×

சுயமுகவரியை தொலைத்து 217 ஆண்டுகளுக்கு பின்னர் மறுபிறப்பெடுத்தது திருப்பத்தூர் மாவட்டம்

தமிழகத்தின் 32 மாவட்டங்களில் மிகப்பெரிய மாவட்டம் வேலூர் மாவட்டம். இந்த மாவட்டம் சென்னை அருகே உள்ள அரக்கோணத்தில் தொடங்கி கிருஷ்ணகிரி எல்லையான கந்திலி வரை சுமார் 230 கிலோ மீட்டர் தூரம் கொண்ட 13 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய மாவட்டமாகும். ‌ இதனால் நிர்வாக வசதிகளுக்காகவும், மக்களின் கஷ்டங்களை போக்கவும் வேலூரை இரண்டாக பிரித்து திருப்பத்தூரை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் அமைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக திமுக, பாமக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் குரல் எழுப்பி வந்தன. இந்நிலையில் தமிழக அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி திருப்பத்தூரை தனி மாவட்டமாக அறிவித்தது.  இதற்கு நல்ல வரவேற்பு பெற்று பொதுமக்களும் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம்  கடந்து வந்த பாதை

ஆங்கிலேயர் காலத்திலேயே திருப்பத்தூர் தனி மாவட்டமாக இருந்தது. 1790ம் ஆண்டு நவம்பர் 30ம் தேதி திருப்பத்தூர், வாணியம்பாடி பகுதிகளை உள்ளடக்கிய மாவட்டமாக உருவாக்கப்பட்டது. இதன் முதல் கலெக்டராக இருந்தவர் கிண்டர்ஸ்ல். அதன் பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து  1792ம் ஆண்டு ஏப்ரல் 4ம் தேதி திருப்பத்தூர் சேலம் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. அம்மாவட்ட கலெக்டராக கேப்டன் அலெக்ஸாண்டர் ரீட் பொறுப்பேற்றார். அப்போது திருப்பத்தூர் சேலம் மாவட்டத்தின் தலைநகராக இருந்தது.

சென்னை மாகாணத்தின் கவர்னராக இருந்த சர் தாமஸ் மன்றோ, திருப்பத்தூரில் வருவாய்த்துறை அலுவலராக பணியாற்றி, பின்னர் சென்னை கவர்னராக சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அதையடுத்து 1803 பிப்ரவரி 19ம் தேதி திருப்பத்தூர் பகுதி சித்தூரை தலைமையிடமாக கொண்டு இயங்கிய வடஆற்காடு மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. அங்கு காக்பர்ன் கலெக்டராக இருந்தார். 1808ல் மீண்டும் திருப்பத்தூர் சேலம் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. இது வடாற்காடு மாவட்டம் மறுசீரமைப்பு செய்யப்படும் வரை நீடித்தது. அப்போதைய சேலம் மாவட்டத்தில் ஓசூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், ஊத்தங்கரை, சேலம், ஆத்தூர், நாமக்கல், திருச்செங்கோடு தாலுகாக்கள் அடங்கியிருந்தன. திருப்பத்தூர் தாலுகாவின் 1901ம் ஆண்டு கணக்கின்படி மக்கள் தொகை 2,05,986 பேர். இவர்களில் 10,263 பேர் எழுத படிக்க தெரிந்தவர்கள்.

திருப்பத்தூர், வாணியம்பாடி என இரண்டு நகரங்களுடன்539 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுடன் விளங்கியது. அதையடுத்து 1911 ஏப்ரல் 1ம் தேதி வடஆற்காடு மாவட்டம் மறுசீரமைக்கப்பிற்குள்ளாகிறது. வேலூர், திருப்பத்தார், திருவண்ணாமலை ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய வடஆற்காடு மாவட்டம் உருவானது.1921ல் திருப்பத்தூர் சப்கலெக்டராக இருந்த மேனன் பிறகு நாடு சுதந்திரமடைந்த உடன் முதல் வெளியுறவுத்துறை செயலாளராக உயர்ந்தார். இந்தியாவின் முதல் ஐஏஎஸ் அதிகாரியான அன்னா ஜார்ஜ் திருப்பத்தூரில்(1953-1955), தமிழகத்தின் முதல் பெண் தலைமைச் செயலாளர் லட்சுமிபிரானேஷ்(1970-72), பிரதமரின் முதன்மை செயலாளராக இருந்த டி.வி.சோமநாதன்(1989-90) ஆகியோரும் திருப்பத்துரில் சப்கலெக்டராக இருந்தவர்கள். இத்தகைய வரலாற்று பின்னணியுடன் தன்பெருமை மறந்த நிலையில் இருந்த திருப்பத்தூர் மாவட்டம் இன்று மீண்டும் பிறப்பெடுக்கிறது.

