×

பணத்தை திருடும் காலம் போய் வெங்காயம் திருடும் காலம் வந்தாச்சு : குஜராத்திலும் அரங்கேறியது சம்பவம்

சூரத்: கடையை உடைத்து கொள்ளையடிக்க வரும் திருடர்கள் பணத்தை குறிவைத்த காலம் போய், வெங்காய மூட்டைகளை தூக்கிச் செல்லும் காலம் வந்து விட்டது. குஜராத்தின் சூரத் நகர பலன்பூர் படியா என்ற பகுதியில் அமித் கோன்ஜியா என்ற வியாபாரி காய்கறி கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று காலை வழக்கம் போல் கடையை திறக்க வந்த போது, 5 வெங்காய மூட்டைகள் திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மூட்டைகளில் தலா 50 கிலோ என 250 கிலோ வெங்காயம் இருந்துள்ளது. இதன் மதிப்பு ரூ.25,000. இது குறித்து அமித் கூறுகையில், ‘‘கடையில் வெங்காய மூட்டைகளை மட்டும் திருடி சென்றுள்ளனர். பணம் திருடு போகவில்லை. என் வாழ்நாளில் இதுபோன்ற ஒரு திருட்டு நடந்ததில்லை’’ என்றார்.

திருட்டு தொடர்பாக போலீசில் புகார் அளிக்க இருப்பதாகவும், சிசிடிவி கேமரா பதிவு மூலம் திருடர்களை பிடித்து விட முடியும் என்றும் அமித் கூறினார். இதே போல் நேற்று முன்தினம் மேற்கு வங்க மாநிலத்தின் கிழக்கு மிட்னபூர் மாவட்டத்தில் ஒரு கடையில் பூட்டை உடைத்து 100 கிலோ வெங்காயத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். அங்கும் கல்லாவில் அவர்கள் கை வைக்கவில்லை. இந்த வெங்காய கொள்ளை காய்கறி கடைக்காரர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

Tags : incident ,Gujarat , Time to steal money, onion stealing period, Gujarat incident
× RELATED சி.எஸ்.கே – குஜராத் அணிகள் மோதும் போட்டி: டிக்கெட் விற்பனை தொடக்கம்