×

வேதாரண்யம் பகுதியில் மழையால் அகல்விளக்கு உற்பத்தி பாதிப்பு

*மண்பாண்ட தொழிலாளர்கள் கவலை

வேதாரண்யம் : நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் மழையால் அகல்விளக்கு உற்பத்தி தொழில் பாதிக்கப்பட்டுள்ளதால் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் வங்கி மூலம் கடன் கொடுத்து உதவினால் உற்பத்தியை பெருக்கி அதிக லாபம் பெற முடியும் என மண் பாண்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர். வேதாரண்யம் தாலுக்கா, தாணிக்கோட்டகம், செட்டிப்புலம், செம்போடை ஆகிய பகுதிகளில் மண்பாண்டம் செய்யும் தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கானோர் உள்ளனர். இவர்கள் காலம் காலமாக மின் இயந்திரங்கள் உதவி இல்லாமல் திருவை வைத்து கையால் மண்பாண்டம் மற்றும் அகல் செய்து வருகின்றனர்.  

இவர்கள் அகல்விளக்கு, சட்டி, பானை, குடம், பூந்தொட்டி, அடுப்பு, திருமண சடங்குகளுக்கு உள்ள மண்பாண்டங்கள், கோயில் கும்பாபிஷேக கலயங்கள் செய்து விற்பனை செய்கின்றனர். தற்போது மண் எடுப்பதில் மிகுந்த சிரமம் உள்ளதால் ஒரு மாட்டு வண்டி களிமண் ரூபாய் ஆயிரத்து ஐநூறு விலைக்கு வாங்கி மண்பாண்டங்களை செய்கின்றனர். பண்டிகை காலமான கார்த்திகை, பொங்கல் ஆகியவற்றிற்கு மண்பாண்டங்கள் செய்ய தயாரானபோது வடகிழக்கு பருவமழை பெய்ய துவங்கியதால் இத்தொழில் முற்றிலும் முடங்கியது.

மழையிலும் கார்த்திகைக்கு அகல்விளக்கு செய்யும் பணி சிறிதளவு நடைபெறுகிறது. சாதாரண நாட்களில் பத்தாயிரம் முதல் இருபத்தைந்தாயிரம் வரை விளக்குகள் செய்யும் ஒரு குடும்பத்தினர் மழை காரணமாக சுமார் ஆயிரம் இரண்டாயிரம் விளக்குகளே செய்துள்ளனர். இதனால் தொழிலில் லாபம் இருக்காது என தொழிலாளர்கள் தெரிவித்தனர். மேலும் சென்ற ஆண்டு பொங்கலுக்கு உற்பத்தி செய்த சட்டி, பானைகள் விற்பனை ஆகாமல் உள்ளன. இத்தொழிலில் மண்பாண்டங்கள் செய்து சுடுவதற்கு என்று சரியான சூளை வசதிகூட இல்லை என தெரிவிக்கின்றனர்.

இப்பகுதியில் உள்ள மண்பாண்ட தொழிலாளர்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை வங்கி கடனோ, அரசு உதவியோ கிடைக்கவில்லை. மின் இயந்திரங்கள் இல்லாமல் திருவையிலேயே வைத்து செய்வதால் பெரிய அளவில் தொழில் செய்ய முடியவில்லை என்று கவலையுடன் தெரிவித்தனர். மேலும் நவீனமாக மெழுகில் செய்யும் விளக்குகள் விற்பனைக்கு வந்தாலும் மண் விளக்குகளுக்கு இன்னமும் மவுசு குறையாமல் விற்பனை நன்றாக உள்ளது. தற்போது மண்பாண்ட சமையலுக்கு திரும்பி வருகின்றனர். அதனால் வரும் காலங்களில் மண்பாண்டம் விற்பனை நன்றாக இருக்கும். எனவே அரசு எங்களுக்கு வங்கி மூலம் கடன் கொடுத்து உதவினால் இயந்திரங்கள் வாங்கி உற்பத்தியை பெருக்கி அதிக லாபம் பெறமுடியும் என மண்பாண்ட உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.


Tags : Vedaranyam , rain,Vedaranyam ,Broad lamp production , heavy rains
× RELATED வேதாரண்யம் கடற்கரையில் ஒதுங்கும்...