×

பணமதிப்பிழப்பு நடவடிக்கை தெரியாமல் 46,000 செல்லாத நோட்டுகளுடன் பரிதவித்த மூதாட்டிகள் : நேரில் அழைத்து ஆட்சியர் நிதியுதவி

திருப்பூர்: திருப்பூரில் பணமதிப்பிழப்பு செய்யப்பட்டதை அறியாமல் 46 ஆயிரம் ரூபாய் வைத்திருந்த மூதாட்டிகளுக்கு முதியோர் உதவித்தொகை வழங்க மாவட்ட ஆட்சியர் ஆணை வழங்கினார்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை தெரியாமல் சேமிப்பு

திருப்பூர் மாவட்டம், பூமலூர் ஊராட்சி பகுதியை சேர்ந்தவர்கள் ரங்கம்மாள் (75), தங்கம்மாள் (78). இவர்கள் இருவரும் சகோதரிகள். இவர்களின் கணவர்கள் இறந்துவிட்டனர். இதனால் மூதாட்டிகள் தங்களது மகன்கள் வீட்டில் வசித்து வருகின்றனர். 2 பேருக்கும் கண் சரிவர தெரியாததால், இருவரும் கண் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் கண்புரை உள்ளது. இதற்கு அறுவை சிகிச்சை செய்ய பணம் செலவாகும் என கூறியுள்ளனர். அப்போது பண மதிப்பு நீக்க விவகாரம் தெரியாமல் பல ஆண்டுகளாக சேமித்து வைத்திருந்த ரங்கம்மாள் 24 ஆயிரம், தங்கம்மாள் 22 ஆயிரம் பணத்தை குடும்பத்தினரிடம் கொடுத்துள்ளனர். அந்த நோட்டுகள் அனைத்தும், செல்லாத 500, 1000 நோட்டுகளாகும். இதனை பார்த்த மூதாட்டியின் குடும்பத்தினர் கடும் வேதனையடைந்தனர்.

பரிதவிப்புக்குள்ளான மூதாட்டிகள்

இதுகுறித்து மூதாட்டிகளிடம் கேட்டபோது, ‘‘எங்கள் கணவன்மார்கள் கடைசி காலத்தில் வெள்ளாடுகளை விற்பனை செய்து அந்த பணத்தை எங்களிடம் கொடுத்து வைத்தனர். அவர்கள் இறந்தபின்பு எங்களின் செலவுகளுக்கு பணத்தை பயன்படுத்தி வந்தோம். 500, 1000 நோட்டுகளை எடுக்கவில்லை. தற்போது மருத்துவமனைக்கு பணம் தேவைப்படுவது தெரிந்து சேமித்து வைத்த பணத்தை மகன்களிடம் கொடுத்தோம். இந்த நோட்டுகள் செல்லாது என அவர்கள் கூறிய பின்புதான் எங்களுக்கு தெரிய வந்தது’’ என்று வேதனையோடு கூறினார்கள்.

நேரில் அழைத்து ஆட்சியர் நிதியுதவி

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரியவந்தது. இதையடுத்து, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் மூதாட்டிகள் இருவருக்கும் முதியோர் உதவி தொகை கிடைப்பதற்கான அரசாணையை வழங்கினார். அதுமட்டுமின்றி அவர்களின் மருத்துவ செலவுக்கு உதவிகள் செய்யபடும் என விஜயகார்த்திகேயன் தகவல் தெரிவித்துள்ளார். மேலும், மூதாட்டிகள் வைத்திருந்த பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாது என வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

Tags : grandparents ,Collector ,defamation action , Elders, moneylenders, district collector, decree, elderly, scholarship, Tirupur
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...