×

சந்தனம், ஜவ்வாது மணக்கும் மாவட்டமாக திருப்பத்தூர் மாவட்டம் உதயமாகியுள்ளது: முதல்வர் எடப்பாடி பழனிசாமி உரை

திருப்பத்தூர்: சந்தனம், ஜவ்வாது மணக்கும் மாவட்டமாக திருப்பத்தூர் மாவட்டம் உதயமாகியுள்ளது முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். வேலூர் மாவட்டத்த 3 ஆக பிரிப்பதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை என மூன்றாக பிரித்து கடந்த 12ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. இந்த நிலையில், திருப்பத்தூரை தலைமையிடமாகக் கொண்ட புதிய மாவட்டத்தை, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் துணைமுதல்வர் ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்துகொண்டனர். வேலூர் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு புதிய மாவட்டமாக உருவாகியிருக்கும் திருப்பத்தூர் இன்று முதல் நிர்வாக ரீதியில் பணிகளை தொடங்குகிறது.

இந்த நிலையில் இந்நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திருப்பத்தூர் மாவட்டம் உதயமாகியதற்கு பெரும் மகிழ்ச்சியடைகிறேன். திருப்பத்தூர் பெரிய மலைகளால் சூழப்பட்டுள்ளது. சந்தனம், ஜவ்வாது மணக்கும் மாவட்டமாக திருப்பத்தூர் மாவட்டம் உதயமாகியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆன்மிக தலங்கள், சுற்றுலா தலங்கள் கணிசமாக உள்ளன. திருப்பத்தூர் மாவட்டத்திற்கு ஏராளமான வரலாற்று சிறப்புகள் உண்டு. அவற்றில் ஆம்பூர் பிரியாணி உலகப் புகழ்பெற்றது. இந்த வழியாக செல்வோர் தவறாமல் சாப்பிட்டு விட்டு செல்லும் அளவிற்கு சிறப்பு வாய்ந்தது. இந்த மாவட்டத்தின் தலைநகர் திருப்பத்தூர் நகரம். இதன் பரப்பளவு 17.98 சதுர கி.மீ ஆகும். மக்கள்தொகை 11 லட்சத்து 11,812 ஆகும். திருப்பத்தூர், வாணியம்பாடி என 2 வருவாய் கோட்டங்கள், திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர், நாட்றாம்பள்ளி ஆகிய 4 வட்டங்களும், 15 உள் வட்டங்களும் செயல்படும்.

திருப்பத்தூர் முதன்மை சாலையை ஒட்டியுள்ள 20 ஏக்கர் பரப்பளவில் ஒருங்கிணைந்த அரசு அலுவலகங்கள் கட்டித்தரப்படும். திருப்பத்தூர் சுற்றுவட்டாரங்களில் வேளாண்மை கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும். ஆசியாவின் மிகப்பெரிய சந்தன கிடங்கு திருப்பத்தூரில் அமைக்கப்பட உள்ளது. அரசின் சலுகைகள் எளிதாக கிடைக்கும் வகையில் திருப்பத்தூர் மாவட்டம் பிரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளதால் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவது சரியல்ல என்ற பொய்யான கருத்தை பரப்பி வருகின்றனர். ஏற்கனவே மறுவரையறை செய்யப்பட்ட வார்டுகளின் அடிப்படையிலேயே உள்ளாட்சி தேர்தல் நடைபெறும், என்று கூறியுள்ளார். மேலும் பேசிய அவர், சுய உதவிக் குழுக்களில் உள்ள பெண்கள் சொந்த காலில் நிற்க உதவிய அரசு அதிமுக அரசு. தேவையான இடங்களில் துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டு மின் தடையில்லாத நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.


Tags : district ,CM Edappadi Palanisamy ,Thiruppathur ,Sandanam ,Thiruppattur , Chief Minister Palanisamy, Tirupattur, District,Local Elections
× RELATED பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதியில்...