×

திருவண்ணாமலை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் சங்க தலைவராக முன்னாள் அமைச்சர் தேர்வு ரத்து : உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: திருவண்ணாமலை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் சங்க தலைவராக முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை தேர்ந்தெடுத்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வனபுரம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க தலைவர் பச்சமுத்து என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: திருவண்ணாமலை மாவட்ட பால் உற்பத்தியாளர் சங்க தலைவராக முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை தேர்ந்தெடுத்திருப்பதாக  மாவட்ட சங்க துணைப்பதிவாளர் அறிவித்தார். அந்த அறிவிப்பில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள இலத்தூர் பால்  உற்பத்தியாளர்கள் சங்கத்தை அக்ரி கிருஷ்ணமூர்த்தி நடத்தி வருவதாகவும் அதன் காரணமாக அவருக்கு இந்த பதவி வழங்கி இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. தேர்தல் நடத்தாமல் அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு, மாவட்ட பால் உற்பத்தியாளர் சங்க தலைவராக தேர்ந்தெடுத்தது  கூட்டுறவு சங்க விதிகளுக்கு எதிரானது.

அக்ரி கிருஷ்ணமூர்த்தி தலைவராக தேர்ந்தெடுக்க தகுதியாக கூறப்படும் இலத்தூர் பால் உற்பத்தியாளர் சங்கம் தற்போது வரை ஒரு லிட்டர் பாலை கூட ஆவின் நிறுவனத்திற்கு வழங்கவில்லை. விதிகளின்படி 90 நாட்களில் 120 லிட்டர் பாலை கூட்டுறவுக்கு சங்கத்திற்கு வழங்க வேண்டும் என்ற நிபந்தனையை அக்ரி கிருஷ்ணமூர்த்தி வைத்திருக்கும் சங்கம் நிறைவேற்றி இருப்பதற்கான ஆவணங்களும் இல்லை.  எனவே அக்ரி கிருஷ்ணமூர்த்தியை திருவண்ணாமலை மாவட்ட பால் உற்பத்தியாளர் சங்க தலைவராக தேர்ந்தெடுத்ததை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் ஆர்.ஜெயபிரகாஷ் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, கூட்டுறவு விதிகளைப் பின்பற்றாமல் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை தலைவராக பதவி நியமனம் செய்த  உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என்று தீர்ப்பளித்தார்.

Tags : President ,Thiruvannamalai District Dairy Producers Association , Thiruvannamalai District ,Dairy Producers Association ,President canceled
× RELATED இந்தியாவின் எதிர்காலத்தை...