×

பட்டய தேர்வு முடிவுகளில் குளறுபடி: மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிக்க டிச.3ம் தேதி வரை அவகாசம்

நாமக்கல்: ஆசிரியர் பட்டய தேர்வு முடிவுகளில் குளறுபடி ஏற்பட்டதால், மாணவர்கள் மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க, டிசம்பர் 3ம்தேதி வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும், கடந்த ஜூன் மாதம் தொடக்கக்கல்வி ஆசிரியர் பட்டயத்தேர்வுகள் நடைபெற்றது. இதில் நாமக்கல் மாவட்டத்தில் இந்த தேர்வினை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் எழுதினர். தேர்வு முடிவுகள், கடந்த மாதம் வெளியானது. இந்த தேர்வு முடிவுகளில் பல்வேறு குளறுபடிகள் நடந்து இருப்பதாக, தேர்வு எழுதிய முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகள் குற்றம் சாட்டினர். நாமக்கல் மாவட்டத்தில் தேர்வு எழுதிய 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியருக்கு ஒற்றை இலக்கத்தில் மதிப்பெண் வந்துள்ளது. ஒரு கல்லூரியில் தேர்வு எழுதிய 45 மாணவ, மாணவியரில் ஒருவர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளார். மற்ற அனைத்து மாணவர்களும் ஒற்றை இலக்கத்தில் மதிப்பெண் பெற்றுள்ளனர்.

இதுபற்றி கடந்த இரு வாரத்துக்கு முன் கலெக்டரிடம் மாணவ, மாணவிகள் புகார் மனு அளித்தனர். அதில், விடைத்தாள் நகல் பெற விண்ணப்பிக்க போதிய அவகாசம் அளிக்கவில்லை. எனவே, எங்களது விடைத்தாளை, மறுமதிப்பீடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் நேற்று, நாமக்கல் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் மணிவண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: விடைத்தாள்களின் நகல் பெற, அக்டோபர் 30ம் தேதி முதல் நவம்பர் 6ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த நாட்களில் விண்ணப்பித்த தேர்வர்களின் விடைத்தாள்களின் நகல்கள், வரும் 30ம் தேதி வரை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவ, மாணவிகள் உரிய கட்டணம் செலுத்தி, டிசம்பர் 3ம் தேதி வரை  இணையதளம் மூலம்  விண்ணப்பிக்கலாம். ஒரு பாடத்திற்கு ரூ.205 செலுத்த வேண்டும். மறுமதிப்பீட்டிற்கு ஒரு பாடத்துக்கு ரூ.505 செலுத்த வேண்டும். இதற்கான விண்ணப்பங்கள் இணையதளத்தில் உள்ளது. மேலும் விபரங்களை, ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags : Chartered Examination
× RELATED வாக்கு எண்ணிக்கை நாளில் ரொம்ப உஷாராக...