×

கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக போராட்டம் டெல்லியில் வைகோ கைதாகி விடுதலை

புதுடெல்லி: டெல்லி வந்துள்ள இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்திய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உட்பட பலர்  கைது செய்யப்பட்டனர். மாலையில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். இலங்கையில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் முன்னாள் பாதுகாப்புத் துறை செயலாளர் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்று அதிபராக பொறுப்பேற்றார். இதையடுத்து, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பதவி விலகியதால், கோத்தபயவின் சகோதரர் மகிந்தா ராஜபக்சே பிரதமராக பதவியேற்றார். அதிபராக பதவியேற்ற கோத்தபய ராஜபக்சேவுக்கு மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நேரில் வாழ்த்து தெரிவித்தார். மேலும், முதலாவது வெளிநாட்டுப் பயணமாக இந்தியாவுக்கு வருமாறு பிரதமர் மோடி சார்பிலும் அழைப்பு விடுத்திருந்தார். இதனை ஏற்று, 2 நாள் அரசுமுறை பயணமாக கோத்தபய ராஜபக்சே நேற்று மாலை டெல்லி வந்தார். நேற்று மாலை 5.30 மணியளவில் விமான நிலையம் வந்தடைந்த கோத்தபயவுக்கு அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர். இதைதொடர்ந்து, குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இருநாட்டு தொடர்பான பேச்சுவார்த்தையை நடத்துகிறார். அப்போது, தமிழக மீனவர்கள் பிரச்னை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பிரதமர் மோடி எடுத்துரைப்பார் என தெரிகிறது.

தொடர்ந்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரையும் சந்தித்து பேசும் கோத்தபய ராஜபக்சே நாளை மாலை இலங்கைக்கு புறப்பட்டு செல்கிறார். இந்நிலையில் கோத்தபய ராஜபக்சேவின் வருகையை எதிர்த்து டெல்லி நாடாளுமன்ற சாலையில் மதிமுக சார்பில் நேற்று போராட்டம் நடத்தப்பட்டது. கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நடந்த போராட்டத்தில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசு, பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ஆகியோருக்கு எதிராக கருப்புக்கொடி ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பினர். அதேபோல் ஈழத் தமிழர்களின் இனப்படுகொலையை கண்டித்தும் முழக்கமிட்டனர். இதையடுத்து போராட்டக் களத்திற்கு வந்த போலீசார் வைகோ உள்ளிட்ட மதிமுகவினர் மற்றும் போராட்டக்காரர்களை கைது செய்து நாடாளுமன்ற காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். பின்னர் அனைவரும் மாலை 4 மணிக்கு மேல் விடுவிக்கப்பட்டனர்.

‘போராட்டம் தொடரும்’

விடுதலை செய்யப்பட்ட பின்னர் வைகோ நிருபர்களிடம் கூறும்போது, “இலங்கையில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர். மீனவர்கள் பிரச்னையில் கூட இந்திய கடற்படை, இலங்கை கடற்படையோடு கூடிக் குலாவி வருகின்றனர். இதுவரை தமிழக மீனவர்கள் 500க்கும் மேற்பட்டோர் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டுள்ளனர். அதுகுறித்து இந்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. அதற்கு பதிலாக தொடர்ந்து தமிழர்களுக்கு எதிரான செயல்களைத்தான் செய்து வருகிறது. இதுபோன்ற சூழலில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே இந்தியா வருவதை ஏற்க முடியாது. அதனால் தான் கருப்பு கொடி ஏந்தி போரட்டத்தில் ஈடுபட்டோம். இது ராஜபக்சே குடும்பத்தை சர்வதேச போர் குற்றவாளியாக அறிவிக்கும் வரை தொடரும். இதுகுறித்து நாடாளுமன்றத்திலும் வலியுறுத்தப்படும்’’ என்றார்.

Tags : Vaiko ,Delhi ,protest ,Gotabhaya Rajapaksa Vaiko ,Gotabhaya Rajapaksa , Vaiko released , Delhi , protest ,Gotabhaya Rajapaksa
× RELATED மாமல்லபுரம் பல்லவர் கால சிற்பங்களை...