×

இசிஆரில் விதிமீறல் கட்டிடங்களை அகற்ற கோரிய வழக்கு: மாநகராட்சி, பெருநகர வளர்ச்சி குழுமத்திற்கு தலா ரூ. 25,000 அபராதம் விதித்தது ஐகோர்ட்

சென்னை: சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் விதிமீறல் கட்டிடங்களை அகற்றகோரிய வழக்கில் முறையாக ஒத்துழைப்பு அளிக்காத சென்னை மாநகராட்சி மற்றும் பெருநகர வளர்ச்சி குழுமத்திற்கு தலா 25,000 ரூபாய் அபராதம் விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உத்தண்டியில் கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு ஒப்புதல் வழங்க மறுத்த சென்னை மாநகராட்சியின் உத்தரவை எதிர்த்து ரங்கநாதன் உட்பட 5  பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். மேலும், ஏற்கனவே மாநகராட்சி ஒப்புதல் இல்லாமல் சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் விதிமீறல் கட்டிடங்களை சினிமா பிரபலங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் உட்பட 138 பேர் ஒப்புதல் பெறாமல் வீடு கட்டியிருப்பதாக பதில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 

முன்னதாக இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கடலோர ஒழுங்குமுறை மண்டலத்தின் விதிகளுக்கு உட்பட்டு அனுமதி பெறாமல் எந்த கட்டிடங்களும் இருக்கக்கூடாது என நீதிபதிகள் அறிவுறுத்தினார். கிழக்கு கடற்கரை சாலையில் நீலாங்கரை முதல் மாமல்லபுரம் வரை சட்டவிரோதமாக கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதா? என கண்டுபிடிக்க வேண்டும் எனவும் முதற்கட்டமாக நீலாங்கரை முதல் உத்தண்டி வரை உள்ள கட்டிட விவரங்களை புகைப்படம் மற்றும் ஆவண ஆதாரங்களுடன்  அளிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி,  பெருநகர வளர்ச்சி குழுமத்திற்கு உத்தரவிட்டனர். மேலும் விதிமீறல் கட்டிடங்களை எந்தெந்த பகுதிகளில் யார், யார் ? கட்டுமானங்களை மேற்கொண்டுள்ளனர் என்றும் அந்த கட்டுமானங்களுக்கு மின்னிணைப்பு, குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.

மேலும் கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளைமீறி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், அவற்றை இடித்து செல்லவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், இன்று நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசரணைக்கு வந்தது. அப்பொழுது, முட்டுக்காட்டில் விதிமீறி கட்டப்பட்டுள்ள ஒரு தனியார் சொகுசு பங்களாவிற்கு மின்னிணைப்பு மற்றும் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டிருப்பதாக சென்னை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், உத்தண்டியின் கடற்கரை பகுதியில் கடந்த 2018ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் 18க்கும் மேற்பட்ட வீடுகள் விதிகளை மீறி கட்டப்பட்டிருப்பதாக புகார் தெரிவித்தார். இதையடுத்து, இந்த வழக்கில் அரசு தரப்பில் முறையாக ஒத்துழைப்பு வழங்கவில்லை என நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

மேலும் விதிமீறல் கட்டிடங்கள் தொடர்பான வழக்கில் பதிலளிக்க அரசு தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது. ஆனால் அரசின் பதிலை ஏற்க மறுத்த நீதிபதிகள், முறையாக ஒத்துழைப்பு வழங்காத சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திற்கு தலா 25,000 ரூபாய் அபராதம் விதித்தும் உத்தரவிட்டனர். மேலும், வழக்கின் அடுத்த விசாரணையின் போது சென்னை மாநகராட்சி ஆணையர், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் உறுப்பினர் செயலர், வீட்டுவசதி வாரிய செயலர் ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். இதையடுத்து வழக்கின் விசாரணையை டிசம்பர் 20ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.

Tags : removal ,infringement buildings ,ICR ,Icort ,Infringement Buildings for Case , Chennai East Coast Road, Violation, Buildings, Corporation, Metropolitan Development Corporation, Penalties, Chennai High Court
× RELATED தெற்காசியாவில் முதல்முறையாக ரோபோ...