×

கொடைக்கானல் - கும்பக்கரை சாலையில் மீண்டும் மண்சரிவு 10 மலைக்கிராமங்கள் துண்டிப்பு: பொதுமக்கள் கடும் அவதி

கொடைக்கானல்: கொடைக்கானல் - கும்பக்கரை சாலையில் மீண்டும் ஏற்பட்ட மண் சரிவால் 10 மலைக்கிராமங்கள் தனித் தீவாக துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த ஒரு மாதமாக தொடர்மழை பெய்து வருகிறது. அவ்வப்போது காற்றுடன் கனமழையும் பெய்வதால் பிரதான சாலைகளில் மரம் விழுந்தும், மண் சரிவு ஏற்பட்டும், பாறைகள் உருண்டும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த அக். 21, 26ம் தேதிகளில் கனமழை காரணமாக கொடைக்கானல் - அடுக்கம் - கும்பக்கரை சாலையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு, பாறைகள் உருண்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.நேற்று அதிகாலை கொடைக்கானல் பெருமாள்மலை அருகே அடுக்கம் கிராமத்தின் முன்பகுதியில் மீண்டும் மிகப்பெரிய மண்சரிவு ஏற்பட்டு பாறைகள் உருண்டு கிடப்பதால் இருபுறமும் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த சாலையைத்தான் அடுக்கம், பாலமலை, காட்டுப்பள்ளம், தாமரைக்குளம் உள்ளிட்ட 10 மலைக்கிராம மக்கள் பெரியகுளம் சென்று வர பயன்படுத்துகின்றனர்.

இப்பகுதிகளில் விளையும் காய்கறிகள், பழங்களை சந்தைக்கு இந்த வழியாகத்தான் எடுத்து சென்றனர். இந்த சாலை துண்டிக்கப்பட்டுள்ளதால், இப்பகுதி மலைக்கிராமங்கள் வெளியுலகத் தொடர்பின்றி தனித்தீவாக தத்தளிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. மேலும் கொடைக்கானலுக்கு சுற்றுலா வர இச்சாலையும் ஒரு வழியாக உள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள மண் சரிவால், இப்பகுதி மக்கள், விவசாயிகள், மாணவ, மாணவிகள், சுற்றுலாப்பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் செந்தில் கூறுகையில், ‘‘தற்போதைக்கு மண் சரிவு சீரமைக்கப்பட்டு சிறு ரக வாகனங்கள் போக்குவரத்திற்கு ஏற்பாடு செய்யப்படும். முழுவதுமாக  மண் சரிவு அகற்றுவதற்கு ஒரு சில தினங்கள் ஆகும். துரிதமான பணிகள் நடந்து வருகிறது. இந்த சாலையை பொதுமக்களும், சுற்றுலாப்பயணிகளும் மறு அறிவிப்பு வரும் வரை பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது’’ என்றார்.


Tags : Kodaikanal - Kumbakkarai ,road ,hill villages ,Kodaikanal - Kumbakarai , Kodaikanal, Kumbakkarai, Landslide, Hill Villages, Public
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி