தள்ளுபடி செய்ய உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். உள்ளாட்சி தேர்தலுக்காக கட்சியை பதிவு செய்ய டிடிவி தினகரன் முயற்சி செய்து வருகிறார் என்று மனுவில் தெரிவித்துள்ளார். டிடிவி தினகரன் மக்கள் பிரதிநிதித்துவ சட்டவிதிகளை மீறி செயல்படுவதாக மனுவில் குற்றச்சாட்டியுள்ளார். புகழேந்தி மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

புகழேந்தி பேட்டி

டிடிவி தினகரன் ஒரு மோசடி பேர்வழி என்று அக்கட்சியின் முன்னாள் நிர்வாகி புகழேந்தி தெரிவித்துள்ளார். கட்சி நிர்வாகிகளுக்கு டிடிவி நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார் என்றும் நீதிமன்றம் எந்த உத்தரவு பிறப்பித்தாலும் கட்டுப்படுவோம் என்று தெரிவித்தார். பணம் கேட்டு டிடிவியை நாடியது இல்லை என்றும், சேலத்தில் மட்டும் அமமுகவில் 200 கோடி ரூபாய் கைமாறியுள்ளதாக புகழேந்தி குற்றம் சாட்டினார்.


Tags : Court of Appeal ,Madras High Court ,High Court ,AMMK , DTV Dinakaran, AMMK, High Court, Publicity
× RELATED வாக்காளர் சேர்ப்பு சிறப்பு...