×

குடிகாரர்களின் கூடாரமாக மாறிய வாரச்சந்தை: கட்டி முடித்தும் திறக்கப்படாத அவலம்

காரைக்குடி: காரைக்குடி அருகே பள்ளத்தூரில் சந்தைபோட கடை கட்டி முடித்தும் இதுவரை பயன்பாட்டுக்கு திறக்காததால் வியாபாரிகள் சேறு சகதியில் கடை போடும் அவலம் உள்ளது. தவிர கடைகளை சமூகவிரோதிகள் கூடாரமாக பயன்படுத்தி வருகின்றனர். காரைக்குடி அருகே பள்ளத்தூர் பேரூராட்சியில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உள்ளனர். மக்களின் தேவைக்கு என பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ஒன்றரை ஏக்கர் பரப்பில் சந்தை ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சந்தைக்கு பள்ளத்தூர், கொத்தமங்கலம், செட்டிநாடு, கானாடுகாத்தான், புதுவயல், கொத்தரி, மணச்சை, வடகுடி, சூரக்குடி, பலவான்குடி உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 3000க்கும் மேற்பட்ட மக்கள் காய் மற்றும் மீன், இறைச்சி வாங்க வருகின்றனர்.

மாவட்டத்தில் அனைத்து பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் கடை போட்டு வருகின்றனர். 100 ஆண்டுகள் பழமையான இந்த சந்தையில் மண் தரையிலேயே கடைகள் நடத்தி வருவதால் மழை நேரத்தில் மக்கள் பொருட்கள் வாங்க முடியாத நிலை ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ரூ.1 கோடியே 50 லட்சத்தில் 105 கடைகள் கட்டப்பட்டு பணிகள் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு முடிந்துள்ளது. பணிமுடிந்தும் இதுவரை மக்கள் பயன்பாட்டுக்கு என கட்டிடத்தை நிர்வாகம் கொண்டு வரவில்லை. முதல்வர் திறக்கவேண்டும் என்பதற்காக கட்டிடம் திறக்கப்படாமல் அப்படியே கிடப்பில் போட்டுள்ளனர். இக்கட்டிடத்தை தற்போது குடிமகன்கள் பாராக பயன்படுத்தி வருகின்றனர். தவிர பல்வேறு சமூகவிரோத செயல்கள் அரங்கேறும் இடமாக மாறி வருகிறது. கட்டிடம் கட்டியும் பயன்பாட்டுக்கு வராததால் வியாபாரிகள் சேறும், சகதியிலும் கடை நடத்தி வருகின்றனர். இக்கட்டிடத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவரக் கோரி பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திடம் கூறியும் கண்டுகொள்ளவில்லை என மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

Tags : Weeknd Becomes the Tent of Drunkenness Weekly , Weekly market
× RELATED தமிழிசையை அமித்ஷா கண்டித்த விவகாரத்தில் காங். எம்.பி. கண்டனம்!