×

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா: எல்லை தெய்வ வழிபாடு இன்று தொடக்கம்...1ம் தேதி கொடியேற்றம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா வரும் 1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று அதிகாலை 5.30 மணிக்கு மேல் 7.05 மணிக்குள், அண்ணாமலையார் சன்னதி எதிரில் அமைந்துள்ள தங்க கொடி மரத்தில் கொடியேற்றப்படும். தொடர்ந்து, காலையில் பஞ்சமூர்த்திகள் கண்ணாடி விமானங்களில் பவனியும், இரவில் அதிகார நந்தி வாகனத்தில் சுவாமி பவனியும் நடைபெறும். வரும் டிச. 2ம்தேதி காலை தங்க சூரிய பிரபை வாகனத்தில் சந்திரசேகரரும், இரவு இந்திர விமானங்களில் பஞ்சமூர்த்திகளும் பவனி வருகின்றனர்.

3ம் தேதி காலை நாக வாகனத்தில் சந்திரசேகரரும், இரவு சிம்ம வாகனம், வெள்ளி அன்ன வாகனங்களில் பஞ்சமூர்த்திகளும் பவனி வருகின்றனர். 4ம்தேதி காலை நாக வாகனத்தில் சந்திரசேகரரும், இரவு வெள்ளி கற்பக விருட்ச வாகனத்தில் அண்ணாமலையாரும் பவனி வருகின்றனர்.5ம் தேதி காலை கண்ணாடி ரிஷப வாகனத்தில் சந்திரசேகரரும், இரவு பெரிய ரிஷப வாகனத்தில் அண்ணாமலையாரும் பவனி வருகின்றனர். 6ம்தேதி காலை வெள்ளி யானை வாகனத்தில் சந்திரசேகரரும், 63 நாயன்மார்கள் வீதி உலாவும், இரவு வெள்ளி ரதத்தில் அண்ணாமலையாரும் வெள்ளி இந்திர விமானத்தில் பஞ்சமூர்த்திகள் பவனி வருகின்றனர்.

முக்கிய நிகழ்ச்சியான பஞ்சமூர்த்திகள் தேரோட்டம் 7ம்தேதி நடைபெறும். அன்று காலை முதல் இரவு வரை 5 ரதங்கள் அடுத்தடுத்து மாடவீதிகளில் பவனி வரும். 8ம் தேதி காலை குதிரை வாகனத்தில் சந்திரசேகரரும், மாலை பிச்சாண்டவர் உற்சவமும், இரவு குதிரை வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் பவனியும் நடைபெறும். 9ம் தேதி காலை புருஷாமுனி வாகனத்தில் சந்திரசேகரரும், இரவு கைலாச, காமதேனு வாகனங்களில் பஞ்சமூர்த்திகளும் பவனி வருகின்றனர். நிறைவாக 10ம்தேதி அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபமும், அன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படும். மகா தீப பெருவிழாவில், சுமார் 25 லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் கார்த்திகை தீபத்திருவிழாவின் தொடக்கமாக, காவல் எல்லை தெய்வ வழிபாடு நடைபெறுவது வழக்கம். தீபத்திருவிழா எந்த இடையூறும் இல்லாமல், பக்தர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் நடக்க வேண்டி தொடர்ந்து மூன்று நாட்கள் எல்லை தெய்வ வழிபாடு நடைபெறும். அதன்படி துர்க்கை அம்மன் உற்சவம் இன்றிரவு நடக்கிறது. அதையொட்டி, அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு பூஜைகள் இன்று அதிகாலை நடந்தது. சின்னக்கடை வீதியில் உள்ள துர்க்கை அம்மன் கோயிலில் இருந்து, இரவு 8 மணி அளவில் காமதேனு வாகனத்தில் துர்க்கை அம்மன் பவனி வருகிறார். நாளை சிம்ம வாகனத்தில் பிடாரி அம்மன் பவனியும், நாளை மறுதினம் வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகர் உற்சவமும் நடைபெறும்.

Tags : Deepa Tiruvannamalai ,Carnatic ,Deepa Thiruvathirai ,Thiruvannamalai , Carnatic Deepa Thiruvathirai at Thiruvannamalai
× RELATED டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது:...