×

சட்டப்பேரவை இடைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி என்ஆர்சிக்கு எதிரான தீர்ப்பு : மம்தா பேட்டி

கொல்கத்தா: ‘‘மேற்குவங்க சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திரிணாமுல் காங்கிரசுக்கு கிடைத்த வெற்றி, மதச்சார்பின்மைக்கும், ஒற்றுமைக்கும் கிடைத்த வெற்றி’’ என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். மேற்குவங்க சட்டப்பேரவை இடைத்தேர்தலில், கலியாகஞ்ச் தொகுதியில் போட்டியிட்ட திரிணாமுல் வேட்பாளர் தபல் தேப் சின்ஹா, காரக்பூர் சடர் தொகுதியில் போட்டியிட்ட திரிணாமுல் வேட்பாளர் பிரதீப் சர்க்கார், கரிம்பூர் தொகுதியில் போட்டியிட்ட திரிணாமுல் வேட்பாளர் பிமாலந்து சின்ஹா ராய் ஆகியோர் பா.ஜ வேட்பாளர்களை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளனர்.  

இந்நிலையில் இந்த வெற்றி குறித்து கொல்கத்தாவில் நேற்று பேட்டியளித்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாவது: பாஜ தனது ஆணவத்துக்கான பலனை பெற்று வருகிறது. தேசிய குடிமக்கள் பதிவேடுக்கு எதிராக மக்கள் வாக்களித்துள்ளனர். நாட்டு மக்களை அகதிகளாக மாற்றி, கைது மையங்களுக்கு அனுப்ப பாஜ விரும்புகிறது. இந்த வெற்றி மதச்சார்பின்மைக்கு கிடைத்த வெற்றி. இதை மக்களுக்கு அர்ப்பணிக்கிறோம்.

மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தங்களை வலுப்படுத்துவதற்கு பதிலாக, பாஜ.வுக்கு உதவுகின்றன. மகாராஷ்டிரா, அரியானாவில் நடந்த தேர்தலில் பாஜ.வுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. பல மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தல்களிலும், பாஜ.வுக்கு எதிரான கோபம் வெளிப்பட்டுள்ளது. கவுன்டவுன் தொடங்கிவிட்டது. வேலைவாய்ப்பை உருவாக்குவதில் அவர்களுக்கு ஆர்வம் இல்லை. மக்களை மதரீதியாக பிரித்து, மற்றவர்களை அச்சுறுத்துவதில்தான் பாஜ ஆர்வமாக உள்ளது. பெரும்பான்மையே இல்லாமல் ஆட்சி அமைக்கும் பாஜ.வின் தந்திரத்தை மக்கள் ஏற்பார்கள் என பாஜ நினைக்கக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : victory ,Trinamool Congress ,assembly ,interview ,NRC ,Mamta ,Narendra Modi , Trinamool Congress victory , Narendra Modi ruling
× RELATED பாஜ தலைவர்களின் ஹெலிகாப்டர்களை...