×

10 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த கோவை மனோகரனின் தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை

சென்னை: 10 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த  மனோகரனின் தூக்கு தண்டனைக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. டிசம்பர் 2ம் தேதி தூக்கிலிடுமாறு கோவை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. கருணை மனு அளிக்க அவகாசம் இல்லை என மனோகரன் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் 4 வாரத்தில் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை ரங்கே கவுடர் வீதியை சேர்ந்தவர் ரஞ்சித். ஜவுளிக்கடை உரிமையாளர்.

இவரது 11 வயது மகள், மகன் ரித்திக் (8) ஆகிய இருவரும் கடந்த 2010 அக்டோபர் 29ம் தேதி பள்ளி சென்றபோது, வேன் டிரைவர் மோகன்ராஜ், கூட்டாளி மனோகரன் ஆகிய இருவரால் கடத்தப்பட்டனர். உடுமலை அருகே சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, வாய்க்காலில் தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்டார். சிறுமியின் தம்பி ரித்திக்கும் வாய்க்காலில் தள்ளப்பட்டு, கொலை செய்யப்பட்டார். இக்கொடூர சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த இரட்டை கொலை தொடர்பாக, வேன் டிரைவர் மோகன்ராஜ், அவரது கூட்டாளி மனோகரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

விசாரணையின்போது கடந்த 2010 ம் ஆண்டு நவம்பர் 9ம்தேதி, குழந்தைகள் கொல்லப்பட்ட இடத்தை காண்பிப்பதற்காக குற்றவாளிகள் இருவரும் சம்பவம் நடந்த இடத்துக்கு போலீஸ் வேனில் அழைத்துச் செல்லப்பட்டனர். அப்போது மோகன்ராஜ், போலீசாரின் கைத்துப்பாக்கியை பிடுங்கி அவர்களை நோக்கி சுட்டார். இதில், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜோதி, முத்துமாலை ஆகியோர் படுகாயம் அடைந்தனர். போலீசார் திருப்பி சுட்டதில் மோகன்ராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார்.

எஞ்சிய குற்றவாளி மனோகரன் மீதான வழக்கு விசாரணை கோவை மாவட்ட செஷன்ஸ் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில், மனோகரனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றமும் தண்டனையை உறுதிசெய்தது. இதன்பின்னர், இவ்வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு சென்றது. இதில் கடந்த ஆகஸ்ட் 1ம்தேதி மனோகரனின் மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இந்நிலையில் கருணை மனு அளிக்க அவகாசம் இல்லை என மனோகரன் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.


Tags : death ,Manoharan ,High Court ,Coimbatore ,Executioner , Manoharan, executioner, Coimbatore, High Court, mercy petition
× RELATED மஞ்சுவிரட்டு அனுமதிக்காக நீதிமன்றம்...