சிவகாசியில் பல லட்சத்தில் கட்டப்பட்ட நிழற்குடைகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர பயணிகள் கோரிக்கை

சிவகாசி: சிவகாசி நகராட்சி பகுதியில் கட்டப்பட்டுள்ள பல பயணிகள் நிழற்குடை பயன்பாடின்றி சேதமடைந்து வருகிறது. சட்டமன்ற உறுப்பினர், நகராட்சி பொது நிதியில் கட்டப்பட்டுள்ள இந்த நிழற்குடைகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகாசி நகராட்சியில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். நகராட்சி பகுதி நாளுக்கு நாள் விரிவடைந்து வருகிறது. ஆனால் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப நகராட்சி பகுதியில் பாதுகாப்பான சாலை, மேம்பாலங்கள் போன்ற வசதி எதுவும் செய்து தரப்படவில்லை.

சிவகாசி நகர் பகுதியில் வெளியூர், உள்ளுர் பேருந்துகள் நின்று செல்ல 15க்கும் மேற்பட்ட இடங்களில் பஸ் நிறுத்தங்கள் உள்ளன. இந்த நிறுத்தங்களில் பயணிகள் காத்திருந்து செல்ல நகராட்சி பொது நிதி மற்றும் சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் பயணிகள் நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பல இடங்களில், பஸ் நிறுத்தங்கள் அருகில் பயணிகள் நிழற்குடை அமைக்காமல் சற்று தொலைவில் அமைக்கப்பட்டுள்ளது.

சிவகாசி-சாத்தூர் ரோட்டில் கம்மவார் மண்டபம், சிவகாசி-விருதுநகர் ரோட்டில் பைபாஸ், குறுக்கு பாதை, சிவகாசி-திருவில்லிபுத்தூர் சாலையில் பிள்ளையார் கோவில் பஸ் நிறுத்தம், சாட்சியாபுரம் ஆகிய இடங்களில் பல லட்சம்  மதிப்பில் பயணிகள் நிழற்குடை, பஸ் நிறுத்தத்தை விட்டு சற்று தொலைவில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த நிழற்குடைகளை பயணிகள் பயன்படுத்த முடியவில்லை. நகராட்சி மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் பணம் வீணாகி வருகிறது. பயன்பாடின்றி கிடக்கும் நிழற்குடைகளை பராமரித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>