×

வருசநாடு அருகே சிதிலமடைந்த அரசு பள்ளி மேற்கூரை: திறந்தவெளியில் மாணவர்கள் கல்வி கற்கும் அவலம்

வருசநாடு: மயிலாடும்பாறை அருகே உள்ள முத்தாலம்பாறையில் அரசு ஆரம்பப் பள்ளியின் மேற்கூரை மற்றும் சுவர்கள் சேதமடைந்த நிலையில் உள்ளதால் மாணவர்கள் திறந்தவெளியில் அமர்ந்து கல்வி கற்கின்றனர். சேதமடைந்த மேற்கூரை மற்றும் சுவர்களை உடனடியாக சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம், மயிலாடும்பாறை அருகே முத்தாலம்பாறை கிராமத்தில் அரசு ஆரம்பப் பள்ளி உள்ளது. இங்கு 40க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி கற்று வருகின்றனர். 2 ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். இந்த பள்ளியின் மேற்கூரை ஓடுகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. சேதமடைந்த ஓடுகளின் மீது தார்ப்பாய்களை போட்டி மூடினர்.  தற்போது தார்ப்பாய்களும் கிழிந்து விட்டதால் மழை பெய்யும் போது, வகுப்பறைகளுக்குள் தண்ணீர் கொட்டுகிறது. மழைநீர் இறங்கி பள்ளியின் சுவர்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
 
பள்ளியின் சுவர் இடிந்து விழும் நிலையில் உள்ளதால், மாணவர்கள் திறந்தவெளியில் அமர்ந்து கல்வி கற்கின்றனர். திறந்த வெளிகளில் மாணவர்கள் அமர வைக்கப்படுவதால், மழை பெய்யும் போது வேறு வழியின்றி பள்ளிக்கு விடுமுறை அளிக்க வேண்டிய அவலம் நிலவுகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. இதனால் மாணவ, மாணவிகள் அச்சத்துடன் பள்ளிக்கு சென்று வருகின்றனர். இதன் காரணமாக அருகில் உள்ள கிராம பள்ளிகளில் தங்களது குழந்தைகளை பெற்றோர்கள் சேர்த்து வருகின்றனர். எனவே மாணவ, மாணவிகள் நலன் கருதி சேதமடைந்த நிலையில் உள்ள பள்ளியின் மேற்கூரை மற்றும் வகுப்பறை சுவர்களை உடனடியாக சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Government school ,Varshanadu , Varusanad, Government School, Roof, Students
× RELATED அரசு பள்ளி மாணவர்களின் நோட்டு புத்தகம் திருட்டு: மர்ம நபர்களுக்கு வலை