×

மின்வாரியம், போலீஸ் துறைகளில் தலைவிரித்தாடுவதாக பகீர் தகவல்: அரசுப் பணிகளைச் செய்ய 62 சதவீதம் பேர் லஞ்சம்...டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் சர்வேயில் அம்பலம்

சென்னை: தமிழக அரசுப் பணிகளைச் செய்ய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக, 62 சதவீதம் பேர் தெரிவித்துள்ள பகீர் தகவல் டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் என்ற அமைப்பு நடத்திய சர்வேயில் வெளியாகி உள்ளது. நாடு முழுவதும்  உள்ள அரசு அலுவலகங்களில், பொதுமக்கள் சார்பில் கொடுக்கப்படும் கோரிக்கை மனுக்கள் மீது தீர்வு காண்பதற்காக அரசு ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுத்தால்தான், அந்த பணிகள் முடித்துக் கொடுக்கப்படுகின்றன என்று பரவலாக கருத்து  உள்ளது. இதுதொடர்பாக, டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் (டிஐ) என்ற அமைப்பு நாடு முழுவதும் கணக்கெடுப்பு நடத்தியது. இந்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் மட்டும் 62  சதவீதம் பேர், தங்கள் வேலைகளை செய்து கொடுக்க அரசுப்பணியில் இருக்கும் உயர் அதிகாரிகள் முதல் கீழ்மட்ட பணியாளர்கள் வரை, லஞ்சம் கொடுத்ததாக ஒப்புக் கொண்டுள்ளனர்.

அரசாங்க சேவைகளுக்கு இரண்டு பேரில் ஒருவர் லஞ்சம் கொடுத்ததாகவும், நாடு முழுவதும் இதே நிலை நீடிப்பதாகவும் தெரியவந்துள்ளது. குறிப்பாக தமிழ்நாடு, ராஜஸ்தான், பீகார், உத்தரபிரதேசம், தெலங்கானா, கர்நாடகா, ஜார்க்கண்ட் மற்றும்  பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் அதிகளவில் லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், டெல்லி, அரியானா, குஜராத், மேற்கு வங்கம், கேரளா, கோவா மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் லஞ்சம் கொடுப்பது கொஞ்சம் குறைவாகவே இருக்கிறது  என்பதும் தெரியவந்துள்ளது.

தமிழ்நாட்டை பொறுத்தவரை சொத்து மற்றும் நில விவகாரங்களில் லஞ்சம் அதிகளவில் கொடுக்கப்படுகிறது. அதாவது பத்திரப்பதிவு துறைகளில் லஞ்சப் புழக்கம் அதிகமாக உள்ளன. பெரும்பாலான நிலங்கள் மற்றும் கட்டிட பதிவு  செயல்முறைகள் ஆன்லைனில் சென்றாலும் கூட, லஞ்சம் வழங்கப்பட்டதில் 41% பத்திரப்பதிவு துறையிலேயே உள்ளது. வருவாய்துறை, நகராட்சி, மாநகராட்சி துறை சார்ந்த பணிகள் நடப்பதற்காக, 19%  பேர் லஞ்சம் கொடுத்துள்ளதாக  தெரிவித்துள்ளனர். தொடர்ந்து போலீஸ் மற்றும் பிற துறைகளில் 2 சதவீதம். நாடு முழுவதும் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில், 5,700க்கும் மேற்பட்டோர் தமிழகத்தில் லஞ்சம் தலைவிரித்தாடுவதாக கருத்து தெரிவித்துள்ளனர். இவர்கள்  எல்லோரும் சமீபத்தில் அரசுத் துறையில் விண்ணப்பித்து அதற்கு லஞ்சம் கொடுத்த மற்றும் லஞ்சம் இல்லாமல் வேலையை முடித்துக்  கொண்டுள்ளனர்.

லஞ்சம் கொடுத்த 62 சதவீத மக்களில், 35 சதவீதம் பேர் பல முறை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ லஞ்சம் கொடுத்தனர். 27% பேர் ஒரு முறை அல்லது இரண்டு முறை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ லஞ்சம்  கொடுத்தனர் என்பது தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டில் சர்வே நடத்திய ஒருங்கிணைப்பாளர் அக்‌ஷய் குப்தா கூறுகையில், ``டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் சார்பாக தாலுகா வாரியாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அக்டோபர் 1 முதல் நவம்பர்  15ம் தேதி வரை தமிழகத்தில் நாங்கள் கணக்கெடுப்பு நடத்தினோம். வாக்களிப்பில் பங்கேற்ற பலர் பதிவுத் துறையில் லஞ்சம் கொடுத்ததாகக் கூறினர்.

கணக்கெடுக்கப்பட்ட 15% க்கும் அதிகமானோர், தங்களது வாழ்க்கையில் ஒரு முறையாவது போலீசாருக்கு பணம் கொடுத்ததாகக் கூறினர். குறிப்பாக ஹெல்மெட் அணியாததற்காக அல்லது சிக்னல் விதியை மீறியதாக அபராதம்  செலுத்துவதற்குப் பதிலாக, அபராதத்தை விட மிகக் குறைவான தொகையாக லஞ்சமாக கொடுத்துள்ளோம் என்றனர். காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளவர்கள், வழக்கில் இருந்து தப்பிக்க அவர்கள் அதிக பணம் செலுத்தி உள்ளனர்.
இதேபோல் மின்சார வாரியத்துடன், மின் இணைப்பு பெறுதல், பெயர் மாற்றம் செய்தல், மின் கேபிளை பழுதுபார்த்தல் போன்ற காரணங்களுக்காக மின்வாரிய ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுத்தோம் என்றனர்.

நாடு முழுவதும் எடுத்த கணக்கெடுப்பின்படி, ராஜஸ்தான் முதலிடம், பீகார் இரண்டாமிடம், தமிழகம் ஆறாமிடத்தில் உள்ளது. கடந்த 2018ம் ஆண்டோடு ஒப்பிடும் போது 21 சதவீதம் என்ற நிலையில் இருந்து 35 சதவீதம் பேர் அரசு  அதிகாரிகளுக்கு  லஞ்சம் அளித்ததாக கூறினர். தமிழகத்தில் கடந்தாண்டு நடத்தப்பட்ட சர்வேயில் 52 சதவீதம் பேர் லஞ்சம் கொடுத்தாக கூறிய நிலையில், இந்தாண்டு கணக்கெடுப்பின்படி அது 62 சதவீதமாக அதிகாரித்துள்ளது. ஒவ்வொரு  ஆண்டும் லஞ்சம் வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

லஞ்சம் கொடுத்த 62 சதவீத மக்களில், 35 சதவீதம் பேர் பல முறை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ லஞ்சம் கொடுத்தனர். 27% பேர் ஒரு முறை அல்லது இரண்டு முறை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ லஞ்சம்  கொடுத்தனர் என்பது தெரியவந்துள்ளது.



Tags : bribery bureaucrats ,government ,police departments , Power, Police Department, Government Service, Transparency International Survey
× RELATED ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கம்பி...