×

36வது மாவட்டமாக உதயமானது ராணிப்பேட்டை: அந்நிய செலாவணியை அதிகம் ஈட்டித்தரும் மாவட்டம் என முதல்வர் பேச்சு

ராணிப்பேட்டை: தமிழகத்தின் 36வது மாவட்டமாக ராணிப்பேட்டை உதயமாகியுள்ளது. இதற்கான தொடக்கத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியானது ராணிப்பேட்டையில் உள்ள நோய் தடுப்பு மைய வளாகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வில், தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் கே.சி.வீரமணி, ஆர்.பி.உதயகுமார், மூத்த அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன், தங்கமணி, செல்லுராஜு ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். மேலும் எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏ-க்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி வேலூர் மாவட்டத்தை 3ஆக பிரித்து திருப்பத்தூர், ராணிப்பேட்டை என இரண்டு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் 1797.92 சதுர கி.மீட்டர் பரப்பளவுடன் 11 லட்சத்து 11 ஆயிரத்து 812 மக்கள் தொகை கொண்டது. திருப்பத்தூர், வாணியம்பாடி வருவாய் கோட்டங்களுடன் திருப்பத்தூர், வாணியம்பாடி, நாட்றாம்பள்ளி, ஆம்பூர் வருவாய் வட்டங்கள், 15 வருவாய் உள்வட்டங்கள் 195 வருவாய் கிராமங்கள், 207 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் 2234.32 சதுர கி.மீட்டர் பரப்பளவுடன் 12 லட்சத்து 10 ஆயிரத்து 277 மக்கள் தொகை கொண்டது. ராணிப்பேட்டை, அரக்கோணம் வருவாய் கோட்டங்களுடன் வாலாஜா, ஆற்காடு, நெமிலி, அரக்கோணம் வருவாய் வட்டங்கள், 18 வருவாய் உள்வட்டங்கள், 330 வருவாய் கிராமங்களுடன் 288 கிராம ஊராட்சிகள் இடம் பெற்றுள்ளன. வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம் வருவாய் கோட்டமும் கே.வி.குப்பம் என்ற புதிய வருவாய் வட்டமும் ஏற்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் தான், வேலூரை பிரித்து உருவாக்கப்பட உள்ள இந்த 2 மாவட்டங்களும் இன்று தொடங்கி வைக்கப்பட்டது.

முதல்வர் பழனிசாமி உரை:

ராணிப்பேட்டையை புதிய மாவட்டமாக தொடங்கி வைத்த பின்னர் முதல்வர் பழனிசாமி உரையாற்றினார். அதில், அந்நிய செலாவணியை அதிகம் ஈட்டித்தரும் மாவட்டமாக ராணிப்பேட்டை  மாவட்டம் உள்ளது. இது முழுக்க முழுக்க தொழில் நகரம் என்றால் மிக பொருத்தமாக இருக்கும். மத்திய அரசின் மஹாரத்னா அந்தஸ்து பெற்ற bhel தொழிற்சாலை மற்றும் அதனை சார்ந்த 500க்கும் மேற்பட்ட குறு, சிறு தொழிற்சாலைகள் இந்த மாவட்டத்தில் அமைந்துள்ளன என்று அவர் கூறினார். நூற்றாண்டு புகழ் வாய்ந்த பீங்கான் தொழிற்சாலை, சிட்கோ தொழிற்பேட்டை மற்றும் ரசாயன தொழிற்சாலைகள் என 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பை கொடுக்கும் மாவட்டம் ராணிப்பேட்டை என்று கூறினார்.

Tags : 36th District Ranipetta ,Ranipettai ,district ,district chief foreign exchange ,earner ,talks , Ranipet, district, sunrise, CM, palanicami speech
× RELATED ராணிப்பேட்டை மாவட்டத்தில்...