×

பழுதான சாலையை சீரமைக்கக்கோரி கூடலூர் அருகே சாலையில் நாற்று நடும் போராட்டம்

கூடலூர்: பழுதான சாலையை சீரமைக்கக்கோரி வெட்டுக்காடு - காஞ்சிமரத்துறை சாலையில் அப்பகுதி மக்கள் நாற்று நடும் போராட்டம் நடத்தினர். கூடலூர் நகராட்சியின் 21வது வார்டு பகுதியான காஞ்சிமரத்துறை பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. விவசாயத்தை பிரதானமாக கொண்ட இந்த குடியிருப்பு பகுதியில் மக்களின் அடிப்படை வசதிகளான கழிப்பறை, சாலை, குடிநீர்  மற்றும் மின்சார வசதி முறையாக இல்லை.

இதுகுறித்து காஞ்சிமரத்துறை பொதுமக்கள் சார்பில் கூடலூர் நகராட்சியில் ஏராளமான மனு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத்தெரிகிறது. இந்நிலையில் கடந்த செப்.24ம் தேதி கூடலூரில் இருந்து காஞ்சிமரத்துறை வரை சாலை மிகவும் பழுதடைந்துள்ளது. அவசர காலங்களில் நோயாளிகளை மருத்துவ சிகிச்சைக்காக கூடலூர் கொண்டு செல்ல மிகவும் சிரமமாக உள்ளது. மேலும் குழந்தைகள் பள்ளிகளுக்கு சென்று வரவும் பொதுமக்கள், வியாபாரிகள், விவசாயிகள் கூடலூர் சென்று வரவும் வெகு நேரமாகிறது. எனவே. பழுதடைந்துள்ள சாலையை உடனடியாக சரி செய்ய வேண்டும் என சாலை மறியல் போரட்டம் நடத்தினர்.

அப்போது பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய நகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்தனர். ஆனால் இதுவரையிலும் அதற்கான ஏற்பாடுகள் செய்யவில்லை எனத்தெரிகிறது. இதனால் அதிகாரிகளின் மெத்தனப்போக்கை கண்டித்து  வெட்டுக்காடு - காஞ்சிமரத்துறை சாலையில், சாலை சேதமடைந்து மழைநீரால் சேறாக கிடந்த பகுதியில், அப்பகுதியைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும் நாற்று நடும் போராட்டம் நேற்று நடத்தினர்.

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த பாண்டியம்மாள் கூறுகையில், இப்பகுதியல் 10 ஆயிரம் ஏக்கருக்குமேல் தென்னை, வாழை, நெல் விவசாயம் செய்து வருகிறோம். ஆனால், எங்கள் பகுதிக்கு முறையான சாலை வசதி இல்லை. இரண்டுமாதம் முன்பு இப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தியபோது நகராட்சி அதிகாரிகள் வந்து புதுரோடு போட ஏற்பாடு செய்வதாகக்கூறி சென்றனர். இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் இல்லை. அதனால் நாற்றுநடும் போராட்டம் நடத்தி உள்ளோம். இனியும் அதிகாரிகள் தாமதப்படுத்தினால் எங்கள் ஆதார், ரேஷன்கார்டு, வாக்காளர் அட்டை மூன்றையும் கலெக்டரிடம் ஒப்படைத்து விட்டு தொடர் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளோம் என்றார்.

Tags : road ,Koodalur ,spam road , Struggle
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி