×

தமிழக அரசின் தவறான கொள்கையினால் 60,000 கணினி ஆசிரியர்கள் நிலை கேள்விக்குறி

* 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை 6வது பாடமாக சேர்க்கப்படுமா?

* சிறப்பு செய்தி

தமிழகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சமச்சீர் பாடத்திட்டத்தை உருவாக்கி, அதில் 6 முதல் 10ம் வகுப்பு வரை கணினி பாடத்தை தனிப்பாடமாக கொண்டு வந்து செயல்படுத்தினார். பின்னர் வந்த அதிமுக அரசின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கருணாநிதி கொண்டு வந்த கணினி அறிவியல் பாட புத்தகம் தவறாக உள்ளது என கூறி பல லட்சம் புத்தகங்களை வெளியில் விடாமல் அழித்தார். அதன் பிறகு தமிழகத்திலுள்ள அனைத்து பள்ளிகளிலும் கணினி பாடத்தை அறிவியல் பாடத்துடன் மூன்று பக்கமாக இணைத்து, வகுப்புகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் கடந்த 1992 முதல் 2019 வரை சுமார் 60 ஆயிரம் கணினி ஆசிரியர்கள் படித்து முடித்து விட்டு வேலைக்காக காத்திருக்கின்றனர். தமிழக அரசு, கடந்த 2014ம் ஆண்டு கணினி ஆசிரியர்களை, கணினி பயிற்றுனர்கள் என கூறி, பணியில் சேருவதற்கு இளங்கலை மட்டும் இருந்தால் போதுமானது என்றனர். ஆனால், கடந்த மார்ச் மாதம் முதுகலை படிப்பு வேண்டும் என அரசாணையை மாற்றினர். இதனால் சுமார் 30 ஆயிரம் கணினி ஆசிரியர்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.

இதனால் உரிய வேலை கிடைக்காததால் கணினி படித்து முடித்துள்ள ஆசிரியர்கள் பெரும்பாலானோர் மாற்று வேலைக்கு சென்று விட்டனர். மத்திய அரசு கடந்த 2011ம் ஆண்டு கணினி அறிவியல் பாடத்திற்கு என ரூ.900 கோடி நிதி ஒதுக்கியது. ஆனால், அந்த நிதியை கொண்டு 2019ல் தான் 7 ஆயிரம் பள்ளிகளில் ஆய்வகத்தை அமைத்தனர். கேரளா போன்ற மற்ற மாநிலங்களில் மத்திய அரசு நிதியை கொண்டு 1 முதல் 12ம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடம் தனிப்பாடமாக உள்ளது. இதனால் கடந்த 2 ஆண்டுகளில் கேரளா மாநிலத்தில் அரசு பள்ளிகளில் சுமார் 4.30 லட்சம் மாணவர்கள் சேர்க்கை நடந்துள்ளது. ஆனால், தமிழகத்தில் கணினி அறிவியல் பாடங்களை பற்றி, அரசு பள்ளிகளில் இல்லாதால், சுமார் 2 லட்சம் மாணவர்கள் சேர்க்கை குறைந்துள்ளது. இதனால் பெரும்பாலான பள்ளிகள் மூடு விழா நடத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் என 5 பாடங்கள் உள்ளன. மற்ற மாநிலங்களில் கணினி பாடத்தை 6 வது பாடமாக கூடுதலாக சேர்த்துள்ளனர். அங்கு 1 முதல் 12ம் வகுப்பு வரை கணினி பாடம் இருக்கும் நிலையில், கணினி பாடத்தை தமிழ், ஆங்கிலம் பாடம் போல் கட்டாயமாக்கியுள்ளனர்.

கணினி பாடத்தில் தேர்ச்சி பெற்றால் தான் 11 ஆம் வகுப்பிற்கு செல்ல முடியும் என்ற உத்தரவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. அந்தளவிற்கு மற்ற மாநிலங்களில் கணினி அறிவியல் பாடத்தை மாணவர்களுக்கு, அம்மாநில அரசுகள் ஊக்கப்படுத்தி வருகின்றன. ஆனால், தமிழகத்தில் 6 முதல் 10ம் வகுப்பு வரை கணினி பாடம் இருந்தாலும், அறிவியல் பாடப்புத்தகத்தில் மூன்று பக்கங்களை மட்டும் இணைத்துள்ளனர். அதிலும் தனியார் பள்ளிகளில் எல்கேஜி படிக்கும் மாணவர்களுக்குள்ள கணினி பாடங்கள் மட்டுமே, தமிழக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு உள்ளது. மாணவன், அடிப்படை கணினி அறிவை, 10ம் வகுப்பு வரை படிக்காமல் வந்து விட்டு, 11ம் வகுப்பிற்கு செல்லும் போது, கணினியை பற்றி தெரியாததால், தேர்ச்சி பெறமுடியாத நிலை உள்ளது. இதனால் தனியார் பள்ளிகளுடன், அரசு பள்ளி மாணவர்கள் போட்டி போட முடியாமல் அரசு பள்ளி மாணவர்கள் வாழ்க்கையை இழந்து தவிக்கிறார்கள். தனியார் பள்ளிகளில், கணினி லேப் உள்பட அனைத்து வசதிகள் உள்ளதால், பெரும்பாலான பெற்றோர், தங்கள் குழந்தைகள் வருங்காலத்தில் கணினி படிப்பில் உயர வேண்டும் என தனியார் பள்ளிகளில் சேர்ப்பதால், அரசு பள்ளிகளில் பெருமளவு சேர்க்கை குறைந்து விடுகிறது.

தமிழக அரசு புதிய பாடத்திட்டத்தை கொண்டு வந்தாலும், கூடுதலாக கணினி பாடத்தை சேர்க்காததால், அரசு பள்ளி மாணவர்கள் மற்ற தனியார் பள்ளி மாணவர்களுடன் போட்டி போட சிரமப்படுகிறார்கள். கணினி படிப்பிற்காக மத்திய அரசு போதுமான நிதி ஒதுக்கியும், தமிழக அரசு, அந்த நிதியை உரிய முறையில் நடைமுறைப்படுத்தாமல், கிடப்பில் போட்டு வருவது, மாணவர்களின் கணினி அறிவை முடக்குவதாகும். கேரளா போன்ற மற்ற மாநிலங்களில் உள்ளது போல் 1ம் வகுப்பு முதல் கணினி அறிவியல் பாடத்தை தனிப்பாடமாக உருவாக்க வேண்டும். அப்போது தான் வருங்காலத்தில் வெளி மாநிலத்தோடும், உலகம் முழுவதும் உள்ள பல்வேறு துறைகளில் போட்டிபோட முடியும். அடிப்படை கணினி அறிவியல் பாடம் தெரிந்த ப்ளஸ் 2 படித்து முடித்த மாணவனுக்கு தமிழக அரசு வழங்கும் கணினி பயன்படும். ஆனால் கணினி அறிவியல் பற்றி தெரியாததால், பெரும்பாலான மாணவர்கள், தமிழக அரசு வழங்கும் கணினியை கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதும், படம், சினிமா பாட்டுக்கள் கேட்பதற்கும் தான் பயன்படுத்துகின்றனர்.

தற்போது, தமிழக அரசு கணினி லேப் உள்ள பள்ளிகளில், கணினி ஆசிரியரை நியமிக்காமல், ஏற்கனவே உள்ள ஆசிரியர்களுக்கு பயிற்சியளித்து கணினி பாடத்தை, மாணவர்களுக்கு வகுப்பெடுக்க முடிவு செய்துள்ளனர். இதனால் அந்த ஆசிரியருக்கு கூடுதல் பணிச்சுமையுடன், மாணவர்களுக்கு தரமான முறையில் கணினி பாடத்தை பற்றி கூற முடியாது. உலகம் முழுவதும் கணினி அறிவியல் மயமாகி, முன்னேறி வருகிறது. ஆனால், தமிழகம் மட்டும் தான் கணினியில் பின்னோக்கியுள்ளது. கணினி பாடத்தை தமிழக அரசு ஏன் ஊக்கப்படுத்துவதற்கு முயற்சி எடுக்க தயங்குகிறது என்பது புரியாத புதிராக உள்ளது. தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 12ம் வகுப்பு வரை 6 வது பாடமாக கணினி அறிவியல் பாடத்தை கொண்டு வர வேண்டும், அனைத்து பள்ளிகளிலும் கணினி ஆசிரியரை நியமனம் செய்ய வேண்டும் என பல ஆண்டுகளாக கணினி ஆசிரியர்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும், கல்வித்துறை அமைச்சரிடம் கோரிக்கை மனுக்கள் வழங்கியும், எந்தவிதமான முன்னேற்றமும் இல்லாததால், தமிழகத்திலுள்ள 60ஆயிரம் கணினி ஆசிரியர்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.

Tags : computer teachers ,Government ,Tamil Nadu , 60,000 computer teachers ,questioned due, wrong policy
× RELATED தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்...