×

மகாராஷ்டிராவின் 29வது முதல்வராக உத்தவ் தாக்கரே பதவியேற்பு : மூன்று கட்சிகளையும் சேர்ந்த தலா 2 பேர் அமைச்சர்கள்

மும்பை: மகாராஷ்டிராவின் புதிய முதல்வராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பதவியேற்றுக் கொண்டார். மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் பாஜ-சிவசேனா கூட்டணிக்கு முறையே 105 மற்றும் 56 இடங்கள் என பெரும்பான்மை பலம் கிடைத்தது. ஆனால், முதல்வர் பதவி தொடர்பான மோதல் காரணமாக இந்த கூட்டணி முறிந்தது. எந்தக் கட்சியாலும் ஆட்சியமைக்க முடியாததால் கடந்த 12ம் தேதி மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. அதேவேளையில், 54 இடங்களில் வெற்றி பெற்ற தேசியவாத காங்கிரஸ் மற்றும் 44 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் இணைந்து கூட்டணி ஆட்சியமைக்க சிவசேனா முடிவு செய்தது. மூன்று கட்சித் தலைவர்களும் பலமுறை சந்தித்து பேசிய பிறகு புதிய கூட்டணி அரசின் குறைந்தபட்ச செயல் திட்டம் வகுக்கப்பட்டு இந்த கூட்டணி, ஆட்சியமைக்க உரிமை கோர தயாராக இருந்தது. இந்த நிலையில், திடீர் திருப்பமாக பாஜ.வுக்கு ஆதரவு தெரிவித்தார் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித் பவார். இதைத் தொடர்ந்து கடந்த 23ம் தேதியன்று அதிகாலையில் அவசர, அவசரமாக ஜனாதிபதி ஆட்சி ரத்து செய்யப்பட்டது. பாஜ.வின் தேவேந்திர பட்நவிஸ் முதல்வராகவும், அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவியேற்றனர். ஆனால், அஜித் பவாருக்கு ஆதரவாக இருந்த ஒரு சில தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் கூட தங்கள் தவறை உணர்ந்து சரத் பவாரிடம் சரணடைந்தனர்.

மறுபுறம் தேவேந்திர பட்நவிஸ் மற்றும் அஜித் பவார் பதவியேற்றதற்கு எதிராக சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், 27ம் தேதி சட்டப்பேரவையை கூட்டி தேவேந்திர பட்நவிஸ் தனது அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க 26ம் தேதி காலை உத்தரவிட்டது. ஆனால், தன்னிடம் போதிய எம்.எல்.ஏ.க்கள் இல்லாததால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என்பதை உணர்ந்த அஜித் பவார் அன்று பிற்பகல் 2.30 மணிக்கு பதவி விலகினார். அடுத்த ஒரு மணிநேரத்தில் தேவேந்திர பட்நவிசும் ராஜினாமா செய்தார். அதற்கு முன்னதாக 25ம் தேதியன்று இரவு 7.30 மணிக்கு சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தங்கள் கூட்டணியை ஆதரிக்கும் 162 எம்.எல்.ஏ.க்களின் அணிவகுப்பை நடத்தி தங்களுக்கு பெரும்பான்மை இருப்பதை நிரூபித்தது. இதற்கிடையே, தேவேந்திர பட்நவிஸ், அஜித் பவார் ராஜினாமாவை தொடர்ந்து அன்று இரவு சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கூடி, இந்த மூன்று கட்சிகளும் சேர்ந்து மகாராஷ்டிரா விகாஸ் அகாடி கூட்டணியை உருவாக்கியிருப்பதாக அறிவித்ததுடன், கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக உத்தவ் தாக்கரேயை தேர்ந்தெடுத்தனர். அன்றிரவு 11 மணியளவில் மூன்று கட்சித் தலைவர்களும் ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியை சந்தித்து தங்கள் கூட்டணியை ஆதரிக்கும் 162 எம்.எல்.ஏ.க்களின் பட்டியலை கொடுத்து ஆட்சியைமைக்க உரிமை கோரினர்.

