×

₹32கோடியில் கோட்டை அகழி தூர்வாரும் பணி தீவிரம் 500 மீட்டர் தூரம் மேடாக இருப்பதால் தண்ணீர் செல்ல முடியவில்லை

*முழுமையாக தூர்வார பொதுமக்கள் கோரிக்கை

வேலூர் : ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ₹32 கோடி மதிப்பில் வேலூர் கோட்டை அகழியில் தூர்வாரும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. 500 மீட்டர் தூரம் மேடாக இருப்பதால் தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் முழுமையாக தூர்வார வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். நாட்டில் உள்ள தரைக்கோட்டைகளில் இன்றளவும் கம்பீரமாக காட்சியளிக்கும் கோட்டையாக வேலூர் கோட்டை விளங்கி வருகிறது. வரலாற்று சிறப்புமிக்க இந்த கோட்டையில் பல்வேறு கலை சிற்பங்கள் நிறைந்து காணப்படுகிறது. இப்படிப்பட்ட இந்த கோட்டையை மேலும் அழகுறச்செய்வது, அகழிதான். இந்த அகழியினை தூர்வார வேண்டும் என்று பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்நிலையில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ₹32 கோடி மதிப்பீட்டில் வேலூர் கோட்டையை அழகுபடுத்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த ஜூன் மாதம் படகு மூலம் கோட்டை அகழியை ஆய்வு செய்யும் பணிகள் நடந்தது. இதைதொடர்ந்து, செப்டம்பர் 15ம் தேதி முதல் 7 நவீன மிதவை இயந்திரங்கள் மூலம் கோட்டை அகழியை தூர்வாரும் பணி  தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது வரை சுமார் 50 சதவீதத்துக்கு மேலாக தூர்வாரும் பணிகள் நிறைவு பெற்றுள்ளது.

கோட்டையின் நுழைவு வாயிலின் இடது பக்கமாக தூர்வாரும் பணிகள் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து வலது பக்கத்தில் அகழியில் தண்ணீர் அதிகமாக இருப்பதால் அதனை தூர்வாரும் பணிக்காக கோட்டை நுழைவு வாயில் பாலத்தில் அடைக்கப்பட்டுள்ள வழியாக தண்ணீரை இடது பக்கமாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், அகழியின் இடது பக்கம் தூர்வாரும் பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு தூர்வாரும் பணிகள் முடிந்தும் அந்த பகுதி முழுவதும் மேடாக காட்சியளிக்கிறது. இதனால் அகழி முழுவதும் நீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ₹32 கோடி மதிப்பில் அகழியை தூர்வாரியும் பலனில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: வேலூர் கோட்டை அகழி தற்போது தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. பெரியார் பூங்கா பகுதியில் உள்ள சுமார் 500 மீட்டர் தூரம் 60 மீட்டர் அகலத்தில் உள்ள இடத்தில் தொல்லியல் துறை அறிவுரைப்படி தூர்வாரும் பணிகள் முடிவடைந்துள்ளது. ஆனால் அந்த பகுதி இயற்கையாக உயரமாக இருந்துள்ளது. இதனால் அந்த பகுதி தூர்வாரியும் தற்போதுள்ள நீர்மட்டத்தில் தண்ணீர் மேடான பகுதிக்கு செல்ல முடியாத நிலை தான் உள்ளது.

கோட்டையின் வெளியே சுற்றுச்சுவர் 9.65 மீட்டர் உயரம் கொண்டது. அகழி 5 மீட்டர் ஆழம் உள்ளது. இதனால் தற்போது தூர்வாரிய 1.5 மீட்டர் அளவுக்கு மீண்டும் தூர்வாரினால் மட்டுமே தற்போது தண்ணீர் அகழி முழுவதும் செல்லும் வகையில் இருக்கும். அப்படி செய்தால் தான் அகழி அழகை முழுவதுமாக ரசிக்க முடியும். எனவே ெதால்லியல் துறை அதிகாரிகள் மேடாக உள்ள பகுதியை தூர்வாரும் பணியை விரைந்து தொடங்க நடவடிக்கை வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : Fortress , Vellore ,Smart City project, water way
× RELATED புதுக்கோட்டை கோட்டைப்பட்டினத்தில்...