×

எல்லப்பன்பட்டி கிராமத்தில் ஒரே மாதத்தில் 5 மலை பாம்புகள் பிடிப்பு

அணைக்கட்டு : அணைக்கட்டு தாலுகா அகரம் அடுத்துள்ள எல்லப்பன்பட்டி கிராமத்தில் ஒரே மாதத்தில் 5 மலை பாம்புகள் பிடிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.அணைக்கட்டு தாலுகா அகரம் அடுத்துள்ளது எல்லப்பன்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் கடந்த சில நாட்களாக மலை பாம்புகள் ஊருக்குள் வருவதும், அதை கிராம இளைஞர்கள் பிடித்து ஒடுகத்தூர் வனத்துறையினரிடம் ஒப்படைக்கும் நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது.
அதன்படி, கடந்த 4ம் தேதி மார்கண்டன் என்பவரது விவசாய நிலத்தில் நிலைக்கடலை செடியில் மறைந்திருந்த 10 அடி நீள மலைபாம்பை கிராம இளைஞர்கள் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

  மேலும், கடந்த 25ம் தேதி முருகன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் இருந்த 15 அடி நீள மலை பாம்பை பிடித்தனர். தொடர்ந்து, அன்று இரவு அதே பகுதியில் 16 அடி நீளமுள்ள மற்றொரு மலை பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில், நேற்று காலை அதே கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவருக்கு சொந்தமான மாட்டு கொட்டகையில் கோழி கத்தும் சத்தம் கேட்டது. இதைக்கேட்ட அங்கிருந்த பொதுமக்கள் சென்று பார்த்தபோது, 10 அடி நீள மலைபாம்பு கோழியை விழுங்கி கொண்டிருந்தது.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் பாம்பை பிடித்து ஒடுகத்தூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர், அதன்பேரில், வனவர் பிரதீப்குமார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மலைபாம்பை மீட்டு கருத்தமலை காப்பு காட்டில் விட்டனர். தொடர்ந்து, ஒரே கிராமத்திலிருந்து மலை பாம்பு பிடிக்கப்பட்டு வருவதால்  அக்கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும், கோழிகளை போன்று ஆடு, பறவைகள் மனிதர்களுக்கு ஆபத்து நேர்ந்து விடுமோ என கருதி கவலையடைந்துள்ளனர்.

இதுகுறித்து, ஒடுகத்தூர் வனத்துறையினர் கூறுகையில், கோழி கழிவுகள் உள்ளிட்ட இறைச்சி நாற்றத்தால் மலையில் உள்ள பாம்புகள் கிராமத்திற்கு வருவதற்கு வாய்ப்பு உள்ளது. மேலும், எல்லப்பன்பட்டி கிராமத்தில் மட்டும் தொடர்ந்து மலை பாம்புகள் பிடிப்பட்டு வருவதால் அக்கிராம மக்களிடம் விழிப்புணர்வுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

Tags : village ,Ellapanpatti ,Anaikattu Area , Anaikattu ,Snakes ,fire Department,
× RELATED இளந்திரைகொண்டான் கிராமத்தில் கிராம வேளாண் முன்னேற்ற குழு பயிற்சி