×

மணல் கொள்ளையை தடுக்க 6 மாதத்தில் பாதுகாப்பு விதி உருவாக்கவேண்டும் : அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை:  மணல் கொள்ளையை தடுக்க மணல் பாதுகாப்பு விதிகளை 6 மாதத்திற்குள் உருவாக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. புதுகையை சேர்ந்த மணிகண்டன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆறுகளில் மணல் குவாரிகளில் சட்டவிரோத மணல் திருட்டு நடக்கிறது. இதை தடுத்து நிறுத்தக்கோரி மனு அளித்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, கனிமவள சட்டப்படி எடை மேடை, தேசிய நெடுஞ்சாலைகளில் சோதனைச்சாவடிகள் ஏற்படுத்தி குறிப்பிட்ட தொலைவிற்கு இடையே சிசிடிவி கேமரா பொருத்தி வெப்சைட் மூலம் கண்காணிக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், பி.புகழேந்தி ஆகியோர் விசாரித்து பிறப்பித்த உத்தரவு:

தமிழகத்தில் மணல் திருட்டை தடுக்கவும், கண்காணிக்கவும் அனைத்து மாவட்டங்களிலும், தாலுகா அளவிலும் சிறப்பு கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் கூடுதலாக நிபுணர்கள், சமூக ஆர்வலர்கள், உயரதிகாரிகள் உள்ளிட்டோரை சேர்க்க வேண்டும். மணல் அத்தியாவசிய தேவையாக கருதி அதன் விலையை கட்டுப்படுத்த வேண்டும். இதற்காக ஒரு நடைமுறையை கொண்டு வரவேண்டும். வீடுகள் மற்றும் கட்டிடம் கட்டும்போது அவற்றின் வரைபடத்தின் அடிப்படையில் தேவைப்படும் மணலை அளவிட்டு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். முடிந்தவரை வீட்டிற்கே சென்று நேரடியாக வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம். மணலை பாதுகாத்திடும் வகையில் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அடிப்படையில் மணல் பாதுகாப்பு விதிகளை 6 மாதத்திற்குள் உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு உத்தரவிட்டுள்ளனர்.

Tags : 6 month security rule,prevent sand looting
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...