பாஜ.வால் நாட்டுக்கு ஆபத்து : உத்தவ் தாக்கரேக்கு சோனியா கடிதம்

மும்பை: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை நேற்று முன்தினம் இரவு உத்தவ் தாக்கரே மகன் ஆதித்ய தாக்கரே நேரில் சந்தித்து பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார். இதேபோன்று ராகுல் காந்திக்கும் சிவசேனா தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், இந்த மூன்று தலைவர்களும் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில், உத்தவ் தாக்கரேக்கு வாழ்த்து தெரிவித்து சோனியா காந்தி கடிதம் அனுப்பினார். அதில் அவர் கூறியிருப்பதாவது; உத்தவ் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள முடியாமல் போனதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். மகாராஷ்டிரா மக்களின் எதிர்பார்ப்புகளை உங்கள் தலைமையிலான அரசு நிறைவேற்றும் என்று உறுதியாக நம்புகிறேன்.

பாஜ.வால் முன்னேப்போதும் இல்லாத அளவுக்கு நாட்டுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இப்படிப்பட்ட அசாதாரண சூழ்நிலையில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ஓரணியில் திரண்டிருக்கின்றன. நாட்டின் அரசியல் சூழல் விஷமாகி விட்டது. பொருளாதாரம் சரிந்து விட்டது. விவசாயிகள் துயரத்தில் இருக்கிறார்கள். புதிய கூட்டணி அரசின் குறைந்தபட்ச செயல் திட்டத்தை மூன்று கட்சிகளும் ஏற்றுக் கொண்டுள்ளன. இந்த திட்டங்களை மூன்று கட்சி கூட்டணி ஆட்சி சிறப்பாக நிறைவேற்றும் என நம்புகிறேன். இவ்வாறு சோனியா காந்தி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். ராகுல் காந்தி தனது வாழ்த்துச் செய்தியில், ‘‘முதல்வராக பதவியேற்கும் உங்களுக்கு எனது வாழ்த்துகள். நாட்டின் ஜனநாயகத்தை வீழ்த்த முயன்ற பா.ஜனதாவின் சதியை மகாராஷ்டிரா விகாஸ் கூட்டணி முறியடித்தமைக்காக மகிழ்ச்சியடைகிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags : Sonia ,Uddhav Thackeray Sonia ,Uddhav Thackeray , Sonia's letter , Uddhav Thackeray
× RELATED விபத்துகளில் பலி சோனியா ஆறுதல்