×

தடயமே இல்லாம கொள்ளையடிப்பது என் ஸ்டைல் தமிழ் சினிமாவில் ஜொலித்துவிட்டு அரசியல் கட்சியில் சேர திட்டமிட்டேன்: கொள்ளையர் தலைவன் முருகன் வாக்குமூலம்

திருச்சி: நகைக்கடை கொள்ளை கும்பல் தலைவன் முருகனை ரகசிய  இடத்தில் வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 2வது நாளாக நேற்று  நடந்த விசாரணையின் போது தடயமே இல்லாமல் கொள்ளையடிப்பதுதான் என் ஸ்டைல்.  மணிகண்டன் மட்டும் சிக்காவிட்டால் என் லெவலே வேற, தமிழ் சினிமா எடுத்து ஜொலித்துவிட்டு ஏதாவது அரசியல் கட்சியில் சேர திட்டமிட்டு இருந்தேன் என்று கூறி போலீசாரை அதிர வைத்துள்ளான்.திருச்சி லலிதா ஜூவல்லரியில் கடந்த அக்டோபர் 2ம் தேதி ரூ.13 கோடி மதிப்பிலான 29 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக திருவாரூர் மடப்புரம் ஆற்றங்கரை தெருவை சேர்ந்த மணிகண்டன், கனகவல்லி, மதுரையை சேர்ந்த  கணேசன் ஆகியோரை போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். முக்கிய குற்றவாளிகளான கனகவல்லியின் மகன் சுரேஷ் அக்டோபர் 10ம் தேதி செங்கம் நீதிமன்றத்திலும், 11ம் தேதி கும்பல் தலைவன் முருகன்  பெங்களூரு 11வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திலும் சரணடைந்தனர்.பெங்களூரு போலீசார் அக்டோபர் 12ம் தேதி முருகனை பெரம்பலூருக்கு அழைத்து வந்து ஆற்றங்கரையில் புதைத்து வைத்திருந்த 12 கிலோ நகைகளை பறிமுதல் செய்தனர். அதன்பின் திருச்சி கோட்டை போலீசார் முருகனை திருச்சிக்கு  அழைத்து வந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் முருகனிடம் 7 நாள் காவலில் விசாரிக்க ஜேஎம் 2 மாஜிஸ்திரேட் திரிவேணி அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.இதைத் தொடர்ந்து போலீசார் முருகனை ரகசிய இடத்துக்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர். 2வது நாளாக நேற்று விசாரணை நடந்தது. இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. விசாரணையில் முருகன் தெரிவித்ததாக  போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:லலிதா ஜூவல்லரி கடை சுவரை துளையிட எங்களுக்கு 4 நாள் தேவைப்பட்டது. கொள்ளையடித்த பின் காரில் மதுரையில் உள்ள கணேசன் வீட்டுக்கு சென்றோம். அங்கு எடை மெஷின் வைத்து நான், சுரேஷ், கணேசன் ஆகியோர் நகைகளை  பிரித்துக் கொண்டோம். சுரேஷ் மற்றும் கணேசனுக்கு பங்கு பிரிப்பதில் 6 முதல் 7 கிலோ வரை என முன்பின் இருந்தது.
பின்னர் நானும், சுரேசும் காரில் நீடாமங்கலம் வந்தோம். நீடாமங்கலத்தில் சுரேசை இறக்கிவிட்டு விட்டு நான் சென்னை கிளம்பினேன். வரும்போதே செல்போனில் பேசி மணிகண்டனை வரவழைத்தோம். சுரேஷ் தனக்கு வழங்கப்பட்ட  நகையுடன் மணிகண்டனுடன் பைக்கில் சென்றபோது திருவாருரில் மணிகண்டன் சிக்கிக்கொண்டான்.

சென்னை செல்லும் வழியில் போலீஸ் சோதனை நடத்தினால், மாட்டிக்கொள்வேன் என்பதால் பெரம்பலூரில் வனப்பகுதியில் ஒரு இடத்தில் நகைகளை புதைத்தேன். கொஞ்சம் நகைகளை மட்டும் எடுத்துக்கொண்டு கிளம்பி விட்டேன். தடயமே  இல்லாமல் கொள்ளை அடிப்பதுதான் எனது ஸ்டைல். மணிகண்டன் மட்டும் சிக்காவிட்டால், எனது லெவலே வேறு மாதிரி இருந்திருக்கும். தமிழ் சினிமா தயாரிப்பாளர் ஆகி இருப்பேன். எனக்கு அரசியல் ஆசையும் உள்ளது. நேரடியாக  அரசியலில் வெற்றி பெறுவது சிரமம். எனவே சினிமாவில் ஜொலித்துவிட்டு, அதன்பிறகு ஏதாவது ஒரு அரசியல் கட்சியில் சேர திட்டமிட்டிருந்தேன். மணிகண்டன் சிக்கிவிட்டதால், வேறுவழியின்றி நானும் சரணடைய வேண்டிய நிலை  ஏற்பட்டுவிட்டது. லலிதா ஜூவல்லரியில் நான் கொள்ளையடித்த நகைகளில் சில போலீசாருக்கும், பங்கு கொடுத்துள்ளேன். நகைகளை வாங்கிய போலீசாரின் பெயர்களை சொல்ல விரும்பவில்லை.வேலூர் சிறையில்தான் எனக்கு கணேசனுடன் பழக்கம் ஏற்பட்டது. அவன் நகையை உருக்கி விற்பதில் கில்லாடி. இதனால் அவனை பங்குதாரராக சேர்த்துக்கொண்டேன். ஏழைகளின் வீடுகளிலோ, கடைகளிலோ திருட மாட்டேன். நகை கடைகள்  மற்றும் தொழில் அதிபர்களின் நிறுவனங்களில் தான் கைவரிசை காட்டுவேன். இவ்வாறு முருகன் தெரிவித்ததாக போலீசார் கூறினர்.



Tags : robbery ,Tamil ,Murugan ,party , robbery,Tamil cinema,political party,Murugan
× RELATED கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில்...