×

ஹாங்காங் ஜனநாயக ஆதரவு போராட்டக்காரர்களுக்கு ஆதரவான மசோதாவில் டிரம்ப் கையெழுத்து: சீனா கடும் எச்சரிக்கை

வாஷிங்டன்: ஹாங்காங்கில் போராட்டம் நடத்தி வரும் ஜனநாயக ஆதரவாளர்களுக்கு உதவும் மசோதாவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.  பிரிட்டன் காலனி ஆதிக்கத்தில் இருந்த ஹாங்காங், கடந்த 1997ம் ஆண்டு விடுதலை பெற்று சீனாவின் கட்டுப்பாட்டுக்கு வந்தது.  பாதியளவு தன்னாட்சி பெற்ற பகுதியாக திகழும் ஹாங்காங், ஒரே நாடு, இரு கொள்கைகள்’ என்ற நடைமுறையை பின்பற்றி வருகிறது. இங்குள்ள கிரிமினல் குற்றவாளிகளை சீனாவுக்கு நாடு கடத்தி விசாரிக்கும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனநாயக ஆதரவாளர்கள் பல மாதங்களாக நடத்திய போராட்டத்தின் காரணமாக, இந்த மசோதாவை அரசு கைவிட்டது. இருப்பினும், ஹாங்காங்கில் தற்போது ஜனநாயகத்தை ஏற்படுத்த வலியுறுத்தி, அந்த போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ‘ஹாங்காங் மனித உரிமை மற்றும் ஜனநாயக சட்டம் - 2019’-க்கு ஆதரவு தெரிவித்து அமெரிக்க செனட் சபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவில் அதிபர் டிரம்ப் நேற்று முன்தினம் கையெழுத்திட்டார். இந்த மசோதாவின்படி, ஹாங்காங்கில் மனித உரிமை மீறலில் ஈடுபடுபவர்கள் மீது பொருளாதார தடை விதிக்கப்படும். இது தொடர்பாக டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில், சீன அதிபர் ஜி ஜின்பிங்குக்கும் ஹாங்காங் மக்களுக்கும் மதிப்பளிக்கும் விதமாகவே இந்த மசோதாவில் கையெழுத்திட்டு உள்ளேன். இதன் மூலம், சீனா மற்றும் ஹாங்காங் பிரதிநிதிகள் மற்றும் தலைவர்கள் தங்கள் வேறுபாடுகளை மறந்து இணக்கமாக செயல்படுவார்கள் என நம்புகிறேன்,’ என தெரிவித்துள்ளார்.

டிரம்ப் கையெழுத்திட்டுள்ள இந்த மசோதாவுக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹாங்காங் விவகாரத்தில் அமெரிக்கா தீவிரமாக குறுக்கிடுவதாக கருதுகிறோம். இதுபோன்ற தவறான பாதையை அமெரிக்கா தொடர்ந்தால், சீனாவின் எதிர்விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்,’ என கூறப்பட்டுள்ளது.

சீனா சம்மன்
ஹாங்காங் போராட்டக்காரர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்த டிரம்பை கண்டிக்கும் விதமாக சீன வெளியுறவுத்துறை துணை அமைச்சர் லீ யூசெங்க் அமெரிக்க தூதர் டெர்ரி பிரான்ஸ்டே சம்்மன் அனுப்பி வரவழைத்து தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளதுடன் அமெரிக்கா தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.



Tags : China ,protests ,pro-Hong Kong ,Democratic ,Hong Kong Trump , Hong Kong Democrat Support, Protesters, Bill, Trump Signature, China
× RELATED சீனா, தாய்லாந்தில் இருந்து வரும் வெஸ்டர்ன் ஃப்ராக்ஸ்