×

முதல் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட ஜெர்மன் கையெறி குண்டு அமெரிக்காவில் கண்டுபிடிப்பு

நியூயார்க்: அமெரிக்காவில் ஆற்றில் மேக்னட் பிஷ்சிங்கில் ஈடுபட்டவருக்கு முதல் உலகப்போரில் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் ஜெர்மனி கையெறிகுண்டு கிடைத்தது. ஆழமான நீர் நிலைகளில் புதையுண்டு கிடக்கும் பழங்கால பொருட்களை சேகரிப்பதை சிலர் பொழுது போக்காக கொண்டுள்ளனர். மேக்னட் பிஷ்சிங் என்ற பெயரில், சக்திவாய்ந்த காந்தங்களை பயன்படுத்தி பொருட்களை வெளியே எடுக்கின்றனர். அமெரிக்கா போன்ற சில நாடுகளில் மேக்னட் பிஷ்சிங் சட்டப்பூர்வமாக உள்ளது. இந்நிலையில், அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தின் கிராண்ட் ராபிட்ஸ் பகுதியைச் சேர்ந்த ஜோசப் அலெக்சாண்டர், நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள கிராண்ட் ஆற்றில் தேடலில் ஈடுபட்டிருந்தார். அப்போது நீருக்குள் தொங்கவிட்டிருந்த தனது காந்தத்தை இழுத்த போது அதில் கனமான இரும்புப்பொருள் ஒன்று சிக்கியது.

அது என்னவென்று அறியாத அலெக்சாண்டர் அதை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். அது கையெறிகுண்டு என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்தனர். இதையடுத்து அலெக்சாண்டர் போலீசாருக்கு தகவல் அளித்தார். பின்னர் போலீசார் அதை சோதனைக்கு கொண்டு சென்றனர். இது குறித்து போலீசார் கூறுகையில், இது முதல் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட ஜெர்மன் கையெறி குண்டு வகை ஆகும். இது பாதுகாப்பாக சோதனைக்கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது. மிக நீண்டகாலமாக நீரில் இருந்ததால் எறிகுண்டு ஆபத்தானதாக இருக்காது என தோன்றினாலும் அதை பாதுகாப்பாக அதிகாரிகள் கையாண்டு வருகின்றனர். விரைவில் அது செயலிழக்கச் செய்யப்படும் என தெரிவித்தனர்.

Tags : United States ,World War I ,German , discovery,German grenades,World War I,United States
× RELATED அமெரிக்காவில் ரோபோ நாய் அறிமுகம்…!!