×

நெல்லை - நாகர்கோவில் இடையே பராமரிப்பு இல்லாத 4 வழிச்சாலையில் அதிகரிக்கும் விபத்துகள்

நாங்குநேரி: நெல்லை - நாகர்கோவில் இடையே 4 வழிச்சாலையில் போதிய பராமரிப்பு இல்லாததால் விபத்துகள் அதிகரித்து வருவதாக வாகன ஓட்டுநர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். நெல்லையில் இருந்து நாகர்கோவில் செல்லும் நான்குவழி தேசிய நெடுஞ்சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. எந்நேரமும் போக்குவரத்து நிறைந்து பரபரப்பான சாலையாகவே காட்சியளிக்கிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான வாகனங்கள், இச்சாலையில் பயணிக்கின்றன. கடந்த 2010ம் ஆண்டு நெல்லை - நாகர்கோவில் இடையே தேசிய நெடுஞ்சாலை திறக்கப்பட்டது. ஆனால் அதன் பிறகு சரியான முறையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என்பதே வாகன ஓட்டுநர்களின் ஆதங்கமாக உள்ளது. இதனால் சாலைகளில் மேடு, பள்ளங்கள் ஏற்பட்டு அடிக்கடி வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன.

குறிப்பாக நெல்லையில் இருந்து காவல்கிணறு வரை, பல்வேறு இடங்களில் தினமும் வாகன விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள், பொருட்சேதம் ஏற்படுவது தொடர் கதையாகி வருகிறது. இந்த சாலையில் அமைக்கப்பட்டுள்ள பாலங்கள், முறையாக பராமரிக்கப்படாததால் அத்தி, அரசு, வேம்பு, மஞ்சனத்தி, ஆலமரங்கள் ஆழமாக வேர்விட்டு வளர்ந்திருக்கின்றன. இதனால் தொங்குதோட்டம் போன்று நெடுஞ்சாலை பாலங்கள் காட்சியளிக்கின்றன. இந்த மரங்களால் பாலத்தின் சுவர்களில் விரிசல் விழ தொடங்கியுள்ளன. இதனால் பாலங்கள் வலுவிழக்கும் அபாயநிலையை எட்டியுள்ளன மேலும் மேம்பாலங்களில் செடி, கொடிகள் படர்ந்து அடர்ந்த வனம்போல காட்சியளிக்கின்றன. ஆங்காங்கே மதுபாட்டில்கள் மற்றும் விபத்திற்குள்ளான வாகனங்களில் உடைந்த கண்ணாடி சிதறல்கள் குவிந்து கிடக்கின்றன. விபத்தில் சிக்கி கீழே விழுவோரை இந்த கண்ணாடித் துண்டுகள் மேலும் காயப்படுத்துகின்றன. மழைநீர் வடிகால்கள் முறையாக சுத்தம் செய்யப்படாததால் மண் மற்றும் குப்பைகள் நிறைந்து மழைநீர் வெளியேற முடியாமல் சாலைகளின் நடுவே ஓடுகிறது இதில் வேகமாக வந்து  சிக்கும் வாகனங்கள் நிலைதடுமாறி ரோட்டில் கவிழும் அவலநிலை உள்ளது.

நெடுஞ்சாலை பாலத்தில் விபத்திற்குள்ளாகும் வாகனங்கள் மோதி பெயர்ந்த கான்கிரீட் கைப்பிடி சுவர்கள், கைப்பிடிகளுடன் தொங்கி கொண்டிருக்கின்றன. இது அந்த வழியாக பாலத்தின் பக்கவாட்டில் உள்ள அணுகுசாலையில் செல்லும் வாகனங்களையும் பொது மக்களையும் அச்சுறுத்துகின்றன. மேலும் ஜோதிபுரம், பொன்னாக்குடி, பாணான்குளம், நாங்குநேரி, தளபதிசமுத்திரம், வள்ளியூர் உள்பட பல்வேறு இடங்களில் கோடிக்கணக்கில் செலவிட்டு அமைக்கப்பட்ட உயர்மின் கோபுர விளக்குகள் 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை. இதனால் இரவு நேரங்களில் நான்கு வழிச்சாலையில் மக்கள் கூடும் பகுதி இருளடைந்து கிடக்கிறது. இதன் விளைவாக பல்வேறு சமூகவிரோத செயல்கள் நடக்கின்றன.

பல்வேறு இடங்களில் சாலையின் நடுவே உள்ள தடுப்புகள் பெயர்ந்து சரிந்து சாலையில் நீட்டிக் கொண்டிருக்கிறது. மேலும் பல்வேறு இடங்களில் வாகன ஓட்டிகளுக்கான அறிவிப்பு பலகைகள் முறையாக வைக்கப்படவில்லை ஊர்களை அறிவிக்கும் பெயர் பலகைகளும் சரிவர வைக்கப்படவில்லை இதனால் வெளியூர் வாகன ஓட்டிகள் சாலையில் நின்று பல்வேறு ஊர்களுக்குச் செல்லும் வழிகளை கேட்டு செல்லும் அவலநிலை உள்ளது. நாங்குநேரி உள்ளிட்ட ஊர்களில் அணுகு சாலைகளில் முறையான வேகத்தடைகள் அமைக்கப்படாததாலும், அவற்றில் முறையான வர்ணம் பூசாததாலும் வாகனங்கள் அடிக்கடி மோதி விபத்துக்குள்ளாகின்றன. எனவே 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் பராமரிக்கப்படாத நெல்லை - நாகர்கோவில் 4 வழி தேசிய நெடுஞ்சாலையில் முறையாக பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags : Nagercoil 4 ,way road , 4 way road
× RELATED செங்கல்பட்டில் தலையில் பொம்மை...