×

நீட் ஆள்மாறாட்ட மோசடி வழக்கு சென்னை மாணவரின் தந்தை சிபிசிஐடி முன் ஆஜராக உத்தரவு

மதுரை: நீட் ஆள்மாறாட்ட மோசடி வழக்கில் சென்னை மாணவரின் தந்தை சிபிசிஐடி அலுவலகத்தில் இன்று ஆஜராக  ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.நீட் தேர்வில் நடந்த ஆள் மாறாட்ட மோசடி தொடர்பாக, சென்னை, கோபாலபுரத்தை சேர்ந்த மாணவர் ரிஷிகாந்த் (19), இவரது தந்தை ரவிக்குமார் (61) ஆகியோர் விசாரணைக்கு ஆஜராகுமாறு, தேனி சிபிசிஐடி போலீசார் சம்மன்  அனுப்பியுள்ளனர். இதைத்தொடர்ந்து இருவரும் தங்களுக்கு முன்ஜாமீன் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, இருவரையும் கைது செய்ய வேண்டாமென நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு வக்கீல் ராபின்சன் ஆஜராகி, ‘ரவிக்குமாரிடம் விசாரணை நடத்த வேண்டியது அவசியம்’ என்றார்.

இதையடுத்து நீதிபதி, ‘‘மதுரை சிபிசிஐடி டிஎஸ்பி அலுவலகத்தில் 29ம் தேதி (இன்று) காலை 10.30 மணிக்கு ரவிக்குமார் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். அப்படி செய்தால் ரிஷிகாந்திற்கு முன்ஜாமீன் வழங்குவது குறித்து இந்த  நீதிமன்றம் பரிசீலிக்கும். அதுவரை கைது செய்யவேண்டாமென்ற இடைக்கால உத்தரவு நீட்டிக்கப்படுகிறது’’ என உத்தரவிட்டு விசாரணையை இன்றைக்கு தள்ளி வைத்தார்.மாணவன் தந்தைக்கு ஜாமீன்: நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில் கைதான சென்னை மாணவன் பிரவீனின் தந்தை சரவணன் தேனி ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்தார். இம்மனுவை நேற்று விசாரித்த  மாஜிஸ்திரேட் பன்னீர்செல்வம்,  பிரவீனின் தந்தை சரவணனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.


Tags : student ,Chennai ,CBCID , impersonation, fraud c,Chennai student CBCID , Order
× RELATED பதிவான வாக்குகளை ஒப்புகை சீட்டுடன்...