×

நதிகள் இணைப்பு திட்டம் எவ்வளவு நாளில் முடிக்கப்படும்? : மக்களவையில் டி.ஆர்.பாலு கேள்வி

சென்னை: நதிகள் இணைப்பு திட்டம் எவ்வளவு நாட்களில் முடிக்கப்படும் என்று மக்களவையில் டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பினார்.திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு மக்களவையில் பேசியதாவது: நதிகள் இணைப்பு குறித்த சிறப்பு குழு தீபகற்ப இந்தியாவில் 14 இணைப்புகளையும், இமயமலை நதிகளில் இரண்டு இணைப்புகளையும் நிறைவேற்ற கண்டறிந்துள்ளதா, இந்த இணைப்பு திட்டங்கள் எவ்வளவு நாட்களில் முடிக்கப்படும். வறட்சி மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்படும் மக்களுக்கு நிவாரணம் வழங்க மத்திய அரசிடம் திட்டங்கள் ஏதேனும் உள்ளனவா என்று கேள்வி எழுப்பினார். மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்: 2012 பிப்ரவரி உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, செப்டம்பர் 2014ல் நதிகள் இணைப்பிற்கான சிறப்பு குழு அமைக்கப்பட்டது. சிறப்பு குழு இதுவரை 16 சந்திப்புகளை நடத்தியுள்ளது. தேசிய நீர் வளர்ச்சி முகமையின், தேசிய முன்னோக்கு திட்டத்தின்படி தீபகற்ப இந்தியாவில் 16 நதிநீர் இணைப்பு திட்டங்களுக்கும் இமாலய நதிகளில் இரண்டு நதிநீர் இணைப்பு திட்டங்களுக்கும் சாத்தியக்கூறு அறிக்கைகள் நிறைவேற்றப்பட்ட நிலையில் தற்போது திட்ட வரைவு அறிக்கைகளுக்கான முயற்சிகள் எடுக்கப்பட உள்ளன.

கோதாவரி-ஈஞ்சம்பள்ளியிலிருந்து கிருஷ்ணா-நாகர்ஜூன சாகர் வரையிலான இணைப்பும், கிருஷ்ணா-அல்மாட்டியிலிருந்து பெண்ணார் வரையிலான இணைப்பும், பெண்ணார்-சோமசீலாவிலிருந்து காவிரி-கல்லணை வரையிலான இணைப்பும் காவிரி கட்டளையில் இருந்து-வைகை குண்டாறு இணைப்பும், பம்பை-அச்சன் கோவிலில் இருந்து-வைப்பாறு இணைப்பும் திட்ட வரைவு அறிக்கைகள் தயாரிக்கும் பணிகளுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. திட்டவரைவு அறிக்கைகள் தயாரிக்கப்பட்டவுடன் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் தடையில்லா சான்றிதழ், பழங்குடியினர் அமைச்சகத்தின் தடையில்லா சான்றிதழ் முதலியவை பெற்ற பின்னர் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் உதவியுடன் நதிகள் இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற முயற்சிகள் எடுக்கப்படும் என்றார். தொடர்ந்து, இந்த நதிநீர் இணைப்புகள் நிறைவேற்றப்பட்டால் தமிழகத்திற்கு மிக்க நன்மை அளிக்கும் என்று டி.ஆர்.பாலு கூறினார்.

Tags : DR ,Lok Sabha , Rivers Connection Project, completed, DR Baloo Question in Lok Sabha
× RELATED டாக்டர் அகர்வால்ஸ் கண்...