×

நீட் ஆள்மாறாட்ட வழக்கு: சென்னை மாணவருக்கு நிபந்தனை முன்ஜாமின்.. சிபிசிஐடியில் சரணடைய தந்தைக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

சென்னை: நீட் தேர்வு ஆள்மாறாட்ட புகாரில் ரிஷிகாந்த் என்ற மாணவருக்கு நிபந்தனை முன்ஜாமின் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான நீட் எனப்படும் நுழைவுத்தேர்வில் ஆள்மாறாட்ட முறைகேடுகளில் ஈடுபட்டு, அதிக மதிப்பெண் பெற்று கல்லூரியில் சேர்ந்ததாக எழுந்த குற்றச்சாட்டில் இதுவரை 12 பேர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் 5 மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது அதில் பலர் ஜாமின் பெற்று வெளியில் வந்துள்ளனர். இந்த நிலையில், இந்த வழக்கில் சென்னையை சேர்ந்த ரவிக்குமார் மற்றும் அவரது மகன் ஆகிய இருவரும் இதுவரை கைது செய்யப்படாமல் தலைமறைவாக இருந்து வந்தனர்.

மேலும் இவர்கள் தங்களுக்கு ஜாமின் வழங்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மாணவன் மற்றும் மாணவனின் தந்தை ரவிக்குமார் ஆகியோர் சிபிசிஐடி விசாரணைக்கு உட்படுத்தப்படும் போது, அவர்கள் உண்மையை கூறும் பட்சத்தில் முன்ஜாமின் வழங்குவதாக கூறியிருந்தார். இந்த நிலையில், அவருடைய தந்தை ரவிக்குமார் இன்று காலை சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகியிருந்தார். அவரிடம் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடைபெற்றது. சிபிசிஐடி விசாரணைக்கு பின்னர் நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்பொழுது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நீட் தேர்வு எழுதும் போது இருந்த கைரேகையும், இப்பொது மாணவனிடம் வாங்கிய கைரேகையிலும் மாற்றம் உள்ளது. எனவே, இவர்கள் மீதும் சுமத்தப்பட்டுள்ள குற்றங்களை நிரூபிக்கக்கூடிய சூழல் இருப்பதால் முன்ஜாமின் வழங்கக்கூடாது என வாதிட்டார். ஆனால் மாணவனின் எதிர்கால நலன் கருதி, நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மாணவருக்கு நிபந்தனையுடன் கூடிய முன்ஜாமின் வழங்கினார். அதேநேரத்தில், குற்றச்சாட்டுக்கு உள்ளான மாணவனின் தந்தைக்கு முன்ஜாமின் வழங்க மறுத்துள்ளார். அவர், வருகின்ற செவ்வாய்க்கிழமை மதுரையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் சரணடைய வேண்டும் என உத்தரவிட்டார். அவர் கைது செய்யப்பட்ட பின்பு, அவர் 60 நாட்களுக்கு ஜாமின் கேட்கக்கூடாது என்ற நிபந்தனையை பிறப்பித்துள்ளார்.

Tags : Madras ,student , Need impersonation, malpractice, Chennai student, Munjamin, father, Saran, CBCID, High Court Madurai branch, Icort branch
× RELATED மே 7 முதல் இ-பாஸ் உத்தரவு எதிரொலி...