வரலாற்று பகுதியிலும் திருப்பத்தூருக்கு தனி முக்கியத்துவம் இருந்திருக்க வேண்டும் என்ற கருத்தும் இதற்கு உண்டு. காரணம் இப்பகுதியில் அதிகளவில் கிடைக்கும் நடுகற்கள் தான் இதற்கு வலு சேர்க்கிறது. இப்படி பல சிறப்புக்களை வரலாறு, சீதோஷ்ணநிலை, பொருளாதாரம் என்று இருந்த திருப்பத்தூர். தனி மாவட்டமாக தமிழகத்தில் ஆங்கிலேயர் காலத்தில் மரியாதைக்குரிய இடமாக பார்க்கப்பட்ட திருப்பத்தூர் தற்போது தமிழக அரசால் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டு அந்த மாவட்டம் நவம்பர் 28ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்க உள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் என்னென்ன?

திருப்பத்தூர் மாவட்டத்தின் மொத்த பரப்பளவு 1797.92 சதுர கிலோ மீட்டர். மொத்த மக்கள் தொகை 11,11,812 ஆகும் இதில் 195 வருவாய் கிராமங்களும் 15 பிர்க்காக்களும், திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர் என 4 நகராட்சிகளும், உதயேந்திரம், நாட்றம்பள்ளி, ஆலங்காயம் என 3 பேரூராட்சிகளும் 208 கிராம ஊராட்சிகளும்  உள்ள மாவட்டமாகும். இதில் திருப்பத்தூர், வாணியம்பாடி, நாட்றம்பள்ளி, ஆம்பூர், நான்கு தாலுகாக்கள் அடங்கியுள்ளன.

திருப்பத்தூர் புதிய மாவட்டத்தில்  திருப்பத்தூர், கந்திலி, ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, ஆலங்காயம், மாதனூர், பேரணாம்பட்டு(பகுதி) என 7 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன.மேலும் 4 தாலுகா அரசு மருத்துவமனைகளும் 44 ஆரம்ப சுகாதார மருத்துவமனைகளும் உள்ளன. இதில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாக உருவெடுக்கிறது. தனியார் மற்றும் அரசு கலைக் கல்லூரிகள் என இந்த மாவட்டத்தில் 36 கல்லூரிகள் உள்ளன. அதேபோல திருப்பத்தூர் வாணியம்பாடி நாட்றம்பள்ளி ஆம்பூர் 4 சட்டமன்ற தொகுதிகளில் 1084 அரசு மற்றும் நிதியுதவி பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. மேலும் இந்த புதிய மாவட்டத்தின் வேளாண் சாகுபடி பரப்பு 96 ஆயிரத்து 156 ஏக்கர். மொத்த வாக்காளர்கள் 11 லட்சத்து 94 ஆயிரத்து 614 பேர். திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர் 4 தொகுதிகள் உள்ளன.

தமிழகத்தின் நீராதாரம் பெரும்பாலும்  வடகிழக்கு பருவமழையை நம்பியே இருக்கும். ஆனால், திருப்பத்தூரில் தென்மேற்கு  பருவமழையே எப்போதும் கைகொடுக்கும். இதுதான் இப்பகுதியில் பிரதான  நீராதாரமாக இருக்கிறது. இதற்கு காரணம் கிழக்குத்தொடர்ச்சி மலைகளே. வேலூருக்கு  வேறு ஒரு பெயர் உண்டு. வெயிலூர் என்று எல்லோரும் வேலூர் மாவட்டத்தை  அழைப்பார்கள், ஆனால், அப்படிப்பட்ட மாவட்டத்தின் மேற்கு பகுதியில்  அமைந்துள்ள திருப்பத்தூரில் ஆண்டின் 8 மாதங்கள் இதமான சீதோஷ்ண நிைலயே  இருக்கும். அதற்கு காரணம் திருப்பத்தூரை அரணாக பாவிக்கும் ஜவ்வாது மலையின்  எழிலும், ஏலகிரி மலையும் தான் காரணம்.

இந்த சிறப்புமிகு திருப்பத்தூர் மாவட்டம் தனியாக பிரிக்கப்பட்டு நிர்வாக ரீதியாக செயல்படும் நிலையில் இம்மாவட்டத்தில் முறையான அடிப்படை வசதிகள் இல்லை, சுகாதாரமற்ற நிலை, போக்குவரத்துக்கு ஏற்ற சாலைகள் இன்றி பரிதவித்து வருகிறது திருப்பத்தூர். 217 ஆண்டுகளுக்கு பின்னர் மறுபிறப்பெடுக்கும் திருப்பத்தூர் மாவட்டத்தில் தீராபிரச்னைகள் தீரும் என்ற ஏக்கத்தில் உள்ளனர் திருப்பத்துர் மாவட்ட மக்கள்.

Tags : district ,Tirupattur ,loss ,217Years Thirupathur , Thirupathur ,vellore, ranipet, New district
× RELATED திருப்பத்தூர் மாவட்ட வனப்பகுதியில்...