×

ஜிம் பாடியோடு தலையை ஒட்ட வைத்து 23ம் புலிகேசி ஆன அமெரிக்க அதிபர் டிரம்ப்: மூளை குழம்பி விட்டதாக எதிர்க்கட்சிகள் கிண்டல்

வாஷிங்டன்: ஹாலிவுட் நடிகர் சில்வெஸ்டர் ஸ்டாலோனின் ‘ஜிம் பாடி’யுடன் தனது முகத்தை போட்டோஷாப் செய்து அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்ட புகைப்படம் கடும் வைரலாகி உள்ளது. இப்புகைப்படத்தை பார்த்து டிரம்ப் ஆதரவாளர்கள் ஒருபுறம் புகழ, எதிர்க்கட்சிகளோ ‘டிரம்ப்புக்கு மூளை குழம்பிவிட்டது’ என கிண்டலடித்துள்ளனர். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து ஆக்ரோஷமாக பேட்டி கொடுத்தாலும், அவரது எதிர்ப்பாளர்கள் உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் கூட அவரை பல கோணங்களில் கேலி செய்வது வழக்கம். அவரது முகத்தை ஆரஞ்ச் பழத்தோடு ஒப்பிட்டு கேலி சித்திரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.  ஒரு குழந்தையை போன்ற டிரம்ப்பின் பொம்மை ரொம்பவே பிரபலம்.

இப்படி மற்றவர்கள் டிரம்ப்பை கேலி செய்து வந்த நிலையில், இப்போது டிரம்ப்பே தனது மார்பிங் செய்யப்பட்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டு எல்லோரையும் சிரிக்க வைத்துள்ளார். நடிகர் வடிவேலு நடித்த ‘23ம் புலிகேலி’ படத்தின் ஒரு காட்சியில், கட்டுமஸ்தான உடம்புள்ள ஒருவரின் தலையை மூடி, அதற்கு பதிலாக மன்னர் புலிகேசியின் முகம் ஓவியமாக வரையப்படும். அப்போது, நடிகர் வடிவேலு, ‘‘இந்த தலை, அந்த முண்டத்துடன் இணையப் போகிறது. விண்ணுலகமும், மண்ணுலகமும் போற்றும் வகையில் சிறப்பாக ஆட்சி செய்தாலும், எனது உருவத்தை ஓவியமாக வரைந்து வைத்தால் சற்று டொங்காக இருக்கும். எனவே என்னை புஜபல பராக்கிரமசாலி போன்று காட்டுவதற்காக இது போன்று ஒரு ஏற்பாடு. பின்னாட்களில் வரும் மடையர்களுக்கு நான் எப்படி இருந்தேன் என தெரியவா போகிறது. வரலாறு முக்கியம் அமைச்சரே’’ என்பார்.

அதே போல, டிரம்ப் அவரது டிவிட்டர் பதிவில், கட்டுமஸ்தான உடம்போடு தனது தலையை ஒட்டிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த உடம்புக்கு சொந்தக்காரர் ஹாலிவுட் நடிகர் சில்வெஸ்டர் ஸ்டாலோன். அவர் நடித்த ‘ராக்கி’ திரைப்படத்தில் குத்துச்சண்டையில் வெற்றி பெற்று இடுப்பில் பதக்கத்தை கட்டிக் கொண்டு வெற்றுடம்புடன் இருக்கும் புகைப்படத்தைதான் டிரம்ப் பயன்படுத்தி இருக்கிறார். புகைப்படத்திற்கு எந்த விளக்கத்தையும் டிரம்ப் தராததால், நெட்டிசன்கள் அவரவர் இஷ்டத்திற்கு தாறுமாறாக கமென்ட்களை பதிவிட்டு வருகின்றனர். டிரம்ப் ஆதரவாளர்கள் சிலர், ‘யப்பா 72 வயசிலேயும் என்னமா... பாடி பாரு’ என்று வஞ்சப்புகழ்ச்சி செய்துள்ளனர். ‘வரிவசூல், அரசியலமைப்பை பாதுகாக்க, நடுத்தர மக்களுக்காக, அமெரிக்க குடிமகன்களுக்காக இரவும் பகலும் உழைத்த இவரைப் போன்ற அதிபர்கள் யாருமில்லை’’ என்றும் சிலர் புகழ்ந்துள்ளனர்.

மறுபுறம் எதிர்க்கட்சி தலைவர்கள் டிரம்ப் புகைப்படத்தை கிண்டலடித்து வருகின்றனர். ‘இவருக்கு மனநல பாதிப்பு வந்திருக்கலாம்’ என்றும், ‘அதிபருக்கு மூளை குழம்பி விட்டதா’ என்றும் கமென்ட்டுகளை பதிவிட்டுள்ளனர். ஆனால் எதற்குமே அதிபர் டிரம்ப் வாய் திறக்கவில்லை. அவர் எதுவுமே கூறாததால் ஆளாளுக்கு கதை கட்டி வருகின்றனர்.

எதற்காக இந்த புகைப்படம்?
கடந்த இரு தினங்களுக்கு முன், தேர்தல் பிரசாரத்தின் இடையே அதிபர் டிரம்ப் திடீரென ராணுவ மருத்துவமனைக்கு சென்று வந்தார். மாதாந்திர பரிசோதனைக்காக அவர் சென்றாலும், எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் சென்றதால், அந்த செய்தி காட்டுத்தீ போல பரவியது. புரளிகளும் வெடித்தன. உச்சகட்டமாக, டிரம்ப்புக்கு ஹார்ட் அட்டாக் என்று கூட தகவல் கிளப்பப்பட்டது. இதைப் பற்றி தனது பிரசாரத்தில் கூட நீண்ட நேரம் பேசினார் டிரம்ப். அதே சமயம், தனது மார்பளகை பார்த்து டாக்டர்களே மிரண்டு போனதாகவும் அவர் பிரசாரத்தில் கூறினார். தனது விரிந்த மார்பும், திரண்ட தோளும் பலரை கவர்ந்திருப்பதாக டிரம்ப் பேசினார். அதன் விளைவு தான் இந்த புகைப்படம் என சந்தேகிக்கப்படுகிறது.

Tags : Trump ,US ,Jim Badio , Jim's Body, 23 optimists, US President Trump
× RELATED ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கு...