×

இருண்டு போகும் இளைஞர்களின் எதிர்காலம்: கொலை, கொள்ளையை தொடர்ந்து போதை மாநகரமாக மாறிய மலைக்கோட்டை

துபாய் எங்க இருக்கு? என்ற பார்த்திபனின் கேள்விக்கு, அது ஈரோடு பக்கமோ, தூத்துக்குடி பக்கமோ இருக்கு என்று வடிவேலு ஒரு திரைப்படத்தில் பதில் அளிப்பார். இதுபோல தான் கடந்த 25 வருடங்களுக்கு முன் கஞ்சா என்ற போதை  பொருளைப் பற்றிய அறிவு தமிழக இளைஞர்களுக்கு, குறிப்பாக திருச்சி பகுதி இளைஞர்களுக்கு இருந்தது. ஆனால் இன்று கஞ்சா திருச்சி மாநகரின் இதயம் போன்ற மத்திய பகுதியான தில்லை நகரில் அதுவும் மாநகராட்சிக்கு சொந்தமான  இடத்திலேயே சாகுபடி செய்யப்படும் அளவுக்கு வளர்ந்து விட்டது தான் இந்த சமூகத்தின் அவலம். கடந்த 4 தினங்களுக்கு முன் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் வளர்க்கப்பட்ட கஞ்சா செடிகளை போலீசாரும், மாநகராட்சி அதிகாரிகளும் அழித்து உள்ளனர். அந்த அளவுக்கு கஞ்சா திருச்சி பகுதி மக்களுக்கு பரீட்சயமான போதை  பொருளாகி விட்டது. போதை பொருள் பயன்படுத்துபவர்களை ஒரு மாதிரியாக பார்த்த காலம் ஒன்று இருந்தது.

ஆனால் இன்று அவ்வப்போது போதை பொருள் பயன்படுத்தினால் தான் கெத்து கிடைக்கிறது என கருதி இளைஞர்களும், கூலி  தொழிலாளர்களும் தங்கள் உடலையும், குடும்பத்தையும், சமூகத்தையும் அவர்களை அறியாமலேயே கெடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.
தமிழகத்திற்கு பெரும்பாலும் ஆந்திராவில் இருந்து தான் கஞ்சா கடத்தி வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. திருச்சி வழியாக இவை நாகை, புதுகை மாவட்டங்களுக்கு சென்று இலங்கைக்கு கடத்தப்படுவதும், மதுரைக்கு கடத்தப்படுவதும்,  அங்கிருந்து வெளிநாடுகளுக்கு செல்வதும் காலம் காலமாக நடந்து வருகிறது. ஒட்டு மொத்த தமிழகம் முழுவதும் ஆங்காங்கே கஞ்சா விற்றவர்களை அன்றாடம் போலீசார் கைது செய்து தான் வருகிறார்கள். இதுபற்றிய செய்திகள் பத்திரிகைகளில் வந்த வண்ணம் உள்ளது. இப்படி கைது செய்யப்படுகிறவர்கள் எய்து  விடப்பட்ட ஒரு அம்பு தான். ஆனால் வில் எங்கே இருக்கிறது. அம்பை எய்தவர்கள் யார் என்றெல்லாம் போலீசார் விசாரிப்பதில்ளையா அல்லது கண்டு கொள்ளாமல் உள்ளனரா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.

அதாவது மூலத்தை ஆராயாமல் முடியை பிடித்து அன்றைய கதையை முடித்து விடுகிறார்கள். இதனால் தான் கஞ்சா தொடர்கதையாகவும், பல அடிதடிகள், கள்ளக்காதல்கள், கொலை வெறியாட்டங்களுக்கு வித்திடுகிறது. ஆந்திராவில் இருந்து  கஞ்சா கடத்தும் கும்பல் தலைவனுடன் திருச்சியை சேர்ந்த ஒரு பெண் போலீஸ் அதிகாரிக்கு தொடர்பு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு அவர் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டும் உள்ளார். இந்த பெண் அதிகாரி மூலம் தான் எந்தவித இடையூறும்  இன்றி ஆந்திராவில் இருந்து திருச்சி வழியாக கஞ்சா தமிழகம் முழுவதும் சென்று வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.கஞ்சா கடத்தலை தடுக்க வேண்டிய போலீஸ் அதிகாரியே அதற்கு உடந்தையாக இருந்து உள்ளார். சில இடங்களில் அரசியல் தலையீடுகள் காரணமாகவும் கஞ்சாவை முற்றிலும் ஒழிக்க முடியாமல் போகிறது. உதாரணமாக இன்னொரு போதை  பொருளான குட்காவை சொல்லலாம். இதில் யார் யாருக்கெல்லாம் தொடர்பு என்பது நாடறிந்த விஷயம்.

இப்படித்தான் கஞ்சா விற்பனையை கிளறினாலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளி வந்து கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட போதை திருச்சியில் மாணவ, மாணவிகளை குறிவைத்து விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்  போதையில் இருந்து ஒரு பிரபல கல்லூரி மாணவி காதலனுடன் பஸ் நிறுத்தத்தில் இருந்த கோலத்தை பார்த்து இன்னொரு காமுகன் மாணவியை தூக்கி சென்ற பலாத்காரம் செய்த கதை திருச்சி நகரம் அறிந்த ஒன்று தான். இதுபோல திருச்சி  மாநகரின் பல கல்லூரி பகுதிகளை குறிவைத்தே கஞ்சா விற்பனையாகிறது. தமிழகத்தை பொறுத்தவரை தேனி மாவட்டம் மலைப்பிரதேசமாக இருப்பதால் அங்கு கஞ்சா சாகுபடி காலம் காலமாக நடந்து வருகிறது. அவை கேரளாவுக்கு கடத்தப்பட்டு அங்கிருந்து சர்வதேச சந்தைக்கும் செல்கிறது. இதையும் முற்றிலுமாக  யாரும் அழிக்கவில்லை. இதற்கான எந்த திட்டமும் போலீசிடம் இருப்பதாகவும் தெரியவில்லை. அவ்வப்போது அழிப்பதும், பின்பு மீண்டும் சாகுபடி செய்வதுமாக இருந்து வருகிறது.

நேற்று திருச்சி போதைப்பொருள் தடுப்பு போலீசாருக்கு ஒரு தகவல் கிடைத்தது. அதன்படி போதை பொருள் தடுப்பு போலீசார் கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த மைலம்பட்டி என்ற கிராமத்தில் கடவூர் வட்டார காங்கிரஸ் தலைவர்  அருணாசலம் என்பவரது தோட்டத்தில் அதிரடி ரெய்டு நடத்தினர். இங்கு 72 சென்ட் பரப்பில் கஞ்சா சாகுபடி செய்யப்பட்டு இன்னும் 1 மாதத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் அவற்றை போலீசார் நேற்று அழித்தனர். இங்கு தேனி  மாவட்டம் வருச நாட்டை சேர்ந்த முருகேசன்(49), கரூர் மாவட்டம் சுக்காம்பட்டி தங்கவேல் ஆகியோர் பிடிபட்டுள்ளனர். மலைப்பிரதேசங்களில், மக்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் சாகுபடி செய்யப்பட்ட கஞ்சா இன்று மக்கள் வசிக்கும் பகுதியிலேயே சாகுபடி செய்யப்பட்டு வரும் அளவுக்கு நிலைமை மோசமாகி உள்ளது. இந்த கஞ்சாவை அடியோடு ஒழிக்க எந்த  திட்டமும் இருப்பதாக தெரியவில்லை. அந்த அளவுக்கு போலீசாரும், கஞ்சா கடத்தல்கார்களும் ஒற்றுமையுடன் இருப்பதாக கஞ்சா வியாபாரிகள் வெளிப்படையாகவே கூறுகிறார்கள்.

திருச்சியை பொறுத்தவரை சத்திரம் பஸ் நிலையம், பாலக்கரை, காந்திமார்க்கெட், காஜாப்பேட்டை, காவிரிக்கரை, ரயில் நிலையம், மத்திய பஸ் நிலையம் ஆகிய இடங்களில் தினமும் விற்பனை நடந்து கொண்டு தான் இருக்கிறது. இதுவரை  கஞ்சா பொடியை பீடி, சிகரெட்ல் வைத்து புகைத்து வந்தார்கள். தற்போது கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை ஓசிபி என்ற ஒரு ஷீட்டில் அடைத்து, அதை நன்றாக சிகரெட் போல் சுருட்டில் பற்ற வைத்து புகைகின்றனர். இதை புகைப்பதால்  தங்களின் உயிருக்கு ஆபத்து என்பதைக்கூட அறியாலம் புகைக்கிறார்கள். குஞ்சாங்ககொல்லை பகுதியில் உள்ள முட்புதரில் கஞ்சாவை இழுத்து கொண்டிருந்த இளைஞர்களுக்கும் அதே பகுதியை சேர்ந்த வாலிபர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஒருவரையொருவர் பயங்கரமாக தாக்கி கொண்ட சம்பவமும் சில  மாதங்களுக்கு முன் நடந்தது. இதில் உச்சக்கட்டமாக திருச்சி கஞ்சா வியாபாரிகள் இடையே நடந்த மோதலில் ஒருவர் கொல்லப்பட்டதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனாலும் கஞ்சா விற்பனையை கண்டு கொள்ளாத போலீசார் மீது  நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் திரண்டு கமிஷனரிடம் மனு அளித்தனர். பல்வேறு வித போதைகளில் திருச்சி இளைஞர்களும், சிறுவர்களும் வழிதவறி தடுமாறுகிறார்கள்.
கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இப்படியே விட்டால் இளைஞர்களின் எதிர்காலம் இருண்டு போகும் என்பதுடன் அவர்களை நம்பியுள்ள குடும்பங்களும் நடுத்தெருவுக்கு வந்துவிடும் பேராபத்தும் உள்ளது.  எனவே, தொட்டிலை ஆட்டிவிட்டு குழந்தையும் கிள்ளுகிற கதை போல் இல்லாமல், போதை பொருட்களை ஒழிப்பதில் ஒவ்வொருவருக்கும் சமூக பொறுப்பு உள்ளது என்பதை உணர்ந்து போலீசார் செயல்பட வேண்டும் என்பதே அனைவரின்  எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags : robbery drug addicts ,fortresses ,Hilltop , The future of dark youth: Hilltop fortresses become murderous, robbery drug addicts
× RELATED நெடுஞ்சாலைத்துறையில் காஞ்சிபுரம்,...