×

பொருளாதார மந்தநிலை குறித்து நிர்மலா சீதாராமன் பேசும்போது மத்திய அமைச்சர் ஆழ்ந்த ‘தியானம்’ : நெட்டிசன்கள் விமர்சனம்

புதுடெல்லி: நாட்டின் பொருளாதாரம் குறித்து நிர்மலா சீதாராமன் உணர்ச்சிகரமாக விரிவான உரை நிகழ்த்தியபோது, மத்திய அமைச்சர் மகேந்திரநாத் பாண்டே தூங்கி வழிந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி நெட்டிசன்களால் விமர்சனம் செய்யப்பட்டு வருகின்றது. மக்களவையில் நேற்று முன்தினம் நடந்த நாட்டின் பொருளாதார நிலை குறித்த விவாதத்தின்போது, நாட்டின் பொருளாதாரம் கடந்த 7 ஆண்டுகளாக வளர்ச்சி குறைந்து, மந்தநிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பே இல்லை என்று எதிர்கட்சியினர் கருத்து தெரிவித்தனர். குறிப்பாக ஆனந்த் சர்மா, சரமாரியாக குற்றச்சாட்டுகளை எழுப்பினார். நாட்டில் 2.5 கோடி பேர் தொழிற்சாலைகள் மூடலால் வேலைகளை இழந்துள்ளனர். இதற்கு பாஜவின் தவறான பொருளாதாரக் கொள்கையே காரணம் என்றும் குற்றம்சாட்டினார்.

இதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், விரிவான விளக்கம் அளித்தார். பல நேரங்களில் உணர்ச்சிகரமாகவும் பேசினார். இந்தியாவின் பொருளாதாரம் கீழே சென்றுள்ளதே தவிர, இதுவரை மந்தநிலைக்கு தள்ளப்படவில்லை என்றார். இதுதொடர்பான காட்சிகள் தொலைக்காட்சிகளில் வெளியானது. அப்போது, மத்திய திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மகேந்திரநாத் பாண்டே, நிர்மலா சீதாராமனின் தீவிர உரைக்கிடையே அவருக்கு பின்னால் அமர்ந்து குறட்டை விட்டு தூங்கி கொண்டிருந்தார்.

இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. அதற்கு டிவிட்டரில், ‘‘நிர்மலா சீதாராமனின் பேச்சு சோர்வை ஏற்படுத்தியதால் எம்.பி தூங்குகிறார்’’ என சிலர் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். ‘‘அவர் பேசியது என்னவென்று புரியாமலே திடீரென எழுந்து கைத்தட்டுகிறார்’’. மேலும், ‘‘மேடம் நீங்கள் இந்திய பொருளாதாரம் குறித்து தீயா பேசி வருகிறீர்கள், ஆனால் உங்களின் பின்புறம் எம்.பி ஒருவர் சுகமாக தூங்குகிறார்’’. மேலும், ‘‘இந்தியாவின் பொருளாதாரம் இதுபோன்று எழுச்சியற்ற நிலையை சந்தித்து வருகிறது’’ என்று பல்வேறு வகையில் விமர்சித்து கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.இது பாஜ தலைமைக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Nirmala Sitharaman ,slowdown , Minister Nirmala Sitharaman speaks, deeply ,economic slowdown
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...