×

உள்ளாட்சி தேர்தல் நடத்த வசதியாக தமிழகத்தில் ஒரே நாளில் 106 உதவி இயக்குநர்கள் அதிரடி மாற்றம் : 36 பிடிஓக்களுக்கு பதவி உயர்வு

நெல்லை: உள்ளாட்சி தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் நடந்து வரும் நிலையில் தமிழகம் முழுவதும் ஒரே நாளில் ஊரக வளர்ச்சித் துறையில் பணியாற்றி வரும் 106 உதவி இயக்குநர்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். உள்ளாட்சி தேர்தல் நடத்துவதில் முக்கிய அங்கமாக திகழ்பவர்கள் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள். இவர்கள் பல்வேறு பதவிகளுக்கு தேர்தல் அதிகாரிகளாக நியமிக்கப்படுவர். இதையடுத்து 3 ஆண்டுகள் ஒரே பதவியில் இருக்கும் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளை பல்வேறு மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கு வசதியாக ஒரே நாளில் 106 உதவி இயக்குநர்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) பிரிவிற்கும், காலியாக உள்ள மாவட்ட பஞ்சாயத்து செயலாளர் பதவிக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் பிடிஓக்களாக பணியாற்றி வரும் 36 பேருக்கு உதவி இயக்குநர்களாக பதவி உயர்வும் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை, ஊரக வளர்ச்சித் துறையில் உதவி இயக்குநர்கள் அந்தஸ்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் 12 பேர் முதல் 14 பேர் வரை பணியாற்றி வருகின்றனர். இவ்வாறாக தமிழகத்தில் மொத்தம் 400 ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் பணியிடங்கள் உள்ளன. இதில் மூன்றில் ஒரு பங்கு அளவிற்கு 106 பேர் ஒரே நாளில் அதிரடியாக பல்வேறு இடங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டும், 36 பேருக்கு உதவி இயக்குநர்களாக பதவி உயர்வும் அளிக்கப்பட்டுள்ளது.

மறைமுக தேர்தலுக்கு ‘வசதியாக’ இடமாற்றம்

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்துவதற்காக தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது. மறைமுக தேர்தல் நடத்த வசதியாக அரசுக்கு அணுசரனையுடன் செயல்படாத சில அதிகாரிகள் ‘டம்மி’ பதவிக்கும் தூக்கி அடிக்கப்பட்டுள்ளனர்.

Tags : Assistant Directors ,elections ,Tamil Nadu , 106 Assistant Directors, One Day Promotion , 36 PDOs
× RELATED மக்களவைத் தேர்தல் : தமிழ்நாட்டில் உள்ள...