அதனையேற்று ஆட்சியமைக்க அழைப்பு விடுத்த ஆளுநர், டிசம்பர் 3ம் தேதிக்குள் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு கேட்டுக் கொண்டார். இதைத் தொடர்ந்து நேற்று மாலை 6.40 மணிக்கு தாதரில் உள்ள சிவாஜி பார்க் மைதானத்தில் பதவியேற்பு விழா பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் மகாராஷ்டிராவின் 29வது முதல்வராக உத்தவ் தாக்கரே பதவியேற்றுக் கொண்டார். மராட்டிய மொழியில் அவர் பதவிப்பிரமாணம் ஏற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அவரைத் தொடர்ந்து சிவசேனாவைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் ஏக்நாத் ஷிண்டே, சுபாஷ் தேசாய், தேசியவாத காங்கிரஸ் சார்பில் ஜெயந்த் பாட்டீல், சகன் புஜ்பால், காங்கிரஸ் சார்பில் பாலாசாகேப் தோரத், நிதின் ராவுத் ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர்.

பதவியேற்பு விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் அவரது கட்சியின் மூத்த தலைவர்கள், மகாராஷ்டிரா நவ நிர்மாண் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே, சிவசேனாவை சேர்ந்த முன்னாள் முதல்வர் மனோகர் ஜோஷி, மத்திய பிரதேச மாநில முதல்வர் கமல்நாத், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அகமத் பட்டேல், கபில் சிபல், மல்லிகார்ஜூன் கார்கே மற்றும் அக்கட்சியின் மாநிலத் தலைவர்கள் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள், ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி, அவரது மனைவி நீதா அம்பானி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பிறகு இரவு 8 மணியளவில் முதல்வர் உத்தவ் தலைமையில் புதிய அமைச்சரவையின் முதல் கூட்டம் நடைபெற்றது. இதில் விவசாய கடன் தள்ளுபடி மற்றும் கூட்டணி அரசின் குறைந்தபட்ச செயல் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

எம்.எல்.ஏ., எம்.எல்.சி. ஆக இல்லாமல் பதவியேற்பு

மகாராஷ்டிராவில் சட்டப்பேரவை அல்லது சட்டமேலவையில் உறுப்பினராக இல்லாமல் பதவியேற்ற எட்டாவது முதல்வராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இருக்கிறார். காங்கிரஸ் தலைவர்கள் ஏ.ஆர்.அந்துலே, வசந்த்தாதா பாட்டீல், சிவாஜிராவ் நிலங்கேகர் பாட்டீல், சங்கர்ராவ் சவான், சுஷில்குமார் ஷிண்டே மற்றும் பிருத்விராஜ் சவான் ஆகியோர் சட்டப்பேரவையின் இரு அவைகளில் உறுப்பினர்களாக இல்லாமல் இதற்கு முன்பு முதல்வராக பதவியேற்றுள்ளனர். அப்போதைய காங்கிரஸ் தலைவரும் தேசியவாத காங்கிரஸ் தலைவருமான சரத் பவாரும் இந்த பட்டியலில் இடம் பெற்றிருக்கிறார். தற்போது உத்தவ் ஆறு மாதத்துக்குள் எம்.எல்.ஏ. அல்லது எம்.எல்.சி. ஆக வேண்டும்.

அன்று புகைப்படக் கலைஞர் இன்று மாநில முதல்வர்

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கடந்த 1960ம் ஆண்டு ஜூலை 27ம் தேதி மும்பையில் பிறந்தார். அவருடைய தந்தையும் கட்சியின் நிறுவனருமான பால் தாக்கரே இந்திய அளவில் பிரபலமானவர். மிகச்சிறந்த மற்றும் ஆக்ரோஷமான அரசியல்வாதி. கடந்த 2004ம் ஆண்டில்தான் சிவசேனா உத்தவ் தாக்கரேயின் முழு கட்டுப்பாட்டில் வந்தது. அதற்கு முன்பு கட்சியிலும் அரசியலிலும் தீவிரமாக பங்கேற்க உத்தவ் தாக்கரே எப்போதுமே விரும்பியதில்லை. வனவிலங்குகளை படம் எடுக்கும் ஒரு போட்டோகிராபராகவே அவர் இருந்தார். உத்தவ் தாக்கரே ஒரு எழுத்தாளரும் கூட. 6க்கும் ேமற்பட்ட புத்தகங்கள் மற்றும் போட்டோ பத்திரிகைகளை அவர் வௌியிட்டுள்ளார்.

