×

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்!

டெல்லி: முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் சிறைக்கு சென்று இன்றுடன் 100 நாட்கள் ஆகி விட்ட நிலையில், ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை, உச்சநீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது. ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்து டெல்லி திகார் சிறையில் அடைத்தனர். சிபிஐ-யால் கைது செய்யப்பட்ட வழக்கில் அக்டோபர் 22ம் தேதி சிதம்பரத்திற்கு ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால், அதே வழக்கில் சட்டவிரோத பண பரிமாற்ற சட்டத்தின் கீழ் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கடந்த மாதம் 16-ம் தேதி ப.சிதம்பரத்தை கைது செய்தனர். நீதிமன்றக்காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரம், தனக்கு ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, ஜாமீன் வழங்க மறுத்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் தரப்பில் ஜாமின் கோரி மேல்முறையீடு செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை இன்று நிறைவடைந்தது.

இன்று நடந்த இறுதிக்கட்ட வாதத்தின்போது, ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் 16 நிறுவனங்களை ஆய்வு செய்ததில், ப.சிதம்பரத்திற்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாகவும் அமலாக்கத்துறை கூறியது. இதையடுத்து அமலாக்கத்துறை தரப்பில் சீலிட்ட கவர்களில் தாக்கல் செய்யப்பட்ட 3 செட் அறிக்கைகளை பாதுகாப்பாக வைக்கும்படி பதிவகத்திற்கு உத்தரவிட்ட நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.



Tags : INX Media ,Supreme Court ,hearing ,PC Chidambaram , INX Media, PC Chidambaram, Bail, Judgment, Enforcement Department, Supreme Court
× RELATED புதிய தலைமை செயலக கட்டிட வழக்கை அரசு...