ஆப்கன் ராணுவத்திடம் சரணடைந்த ஐஎஸ் தீவிரவாதிகளில் கேரள தம்பதி : புகைப்படத்தை தாய் உறுதி செய்தார்

திருவனந்தபுரம்: ஆப்கானிஸ்தான் ராணுவத்தில் சரணடைந்தவர்களில் தனது மகளும், குடும்பத்தினரும் உள்ளனர் என்று திருவனந்தபுரத்தை சேர்ந்த நிமிஷாபாத்திமாவின் தாய் பிந்து கூறியுள்ளார். திருவனந்தபுரம் மணக்காடு பகுதியைச் சேர்ந்தவர் பிந்து. இவரது மகள் நிமிஷா. இவர் பாலக்காட்டை சேர்ந்த செபாஸ்டியன் என்ற இசாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவர் முஸ்லிமாக மாறி தனது பெயரை நிமிஷா பாத்திமா என மாற்றிக்கொண்டார். கடந்த 2017ம் ஆண்டு நிமிஷா பாத்திமா குடும்பத்துடன் மாயமானார். விசாரணையில், அவர் தனது கணவருடன் ஆப்கானிஸ்தான் சென்று, ஐஎஸ் இயக்கத்தில் இணைந்த தகவல் கிடைத்தது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் ஆப்கானிஸ்தான் ராணுவத்திடம் பல்வேறு நாடுகளில் இருந்து வந்து ஐஎஸ் இயக்கத்தில் சேர்ந்த 600க்கும் மேற்பட்டோர் சரணடைந்த தகவல் வெளியானது. இதில் 10க்கும் மேற்பட்டோர் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் கேரளாவில் இருந்து சென்றவர்கள் என்றும் என்ஐஏ விசாரணையில் தெரியவந்தது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் என்ஐஏ அதிகாரிகள், ஆப்கானிஸ்தான் ராணுவத்திடம் சரணடைந்தவர்கள் என கூறி நிமிஷாவின் தாய் பிந்துவுக்கு ஒரு புகைப்படத்தை அனுப்பினர். அதில் இருப்பது தனது மருமகன் மற்றும் மகள் என்றும், கையில் இருப்பது தனது மகளின் குழந்தை என்றும் பிந்து அடையாளம் காண்பித்துள்ளார். பிந்து கூறுகையில், ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் எனது மகள் குடும்பத்துடன் கொல்லப்பட்டிருக்கலாம் என நான் நினைத்தேன். இப்போது அவள் குடும்பத்துடன் உயிரோடு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது’’ என்றார்.

Tags : militants ,army ,Kerala Couple ,Afghan ,Kerala , Kerala couple ,IS militants surrendering , Afghan army
× RELATED முதல்வர் முன்னிலையில் நடந்த விழாவில்...