×

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ஜாமீனில் வெளியே உள்ள கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய நடவடிக்கை

* உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை திடீர் தகவல்
* ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

புதுடெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீதான இறுதி விசாரணை முடிந்ததை தொடர்ந்து, உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ., அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றன. சிபிஐ.யின் வழக்கில் கார்த்தி சிதம்பரம், ப.சிதம்பரத்துக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கி இருக்கிறது. இதனால், கார்த்தி சிதம்பரம் வெளியில் உள்ளார். ஆனால், இதே வழக்கில் அமலாக்கத் துறை கைது செய்ததால், டெல்லி திகார் சிறையில் ப.சிதம்பரம் இருக்கிறார். இந்த வழக்கிலும் அவர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை சிபிஐ சிறப்பு நீதிமன்றமும், டெல்லி உயர் நீதிமன்றமும் நிராகரித்ததை தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்துள்ளார்.

உச்ச நீதிமன்ற நீதிபதி பானுமதி தலைமையிலான அமர்வில் நேற்று 2வது நாளாக இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத் துறையின் தரப்பில் ஆஜரான மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தனது இறுதி வாதத்தை முன்வைத்தார். அவர் கூறியதாவது: இந்த வழக்கை பொறுத்தவரை, ஒரு பொருளாதார குற்றம் சமூகத்தில் எந்தளவிற்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை பார்க்க வேண்டும். நாட்டின் மிக உயர்ந்த பதவிகளில் ஒன்றான, நிதியமைச்சர் பதவியில் இருந்த ப.சிதம்பரம் பொருளாதார குற்றத்தில் ஈடுப்பட்டுள்ளார். ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் அவருக்கு எதிராக சாட்சி அளிக்க யாரும் தயாராக இல்லை. ஆனால், ஒருவர் மட்டும் அவருக்கு எதிராக சாட்சியம் அளித்துள்ளார். பாதுகாப்பு காரணமாக அவருடைய பெயரை இங்கு குறிப்பிட விரும்பவில்லை.

 பில்லா, ரங்காவை போன்ற கடுமையான குற்றவாளியாக தன்னை கருதக் கூடாது என்ற சிதம்பரத்தின் வாதத்தை ஏற்கிறோம். ஆனால், அதிகாரத்தில் உள்ளவர்கள் செய்த பொருளாதார குற்றம், மற்ற குற்றங்களை விட மிகப் பெரியது. இதில், பில்லா, ரங்கா என்றால் மட்டுமே நாங்கள் குற்றங்களை தீவிரமாக எடுத்துக் கொள்வோம்; மற்றவர்களுக்கு அப்படி செய்ய மாட்டோம் என கருதக் கூடாது. இது போன்ற பொருளாதார குற்றங்களை நீதிமன்றம் ஒருபோதும் ஊக்குவிக்கக் கூடாது.ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ஜாமீன் பெற்று வெளியில் இருக்கும் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை அமலாக்கத் துறை எடுக்கும். ஏனெனில், அவர் சிபிஐ தொடர்ந்த வழக்கில் மட்டும்தான் நிபந்தனை ஜாமீன் பெற்றுள்ளார். இந்த முறைகேடு பற்றிய ஆரம்பகட்ட விசாரணையின்போது, நிதியமைச்சர் பதவியில் இருந்த ப.சிதம்பரம், பல முக்கிய சாட்சிகளை கட்டுப்படுத்த முயற்சி செய்திருக்கிறார். அதனால் அவருக்கு ஜாமீன் வழங்கினால், தனக்கும், தனது மகனுக்கும் எதிரான சாட்சிகளை நிச்சயமாக கலைப்பார்.

அதனால், அவருடைய ஜாமீன் மனுவை நிராகரிக்க வேண்டும். இவ்வாறு அவர் வாதிட்டார். மேத்தாவின் இந்த வாதத்துக்கு சிதம்பரத்தின் வழக்கறிஞரான கபில் சிபல் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இத்துடன் இந்த வழக்கில் இருதரப்பு வாதங்களும் முடிந்ததால்,  சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை, நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்யப் போவதாக உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘12 வெளிநாடுகளில் பினாமி சொத்துகள்’

துஷார் மேத்தா தனது வாதத்தில் மேலும் கூறுகையில், ‘‘ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான, ‘அட்வான்டேஜ் ஸ்ட்ராட்டஜிக்’ நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளன. பல ரகசியங்கள் அடங்கிய ஹார்டு டிஸ்க்கும் கைப்பற்றப்பட்டது. அதன் மூலம், 16 நிறுவனங்களுடன் ப.சிதம்பரத்துக்கு பங்குதாரர் என்ற வகையில் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும், 16 நாடுகளில் வங்கி கணக்குகள் இருப்பதும், 12 வெளிநாடுகளில் சொத்துக்கள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கான வலுவான ஆதாரங்கள், விசாரணை அமைப்புகளிடம் உள்ளன,’’ என்றார்.

Tags : Karthi Chidambaram , Investigators to arrest, Karthi Chidambaram, bail , INX media case
× RELATED ராமர் கோயிலின் ₹8 ஆயிரம் கோடிக்கு வரி...