×

கோட்சேவை தேசபக்தர் என கூறிய பிரக்யா சிங் மீது பாஜ நடவடிக்கை

* பாதுகாப்பு குழுவில் இருந்து நீக்கம்
* எம்பி. கூட்டத்தில் பங்கேற்க தடை

புதுடெல்லி: காந்தியை கொன்ற கோட்சேவை, ‘தேசபக்தர்’ என தொடர்ந்து கூறும் எம்பி. பிரக்யா சிங் தாக்கூருக்கு, நாடாளுமன்ற கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ள பாஜ தடை விதித்துள்ளது. மேலும், பாதுகாப்புத் துறை ஆலோசனைக் குழுவில் இருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளார்.
கடந்த மக்களவை தேர்தல் பிரசாரத்தின் போது காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேவை ‘தேசபக்தர்’ என பா.ஜ எம்.பி பிரக்யா தாக்கூர் கூறினார். இதற்கு பல தரப்பில் இருந்து கண்டனம் எழுந்ததால், அவர் தான் தெரிவித்த கருத்துக்கு மன்னிப்பு கேட்டார். இந்நிலையில், மக்களவையில் நேற்று முன்தினம் சிறப்பு பாதுகாப்பு (எஸ்பிஜி) சட்ட திருத்தம் தொடர்பான விவாதத்தில் பேசிய திமுக எம்.பி ஆ.ராசா, காந்தியை கொன்றது ஏன்? என கோட்சே கூறியதை மேற்கோள் காட்டினார். அப்போது குறுக்கிட்ட பிரக்யா தாக்கூர், ‘தேசபக்தரை முன்னுதாரணமாக கூறக் கூடாது,’ என்றார். அவருடைய பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில், மக்களவை நேற்று கூடியதும், பிரக்யா தாக்கூர் கருத்துக்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசுகையில், ‘‘கோட்சேவை தேசபக்தர் என கூறும் பிரக்யா சிங் தாக்கூர், காங்கிரஸ் கட்சியை தீவிரவாத கட்சி என்கிறார். நாட்டுக்காக காங்கிரஸ் தலைவர்கள் பலர் உயிர் தியாகம் செய்துள்ளனர். இந்த அவையில் எப்படி இது போன்ற கருத்துகளை அவர் தெரிவிக்கலாம். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றார். இதற்கு பதில் அளித்த சபாநாயகர் ஓம் பிர்லா, ‘‘பிரக்யா கூறிய கருத்து அவை குறிப்பிலிருந்து நீக்கப்பட்டு விட்டது. அதனால், இது குறித்த விவாதம் தேவையில்லை,’’ என்றார். பிரக்யா கருத்துக்கு கண்டனம் தெரிவிப்பதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் கூறினார். இந்த பதிலில் திருப்தி அடையாத காங்கிரஸ், திரிணாமுல், திமுக, கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ் எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

இந்நிலையில், பிரக்யா மீது பாஜ ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இது குறித்து பாஜ செயற் தலைவர் ஜே.பி.நட்டா கூறுகையில், ‘‘பிரக்யா தெரிவித்த கருத்து கண்டத்துக்குரியது. இது போன்ற கருத்தை பாஜ ஒருபோதும் ஆதரிப்பதில்லை. அவர் இந்த கூட்டத் தொடர் முழுவதும், பாஜ நாடாளுமன்ற கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது,’’ என்றார்.

கண்டன தீர்மானம் கொண்டு வர முடிவு?

கோட்சேவை தேசபக்தர் என கூறிய பிரக்யா சிங்குக்கு எதிராக மக்களவையில் கண்டன தீர்மானம் கொண்டு வர காங்கிரஸ் மற்றும் ஐமு கூட்டணியில் உள்ள திமுக, தேசியவாத காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரக்யா ஒரு தீவிரவாதி ராகுல் காந்தி காட்டம்

நாடாளுமன்ற வளாகத்தில் பேட்டியளித்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ‘‘பிரக்யா ஒரு தீவிரவாதி. பாஜ, ஆர்எஸ்எஸ் அமைப்பின் இதயத்தில் உள்ள கருத்தைதான் அவர் கூறுகிறார். இதை மறைக்க முடியாது. இது அவர்களின் ஆன்மா. அது எப்படியாவது வெளிவரும். காந்திஜியை அவர்கள் எவ்வளவு புகழ்ந்தாலும், இதுதான் அவர்களின் ஆன்மா,’’ என்றார்.

‘சில நேரங்களில் பொய் பெரிதாக வலுப்பெறும்’

பிரக்யா  சிங் தாக்கூர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘சில நேரங்களில் பொய்கள் மிக பெரியளவில் வலுப்பெறுகின்றன. பகல் கூட இரவாக தோன்றலாம். ஆனால், சூரியன் தனது ஒளியை இழப்பதில்லை. பொய் புயல் தாக்குதலுக்கு மக்கள் ஆளாகக் கூடாது. உதம் சிங் களங்கப்படுத்தப்பட்டதை என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை. அதுதான் உண்மை.’ என கூறியுள்ளார்.


Tags : BJP ,Pragya Singh ,patriot ,Godse , BJP action , Pragya Singh , calling Godse a patriot
× RELATED மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு…...