கடந்த 2002ம் ஆண்டில் மும்பை மாநகராட்சி தேர்தல் நடந்தபோது அதை முன்னின்று நிர்வகிக்கும் பொறுப்பு உத்தவ் தாக்கரேக்கு வழங்கப்பட்டது. அந்த தேர்தலில் சிவசேனாவுக்கு சிறப்பான வெற்றி கிடைத்தது. அதன் மூலம் உத்தவ் தாக்கரேயின் தலைமைப் பண்பு மற்றும் அவருக்கு இருந்த அரசியலில் ஆர்வம் வெளிப்பட்டது. இந்த வெற்றியை தொடர்ந்து 2003ம் ஆண்டில் சிவசேனாவின் செயல் தலைவராக உத்தவ் தாக்கரே நியமிக்கப்பட்டார். அதன் பிறகு பால்தாக்கரே கடந்த 2004ம் ஆண்டில் கட்சியின் அடுத்த தலைவராக உத்தவ் தாக்கரேயை அறிவித்தார். பால் தாக்கரேயின் மறைவுக்கு பிறகு உத்தவ் தாக்கரே சிவசேனாவின் அதிகாரமிக்க தலைவரானார்.

நிழல் முதல்வர்?

மகாராஷ்டிரா முதல்வராக உத்தவ் தாக்கரே நேற்று பதவியேற்றார். ஒரே அமைச்சரவையில் தந்தையும் மகனும் இடம்பெறுவது சரியாக இருக்காது என்று சிவசேனா வட்டாரத்தில் பேசப்படுவதாக கூறப்படுகிறது. அவ்வாறு ஆதித்ய தாக்கரேயும் அமைச்சரானால், தந்தை, மகன் இருவரும் பதவி ஆசைப்பிடித்தவர்கள் என்ற விமர்சனத்துக்கு ஆளாக நேரிடும் என்பதால் உத்தவ் தாக்கரே தலைமையிலான அமைச்சரவையில் ஆதித்ய தாக்கரே இடம்பெற மாட்டார் என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், நிழல் முதல்வராக இருந்து அவர் ஆட்சியிலும் கட்சியிலும் தனது அதிகாரத்தை காட்டுவார் என கூறப்படுகிறது.

உத்தவ் தாக்கரே முதல்வராகி விட்டதால் இனி கட்சியின் பெரும்பாலான பொறுப்புகளை ஆதித்ய தாக்கரேதான் கவனித்துக் கொள்வார் என்றும் கட்சியை வளர்க்க அவர் தொடர்ந்து மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என்றும் சிவசேனா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஒர்லி தொகுதியில் போட்டியிட்ட ஆதித்ய தாக்கரே தன்னை எதிர்த்து போட்டியிட்ட தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் சுரேஷ் மானேயை விட 70 ஆயிரத்துக்கு அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘புதிய அரசின் வழிகாட்டி சரத் பவார்’

சிவசேனாவின் அதிகாரபூர்வ நாளேடான சாம்னா தலையங்கத்தில் கூறப்பட்டிருப்பதாவது: தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் பாஜ பக்கம் சென்றபோது அவரிடம் பேசி மீண்டும் அவரின் முடிவை மாற்றச் செய்து கூட்டணிக்கு அழைத்து வந்த பெருமை சரத் பவாரையே சாரும். மாநிலத்தில் நடந்த மிகப்பெரிய அரசியல் நாடகத்தில் ஆட்ட நாயகனாக இருந்தவர் சரத் பவார். அவருடைய முயற்சியால்தான் சிவசேனா-என்.சி.பி.-காங்கிரஸ் கூட்டணி முன்னோக்கி நகர்ந்தது. சரத் பவாரைப் போன்ற ஒரு பழுத்த அரசியல்வாதி எங்களுடன் இருக்கிறார். அவர் புதிய அரசுக்கு வழிகாட்டியாக இருப்பார் என்று கூறப்பட்டுள்ளது.

Tags : Maharashtra ,Uddhav Thackeray ,chief minister , Uddhav Thackeray sworn, 29th Chief Minister,Maharashtra
× RELATED ஒன்றிய அமைச்சர் நாராயண் ரானேவை களம் இறக்கியது பா.ஜ